Friday, August 30, 2013

மீண்டும் முளைக்கின்றன மறைந்த காவலரண்கள்! நவநீதம்பிள்ளை நாட்டைவிட்டு வெளியேறு முன்னரே!!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு வட பகுதியில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட இராணுவக் காவலரண்கள் மீண்டும் முளை விட ஆரம்பித்துள்ளன. அத்துடன் இராணுவத்தினரும் தமது வழமையான ரோந்து நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் ஆனையிறவுச் சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவப் பதிவுகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வட பகுதிக்கு இரு நாள் பயணமாக வருகை தந்த நவநீதம்பிள்ளை, ஏ-9 பிரதான வீதியூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு சென்று பின் அங்கிருந்து ஏ-35 வீதியூடாக பரந்தனிலிருந்து முல்லைத்தீவுக்கு சென்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், கேப்பாபிலவு ஆகிய பிரதேசங்களுக்கு அவர் வீதியூடாகவே சென்றார்.நவநீதம்பிள்ளையின் இந்தப் பயணத்துக்காக கடந்த திங்கட்கிழமை இரவோடு இரவாக  இராணுவ முகாம்கள், மினி முகாம்கள் என்பன அகற்றப்பட்டன. அத்துடன் சில இராணுவக் காவலரண்கள் உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தன.

ஐ.நா ஆணையாளர் பயணம் செய்த வேளையில் வீதிகளில் இராணுவத்தினர் கடமையிலிருக்கவில்லை. மாறாகப் பொலிஸாரே கடமையிலிருந்தனர். குறிப்பாக ஏ-35 வீதியில் உடையார்கட்டு காளிகோயிலடிப் பகுதியிலுள்ள காவலரண், வள்ளிபுனம் காவலரண், புதுமாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள காவலரண்கள் என்பன அகற்றப்பட்டுப் பின்னர் இப்போது மீண்டும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நவநீதம்பிள்ளையைச் சந்தித்த புதுமாத்தளன் மக்கள், இராணுவம் உங்கள் வருகைக்காக  முகாம்களை அகற்றியுள்ளது. அந்த முகாம்களுக்கு தாம் மீண்டும் வருவோம் என்று எம்மிடம் கூறிச் சென்றனர் எனச் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.