Thursday, March 14, 2013

இனி, சிறீலங்காவைக் கையாள்வது இந்தியாவுக்கு இலகுவாக இருக்காது!


அடுக்கடுக்கான போர்க்குற்ற ஆதாரங்களை இலங்கை அரசின் மீது அள்ளித் தெளித்த பின்னாலும், சர்வதேச சமூகத்தின் இலங்கை மீதான கொள்கையோ, பார்வைகளோ மாறவில்லை. சர்வதேச அழுத்தங்களால் ஏதாவது நல்லது நடக்குமா என ஈழத் தமிழ்ச் சமூகம் திணறி நிற்கும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரனிடம் இணைய வழி உரையாடல் நடத்தினேன்...
கேள்வி: ''ஐ.நா-வின் 22-வது மனித உரிமை அமர்வுகள் ஜெனிவாவில் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் ஈழ மக்களுக்கு நன்மை பயக்குமா?
பதில்:  ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சிறீலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நிறைவேறவே செய்யும் என்றாலும், அந்தத் தீர்மானம் சிறீலங்கா அரசுக்கு எதிராக, கடுமையானதாக இருக்குமா என்பதே நாங்கள் கேட்க விரும்பும் கேள்வி. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட, தமிழர் அமைப்புகள் மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் என உலகெங்கிலும் உள்ள மனித உரிமையாளர்களும் ஈழ ஆதரவாளர்களும் கோருவது, பக்கச் சார்பற்ற சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்பதுதான். பாலச்சந்திரன் உணவு கொடுத்து, பின்னர் கொல்லப்பட்டது தொடர்பான ஆதாரங்களோடு அடுத்தடுத்து வந்துகொண்டு இருக்கும் ஆதாரங்களும் அதைத்தான் வலியுறுத்துகின்றன. நாம் அமெரிக்காவிடம் எதிர்பார்ப்பதும் அதைத்தான்!
கேள்வி: போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது வரை இனப்படுகொலை என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்த எந்த அரசும் தயாராக இல்லையே?
பதில்: முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டது தமிழர் மீதான இன அழிப்பேதான். இந்த உண்மையினை உணர்ந்திருந்தும் அதனை ஏற்றுக்கொள்வதால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள் காரணமாக, அல்லது இலங்கை தொடர்பாக ஏற்படும் வர்த்தக இழப்புகள் காரணமாக இதனை ஏற்றுக்கொள்வதில் அனைத்துலக அரசுகளிடமும் தயக்கம் இருக்கிறது!
கேள்வி: வன்னித் தமிழ் மக்களின் தற்போதைய நிலை எப்படி உள்ளது? அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
பதில்: தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார நிலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. முன்னர், புலிகள் அமைப்பு இருந்தபோது, அது மக்களுக்கு வேலியாக இருந்தது. இப்போது ஓநாய்களுக்கு நடுவே கிடைக்குள் சிக்கிக்கொண்ட ஆடுகளைப் போல உள்ளார்கள் ஈழ மக்கள். ஒவ்வொரு குடும்பமும் காணாமல் போன யாரோ ஒருவரைத் தேடி அலைகிறது. பறிக்கப்பட்ட நிலங்கள் அவர்களுக்கு மீண்டும் கையளிக்கப்படவில்லை. வட பகுதி தமிழ் மக்கள் பாரிய மனித உரிமை அனர்த்தங்களை இன்னமும் எதிர்கொள்கிறார்கள்!
கேள்வி: பாலச்சந்திரன் கொலை தொடர்பான புதிய ஆதாரங்கள் வந்துள்ள நிலையில், பிரபாகரன் அவர்களின் மனைவி, மகள் பற்றிய தகவல்கள் ஏதும் உண்டா?
பதில்: எமது தேசியத் தலைவர் பிரபாகரனின் குடும்பம் தொடர்பான எவ்விதத் தகவல்களும் என்னிடம் இல்லை!
கேள்வி:  கேலம் மெக்ரேயின் 'போர் தவிர்ப்பு வலயம்’ ஆவணப்படத்தைப் பார்த்தீர்களா?
பதில்: ஈழ மக்கள் மீது இலங்கை அரசு நடத்தி முடித்த போரை சாட்சியமற்ற போர் என்றார்கள். முதலில் சிறீலங்காவின் கொலைக்களங்கள், இப்போது 'போர் தவிர்ப்பு வலயம்’ போன்ற ஆவணப்படங்கள் வெளிவந்திருக்காவிட்டால், வன்னி மக்கள் மீதான போர் ஓர் இனப்படுகொலை போராக எப்படி முன்னெடுக்கப்பட்டது என்பதனையும், போரின் பின்னர் எப்படிப் பல்லாயிரம் போராளிகளும் அவர்களின் குடும்பங்களும் அழித்தொழிக்கப்பட்டார்கள் என்பதும் வெளியுலகுக்குத் தெரியாமல் போயிருக்கும். ஏனென்றால், வன்னியில் தான் உருவாக்கிய பிரமாண்டமான மரணக் குழியை மண் மூடிப் புதைத்துவிடலாம் என சிறீலங்கா அரசு நினைத்தது. அதைச் சர்வதேச ஊடகவியலாளர்கள் நொறுக்கியிருக்கிறார்கள்!
கேள்வி: போர் தவிர்ப்பு வலயம்’ ஆவணப்படத்தைப் போலியானது எனச் சொல்லி ஐ.நா-வில் அதைத் திரையிட இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவிக்கிறதே?
பதில்: முன்னர் போரின் இடையில் சிக்கி சிறுவன் பாலச்சந்திரன் இறந்தார் என்றது சிறீலங்கா அரசு. இப்போது அது பொய்யென்று ஆகியிருக்கிறது. கேணல் ரமேஷ், இசைப்பிரியா என எத்தனையோ கொலைகளுக்கான ஆவணங்கள் வெளியாகிவிட்டன. சிறீலங்கா சொல்லும் பொய்கள் நீண்ட நாட்களுக்கு சர்வதேசத்திடம் எடுபடாது!
கேள்வி: புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்று கேலம் மெக்ரே சொல்கிறார். அவருடைய படத்திலும் அந்தக் குற்றச்சாட்டு உள்ளது. புலிகள் மீதான இந்தக் குற்றச்சாட்டை எப்படி எதிர்கொள்ளப் போகின்றீர்கள்?
பதில்: கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்ட வேண்டும். அல்லது புலிகளும் சம அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் எனச் சொல்ல வேண்டும்’ என்று ஐ.நா-வின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கு சில முக்கிய நபர்கள் மெயில் மூலம் கேட்டுக்கொண்டார்கள் என்பதை சார்ள்ஸ் பெற்றி தன் அறிக்கையில் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியதை, உங்களுக்கும் இதுபோன்று கேள்வி எழுப்புவோருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். போர் நெறிமுறைகளை எல்லாம் மீறி முன்னெடுக்கப்பட்ட பேரினவாதப் போரில் போரைத் தொடுத்தவர்களையும், அதை எதிர்கொண்ட தரப்பையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. ஆனாலும், நாம் முழுமையான சுயாதீனமான போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பு தொடர்பான ஓர் அனைத்துலக விசாரணையைக் கோருகிறோம். அப்படி ஒன்று முன்னெடுக்கப்படும்... அதில் உண்மைகள் மட்டுமே பேசும்... பேசப்படும்!
கேள்வி: இலங்கை தன்னைத்தானே விசாரிக்க அமைத்துக்கொண்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் (LLRC) பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் கோரிக்கையாக உள்ளது. இந்தியாவோ அதையும் இலங்கையின் சம்மதத்துடன் செய்ய வேண்டும் என்கிறது. இந்த நாடுகளின் இலங்கை தொடர்பான நிலைப்பாடுகள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றனவா?
பதில்: அரசுகளின் முடிவுகள் தர்மத்தின் சக்கரத்தில் சுழல்பவை அல்ல. அவை தமது சொந்த நலன்கள் என்ற அடிப்படையிலேயே செயற்படுகின்றன. பாதிக்கப்பட்ட நாமோ நீதியின் அடிப்படையில் இயங்கும் மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து, நீதிக்கான நமது குரலை ஒலிக்கச் செய்கிறோம். உலகின் பலம் மிக்க அரசுகளின் நலன்களும் ஈழத் தமிழர்களின் நலன்களும் ஒரே கோட்டில் சந்திக்கும் வாய்ப்பைக் காலம் உருவாக்கும் என உறுதியாக நம்பு கிறோம்!
கேள்வி: நவம்பரில் கொழும்பில் காமன் வெல்த் மாநாட்டை நடத்துவதில் இந்தியாவும் இலங்கையும் உறுதியாக இருக்கிறதே?
பதில்: கொழும்பில் காமன் வெல்த் மாநாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்புகள் வலுவடைந்து வருகின்றன. கனடா தன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. சிறீலங்காவைக் கட்டுப்படுத்த விரும்பும் அரசு களின் மாநாடு இது. கொழும்பைத் தமது ஆளுமைக்குள் கொண்டுவருவதற்கு இந்த மாநாட்டைப் பயன்படுத்த இந்தியா உட்பட ஏனைய நாடுகள் முயலக்கூடும். நீதியின் அடிப்படையில் செயல்படக்கூடிய நண்பர்களால் இந்த விடயத்தில் கூடுதல் பங்கினை ஆற்ற முடியும். இந்தியாவின் முடிவுகளை மாற்றும் ஆற்றல் தமிழகத்துக்கு இருக்கும்பட்சத்தில், மாநாடு கொழும்பில் நடைபெறாது தடுக்கவும் முடியும்!
கேள்வி:  இலங்கை... இந்தியாவின் நட்பு நாடு என மீண்டும் மீண்டும் சொல்கிறதே இந்தியா. நீங்கள் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்: வரலாற்றுரீதியாகப் பார்க்கும்போது இந்தியாவை ஈழத் தமிழர்கள் நட்பு நாடாகப் பார்த்தார்களே அன்றி, சிங்கள அரசும் சிங்கள மக்களும் அவ்வாறு பார்க்கவில்லை. சிங்களவர்கள் இந்தியாவை ஒரு ஆக்கிரமிப்பு நாடாகவே பார்க்கிறார்கள். ஈழத் தமிழர்கள் மீதான சிங்களர்களின் வெறுப்பில் ஒரு பாதி இந்திய வெறுப்பு உணர்வும் உண்டு என்பதை இந்தியா நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தியா சிறீலங்கா அரசைக் கையாள்வதன் ஊடாக, அந்தத் தீவைக் கையாளும் அணுகுமுறையைக் கொண்டுள்ளது. சிறீலங்காவை அரவணைத்துக் காரியம் பார்க்கலாம் என்று இந்தியா நினைக்கக்கூடும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் உறுதியான ஆதரவு சிறீலங்காவுக்குத் தேவைப்பட்டது. இதனால், இந்தியாவிடம் பணிவதுபோல சிறீலங்கா தலைவர்கள் நடித்தனர். இப்போது இந்தத் தேவை சிறீலங்காவுக்கு இல்லை. இதனால், சிறீலங்காவைக் கையாள்வது இந்தியாவுக்கு இலகுவாக இருக்காது. சிங்களர்களின் இந்திய வெறுப்பு உணர்வை இன்னமும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்ளவில்லை!

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.