Monday, June 25, 2012

வடக்கு நிலை தொடர்பாக ஜெனிவாவில் சிறிலங்கா சமர்ப்பித்த தவறான புள்ளிவிபரங்கள் அம்பலம்

சிறிலங்கா அரசாங்கம் வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பித்துள்ள புள்ளிவிபரங்களின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

கடந்தவாரம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20வது அமர்வில் சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கும் மனிசா குணசேகர அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

இந்த அறிக்கையில் வடக்கில் சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ்.குடாநாட்டில் படையினரின் எண்ணிக்கை 20 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டதாகவும், உயர் பாதுகாப்பு வலயங்களும் 40 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இதற்கு மாறான புள்ளிவிபரங்களை சிறிலங்கா படைகளின் யாழ்.தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க வெளியிட்டுள்ளதால், ஜெனிவாவில் சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பித்த தகவல்கள் உண்மையானவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறிலங்கா அரச ஊடகம் ஒன்றில் நேற்று வெளியாகியுள்ள, சிறிலங்கா இராணுவத்தின் யாழ்.படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவின் செவ்வியில்,

“யாழ் குடாநாட்டில் முன்னர் 27 ஆயிரம் படையினர் நிலை கொண்டிருந்தனர்.

தற்போது வழமைநிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை 15,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டில் முன்னர் உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த 3741.09 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆகப் பிந்திய தரவுகளின்படி, சிறிலங்காவின் ஏனைய மாகாணங்களில் உள்ளதைப் போல 6381 ஏக்கர் நிலப்பரப்பே, இராணுவப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.“ என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயம் 40 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள போதும், மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவின் புள்ளிவிபரப்படி 37 வீத நிலப்பரப்பே விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டில் 20 ஆயிரம் படையினரே நிலை கொண்டுள்ளதாக ஜெனிவா அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதேவேளை, மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, 15,600 படையினரே நிலை கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதனால், சிறிலங்கா அரசாங்கம் வடக்கின் பாதுகாப்பு நிலை தொடர்பான தவறான புள்ளிவிபரங்களைக் கொடுத்து அனைத்துலக சமூகத்தை ஏமாற்ற முனைகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்தவாரம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த போது, மீள்குடியமர்த்தப்படாதுள்ளோர் பற்றிய தவறான தகவல்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.