Tuesday, March 13, 2012

ஐ.நா. தீர்மானம் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

ஐ.நா. மனித உரிமைக் குழுவில் எந்தத் தனிநாட்டுக்கு எதிராகவும் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் இராசபக்சேவிற்குத் துணைநின்றது இந்திய அரசுதான். எனவேதான் தனது கூட்டாளிக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்க இந்தியா மறுக்கிறது. பிரணாப் முகர்ஜி கூறியுள்ள காரணம் ஏற்கத் தக்கது அல்ல.

தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் நிறவெறிக் கொள்கையை கண்டனம் செய்து அதற்கு எதிராக பொருளாதாரத் தடை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. பேரவையில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தீர்மானம் கொண்டுவந்தபோது அமெரிக்கா பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

ஆனால் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் கம்யூனிஸ்டு நாடுகள் ஆகியவற்றின் ஆதரவுடன் ஐ.நா. பேரவையில் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனி ஒரு நாட்டின் நிறவெறிக்கெதிராக நடவடிக்கை எடுக்க நேரு தயங்கவில்லை.

ஆனால் அவர் வழியில் வந்ததாகக் கூறும் மன்மோகன் சிங் அரசு பொருந்தாதக் காரணம் கூறி மழுப்புகிறது. அமெரிக்கா பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரானத் தீர்மானத்தை ஆதரிக்கும் போது இந்தியா பின்வாங்குவது அப்பட்டமான மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கையாகும்.

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.