Hi Friend, Get paid 72 times per day!

My Advertising Pays, It Pays To Be On M.A.P!

Tuesday, April 03, 2012

பிரேரணைகள் வரலாம் தீர்வு வராது - இதயச்சந்திரன்

இலங்கை அரசின் 54 நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போது, நாட்டின் இறைமையைக் காப்பாற்ற சிங்கள மக்களை அணி திரட்டுகிறது மகிந்த அரசு. நாட்டின் வினைத்திறன் அற்ற ஆட்சி முறைமையை மறைப்பதற்கு, பேரினவாதக் கோஷங்கள் உதவுமென்பதே மகிந்த சகோதரர்களின் கணிப்பு.

நட்டத்தில் ஓடும் ஸ்ரீலங்கன் ஏயர் லைன்சின் கடன் நெருக்கடியை தற்காலிகமாகத் தீர்ப்பதற்கு, ஐக்கிய அரபுக் குடியரசின் வங்கி ஒன்றிடம் கடன் கேட்டது அந்நிறுவனம். அரசு பொறுப்பேற்றால், அதனை வழங்குவதாகக் கூறியது அந்த வங்கி. ரூபாய் நாணயத்தின் பெறுமதி மிக மோசமாக வீழ்ச்சியடைவதால், தடுமாறும் திறைசேரி, இதற்கு ஒத்துக் கொள்ளுமா என்று தெரியவில்லை. மேலும், ஏயர் லங்கா விமானங்களை நிரப்பும் ஈழத் தமிழர்கள் இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இவை தவிர, புலம்பெயர் தமிழர்கள் கொழும்பில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை, நாட்டில் உருவாகும் பொருளாதார நெருக்கடிகள் உணர்த்துகின்றன. அதேவேளை மேற்குலகம் பிரயோகிக்க முனையும் அழுத்தங்கள், நேரடியான பொருளாதாரத் தடைகளாக அமையாவிட்டாலும், சர்வதேச நிதி நிறுவனங்களுடாக மறைமுகமான தடைகளை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு.

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம், வெற்றி-தோல்விகளுக்கு அப்பால், எத்தகைய விளைவுகளை உருவாக்குமென பார்க்கவேண்டும். இதில் எது நடந்தாலும், மேற்குலகின் தொடர் அழுத்தங்கள், தடையின்றி முன்னெடுக்கப்படுமென எதிர்வு கூறலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி.பிளஸ். வரிச் சலுகையை இலங்கை இழுத்திருக்கும் நிலையில், அமெரிக்காவின் வரிச் சலுகையானது பேரம் பேசும் ஆயுதமாகப் பாவிக்கப்படும் அபாயமும் உண்டு.

அத்தோடு ஈரான் மீதான தடைகள் ஊடாகபாதிப்படையும் ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, அந்நாட்டுடனான வர்த்தகத்தில், மட்டுப் படுத்தப்பட்ட விதி விலக்கினை அளிக்க அமெரிக்கா முன்வந்தாலும், இலங்கையும் அதில் உள்ளடக்கப் படுமா வென்று தெரியவில்லை.

விமல் வீரவன்ச போன்றோர் கூகுளை தடை செய்வோம், அமெரிக்கப் பொருட்களை புறக்கணிப்போம் என்று மண்ணில் புரண்டு ஒப்பாரி வைத்தாலும், ஒவ்வொரு மாதமும் ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் மசகு எண்ணைக்கு அமெரிக்க டாலரில் தான் பணம் செலுத்த வேண்டும்.

பெல்ஜிய நிறுவனமானது, 30 ஈரானிய வங்கிகளுடனான நிதிப் பரிமாற்ற உறவினைத் துண்டித்துள்ளதால், இலங்கைக்கான சகல பரிவர்த்தனை வாசல்களும் மூடப்பட்டு விட்டதைஅமைச்சர் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தலை குணதாச அமரசேகராவும் புரிந்து கொள்ளவில்லைப் போல் தெரிகிறது.

தமது அதிகாரக் கதிரையும், பேரினவாதக்கருத்தியலும், தக்கவைக்கப் படவேண்டுமாயின், மஹிந்த ஆட்சி நீடிக்க வேண்டுமென்பதே இவர்களின் விருப்பம். ஆனால் இவர்களின் விருப்பத்திற்கேற்வாறு உலக அரசியல் நகர்வதில்லை என்பதை சிங்களத்தின் கீழ் மட்டத் தலைவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், தமிழ் நாட்டு வெப்பம் தாளாமல், பிரேரணையை ஆதரிப்போம் என பொடிவைத்துப் பேசியதும், இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு மாறிவிட்டார்கள் இந்த பேரினவாதக் கருத்தியல் கூட்டணியினர் அத்தோடு நாட்டின் இறைமையைக் காப்பாற்ற, இந்திய விஸ்தரிப்பு வாதத்தை மறுபடியும் தூக்கிப் பிடிக்க ஆரம்பித்துள்ளார் சோமவன்ச அமரசேகர.

அண்மைக் காலமாக வடக்கு மக்களின் அவல நிலை குறித்து, நாடாளுமன்றில் அடிக்கடி பேசிவந்த ஜே.வி.பி.யினர் பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு ஆபத்து என்றவுடன், தமது சிவப்புச் சட்டைகளை கழற்றி எறிந்து, தமிழின விரோதப் போக்குகளை முன்னெடுக்க தொடங்கி விட்டனர்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த சிங்களப்பேரினவாத நாணயத்தின் மறுபக்கமான இரணில் விக்கிரமசிங்கவும், தமிழ் மக்களின் உரிமை குறித்தான அடிப்படைக் கோட்பாட்டில் உறுதியாகவுள்ள தமிழ் சிவில் சமூகத்தினரை கேலி செய்ய ஆரம்பித்த விவகாரம் கவனிக்கத்தக்கது.

ஆகவே ஆட்சி மாற்றமொன்றின் ஊடாக அதிகார நாற்காலி தனக்கு கிடைக்கலாமென கற்பிதம் கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சி, அமெரிக்கப் பிரேரணையில், இந்தியா போன்று நழுவல் போக்கினை கடைப் பிடிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

‘இறைமைக்கு பேராபத்து’ என்கிற மகிந்தரின் முழக்கத்தால். தென்னிலங்கையில் அரசிற்கான அதரவு அதிகரிக்கும் அதேவேளை. மார்ச் 23க்குப் பின்னர், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்கள். மறுபடியும் அரசிற்கெதிராக கிளர்ந்தெழுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அமெரிக்கப் பிரேரணைக்கு இந்தியா நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கினால், இந்திய முதலீடுகளுக் கெதிரான போராட்டங்களை அரசோடு சேர்ந்தியங்கும் தேசப்பற்றுள்ள இயக்கங்களும், ஜே.வி.பியும் முன்னெடுக்கக் கூடிய சூழல் ஏற்படலாம்.

அனேகமாக, அரசிற்கெதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் போராட்டங்கள், திசைமாறி, அமெரிக்க, இந்திய எதிர்ப்பு போராட்டங்களாக புதிய பரிமாணத்தை எட்டக்கூடிய வாய்ப்புக்களே அதிகமாகக் காணப்படுகின்றது. அதற்கான அரச ஆதரவும் பலமானதாகவேஇருக்கும்.

அதே வேளை. அமெரிக்கப் பிரேரணை வெற்றியடைந்தால், அடுத்த கட்டமாக என்ன விதமாக நகர்வினை மனித உரிமைப் பேரவையோ அல்லது மேற்குலகோ மேற்கொள்ள முயற்சிக்கு மென்பதை ஆராய வேண்டும்.

பரிந்துரைகள் நிறைவேற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க பேரவை முயலும் போது. அதனை சிங்களம் நிராகரித்தால், அடுத்த கட்ட நகர்வு எதுவாகவிருக்கும் என்பது முக்கியமான விவகாரமாகும்.

அடுத்த 20வது கூட்டத் தொடரில், சிங்களத்தின் மறுப்புக் குறித்து விவாதிக்கப்படுவதோடு, ஐ.நா சபை நிபுணர் குழுவின் அறிக்கை முன்வைக்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுகிறது.

இருப்பினும் இலங்கை விவகாரம் குறித்தான மேற்குலகின் நிகழ்ச்சி நிரலில், ஒருவிதமான மென்போக்கு நிலை காணப்படுவதை நாம் அவதானிக்க வேண்டும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.

Hi Friend, Get paid 72 times per day!

My Advertising Pays, It Pays To Be On M.A.P!