Hi Friend, Get paid 72 times per day!

My Advertising Pays, It Pays To Be On M.A.P!

Monday, June 25, 2012

போராட்டத்தில் பங்களித்துவிட்டு, அரசியல் தீர்வில் பங்கு கோருங்கள். மனோ கணேசன்

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும்போது அதில் தமக்கும் பங்கு வேண்டும் என்றும், தாமும் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் என்றும் உரிமை கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தீர்வை தேடி தமிழ் கட்சிகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடத்தும் போராட்டங்களிலும் பங்கு பெற வேண்டும். உண்மையில் தமிழ் பேசும் மக்களை அடக்கியாள நினைக்கும் மேலாதிக்கவாதத்திற்கு எதிராக போராட முஸ்லிம் மக்கள் தயாராக இருக்கின்றார்கள்.

 ஆனால் முஸ்லிம் தலைவர்கள்தான் தயங்கி நிற்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உபதலைவரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் ஆன வேலணை வேணியனின் ஏற்பாட்டில் கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் நேற்று நடைபெற்ற, கவியரசு கண்ணதாசன் நினைவு விழாவில் பிரதம அதியாக கலந்து கொண்ட மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

"இங்கே உரையாற்றிய நண்பர் அசாத் சாலி அவர்கள், முஸ்லீம்களும், தமிழர்களும் பெரும்பான்மை இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் எதிராக இணைந்து போராட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மூதூரில் இஸ்லாமிய வணக்க ஸ்தலம் ஒன்று இன்றைய தினத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும் சொன்னார். இன்னும் பல இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேரின மதவாதம் தலையெடுத்துள்ளது என்றும் சொன்னார். உண்மைதான், மூதூர் இருக்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள, தமிழ் இந்து வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட வெந்நீர் ஊற்று கிணறுகளும் அபகரிக்கப்பட்டு இன்று அந்த இடம் பெளத்த புனித பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய இனவாத, மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராகத்தான் தமிழர்களாகிய நாங்கள் போராடுகிறோம். எத்துனை பின்னடைவுகள் ஏற்பட்டாலும் நாம் மனம் தளராமல் தொடர்ந்து போராடுகிறோம். தமிழ் கட்சிகள் மத்தியில் எத்துனை அரசியல் சித்து விளையாட்டுகள் இருந்தாலும், அவற்றை தவிர்த்துகொண்டும், கணிசமான தமிழ் கட்சிகளை ஒன்று சேர்ந்துக்கொண்டும் இன்று நாம் ஜனநாயக போராட்டங்களை நடத்துகின்றோம். எம்முடன் தென்னிலங்கை சிங்கள முற்போக்கு, ஜனநாயக சக்திகளையும் இணைத்துகொண்டுள்ளோம்.

இந்த போராட்டங்களுடன் இணைந்துகொள்ளும்படி நாம் உங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இது தொடர்பில் முஸ்லிம் கட்சிகள் முடிவு எடுக்க வேண்டிய வேளை இன்று வந்து விட்டது. இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிராக கொண்டு நடத்தப்படும் பெரும்பான்மை மத-இனவாத சதி திட்டங்கள் இன்று நாடு முழுவதும் சத்தமில்லாமல் நடைபெறுகின்றன. இவற்றிக்கு எதிராக நீங்கள் முஸ்லிம் மக்களை அணிதிரட்டி போராட வேண்டும்.

ஏறக்குறைய எல்லா முஸ்லிம் தலைவர்களும் அரசாங்கத்திற்கு உள்ளேதான் இருக்கிறீர்கள். ஆகவே அரசாங்கம் கோபித்துகொள்ளும் என்று அரசுக்கு வலிக்காமல் போராட வேண்டும் என்றால் அது நடக்காத காரியம். பதவிகள், பட்டங்கள், வரப்பிரசாதங்கள் பறிபோகும் என நீங்கள் அச்சப்படுவீர்கள் என்றால் அது இல்லாத ஊருக்கு வழி தேடும் கதையாகும். எனக்கு இன்று கட்சி தலைவர் பதவி ஒன்றுதான் இருக்கிறது. ஆனால் பதவி, பட்டங்களில் இருக்கும் எத்தனையோ பேரைவிட நான் எனது கட்சியை திடமாக வழி நடத்துவதாகவும், தமிழ் பேசும் மக்கள் என்மீது மிகுந்த பற்று கொண்டு இருப்பதாகவும் நான் உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால் நாம் அநீதிக்கு எதிராக துணிந்து நிற்கிறோம்.

ஜெனீவா தீர்மானம் வந்த நேரத்தில், முஸ்லிம் தலைவர்கள் அப்பாவி முஸ்லிம் மக்களை தவறாக வழி நடத்தினார்கள். அவர்களை பெரும் தொகையில் கிழக்கில் இருந்து கொழும்புக்கு அழைத்து வந்து தங்கள் ராஜ விசுவாசத்தை காட்டினார்கள். அப்பாவி முஸ்லிம் சகோதரர்களை கொண்டு தேசபக்தி கோஷங்கள் போட வைத்தார்கள். ஆனால் அது நடந்த இரண்டே வாரங்களில் தேசபக்தி தம்புள்ளையில் கொழுந்து விட்டு எரிந்ததை நாம் பார்த்தோம். இப்போது இன்னமும் பார்க்கிறோம்.

உண்மையில் ஜெனீவா தீர்மானம் இலங்கை தேசத்திற்கு எதிரானது அல்ல. அது தவறான வழியில் செல்லும் இலங்கை அரசாங்கத்தை நெறிப்படுத்துவதாகும். அந்த தீர்மானம் மூலமாக சர்வதேசம், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல் செய்ய வேண்டும் என்றுதான் சொல்கிறது. அதுதான் இன்றைய சர்வதேச அழுத்தம். அந்த கற்றுக்கொண்ட பாடங்கள் சிபாரிசுகளில் மனித உரிமைகள், மத சுதந்திரம், காணி உரிமை, தேசிய பிரச்சினைக்கு அதிகாரம் பகிரும் அரசியல் தீர்வு ஆகியவை பற்றி குறைந்தபட்சமாகவாவது சொல்லப்பட்டுள்ளன.

இலட்சக்கணக்கான தமிழ் மக்களை பலிகொடுத்துதான் இந்த சர்வதேச அழுத்தத்தை இன்று தமிழர்களாகிய நாம் உருவாக்கி இருக்கின்றோம் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த சர்வதேச அழுத்தம் தரும் நன்மைகள் முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்கும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இணைந்து போராடுவோம் என மேடைகளில் பேசி பிரயோஜனம் இல்லை. அதிகார பகிர்வு, மண்ணுரிமை ஆகியவற்றிற்கான தமிழ் கட்சிகளின் ஜனநாயக போராட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. வாருங்கள், வந்து எங்கள் போராட்டங்களுடன் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். முஸ்லிம் மக்களின் காணி-நிலம் கிழக்கில் பறிக்கப்படுவது, முஸ்லிம் பகுதிகளுக்கு அரசியல் அதிகாரம் பகிரப்பட வேண்டியது மற்றும் மத சுதந்திரம் தொடர்பில் நீங்களும் போராடுங்கள். நாம் சேர்ந்து போராடுவோம். போராட்டத்தில் பங்களித்துவிட்டு, அரசியல் தீர்வில் பங்கு கோருங்கள்.

சர்வதேச அழுத்தத்திற்கு எதிராக அல்ல, இனவாதத்திற்கு எதிராகத்தான் முஸ்லிம் மக்கள் போராட வேண்டும். கொழும்பில் வாழும் முஸ்லிம் மக்கள் என்னை விரும்புகிறார்கள். ஏனென்றால் நான் முஸ்லிம்களின் நண்பன். நாடு முழுக்க வாழும் முஸ்லிம் சகோதரர்களின் மனவுணர்வும் எனக்கு தெரியும். ஜனநாயகரீதியாக போராட நாங்கள் தயார். ஆனால் எங்கள் தலைவர்கள் தயார் இல்லை என அவர்கள் என்னிடம் உருக்கமாக சொல்கிறார்கள். அநீதிக்கு எதிராக எழுந்து நிற்கும் இலங்கை முஸ்லிம் தேசிய தலைவர்களை எல்லாம்வல்ல அல்லா அனுப்பி வைக்க வேண்டும். அது நீங்களாகவும் இருக்கலாம்." என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.