Thursday, March 22, 2012

ஜெனீவா தீர்மானம் வென்றாகிவிட்டது! அடுத்து என்ன…? தமிழீழத்தை வெல்லும்வரை ஒவ்வொரு தமிழனும் ஓயக்கூடாது!!! – ம.செந்தமிழ்.

கடந்த பல நாட்களாக உலகத்தமிழர்களது நாடித்துடிப்பை ஏற இறங்க வைத்த ஜெனீவாத் தீர்மானம் வெற்றிபெற்று விட்டது.

இந்த தீர்மானத்தின் வெற்றி தமிழர்களின் வெற்றியாகவும் சிங்களவர்களின் தோல்வியாகவும் பார்க்குமளவிற்கு உலகத்தமிழர்களிடையே சிறுவர் பெரியவர் ஆண்கள் பெண்கள் என்ற நிலைகள் கடந்து எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.

இந்த மனித உரிமைகள் அமர்வில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படுமா இல்லையா என்ற விவாதத்தில் ஆரம்பித்து அதனை எந்த நாடு கொண்டுவரப் போகின்றது எனும் நிலைக்குச் சென்றது முதல் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் என்ன இருக்கின்றது என்பதுவரை சென்று அதனை இந்தியா ஆதரிக்குமா இல்லையா என்கின்ற நிலையில் இந்த நிமிடம் வரை தலைகுத்தி நின்றது உண்மை.

தமிழீழ மண்ணில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை குற்றங்களிற்காகவும் மீறப்பட்ட மனித உரிமை மீறல்களிற்காகவும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களிற்காகவும் சிங்கள அரசை தலைமைவகித்துவரும் மகிந்தராசபக்சே கும்பல் மீது ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட மேற்கொண்ட முயற்சியானது பல்வேறு சச்சரவுகளையும் விவாதங்களையும் தமிழர் தரப்பையும் கடந்து உலக அரங்கிலும் ஏற்படுத்தியிருந்தது.

தொப்புள்கொடி உறவுமுறையில் துடித்தெழுந்த தமிழகத்தின் எழுச்சிக் கோலம் இந்திய நடுவன் அரசை ஆட்டிப்படைத்திருந்தது என்றால் மிகையில்லை.
அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதில் இந்தியாவிற்கு இருந்த நிலை கொழும்பை பகைக்க முடியாது தமிழகத்தை இழக்க முடியாது என்ற இரண்டும் கெட்டான் நிலையாகும்.

மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்று எகத்தாளம் பேசிய அப்போதைய முதல்வர் தமிழினத் துரோகி கருணாநிதியும் போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சாத்தான் குரலில் வேதமோதிய இன்றைய தமிழக முதலமைச்சர் செல்வி செயலலிதாவும் புலிகளை யாரென்று தெரியாது.. அவர்களுடன் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என்று டெல்லியில் விமானம் ஏறும்போதும் சென்னையில் விமானத்தைவிட்டு இறங்கிய கையுடன் தமிழர்களிற்கு தமிழீழம்தான் தீர்வு என பேட்டி கொடுத்த சந்தர்ப்பவாதி ராமதாசும் சோனியாவின் மனதை மகிழ்விப்பதையே ஒரே நோக்கமாக கொண்டு இதுவரை செயற்பட்டு வந்த தமிழக காங்கிரசு தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் குதித்திருந்ததை உலகறியும்.

இவர்களின் இந்த நிலை மாற்றத்திற்கு கேவலம் கெட்ட அரசியல்தான் காரணம். முன்னர் கண்டுகொள்ளாது விட்டதற்கும் இன்று தூக்கிப்பிடிப்பதற்கும் அரசியலே அடிப்படையாக அமைந்துள்ளது.

அன்று பதவிகளை தக்கவைப்பதற்காக ஒருதரப்பும் இழந்த பதவிகளை மீண்டும் பெறுவதற்கு மறு தரப்பும் ஈழத்தமிழினத்தின் அழிவை பகடைக்காயாக பயன்படுத்தியிருந்த நிலையில் இன்று ஒட்டுமொத்தமாக குரலெழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டதன் பின்னணி தமிழக மக்கள் அரசியல் தலைமைத்துவம் இன்றி தன்னிச்சையாக தமது வாழ்வுரிமையினை நிலைநாட்டுவதற்காக களமிறங்க முற்பட்டுள்ளமையே காரணமாகும்.

இந்தியாவை ஆளும் சோனியா தலைமையிலான மத்திய அரசு தற்போதைய சூழலில் தள்ளாட்டமான போக்கில் இருந்து வருவதாலும் அடுத்தடுத்து நடைபெற்று வரும் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் படுதோல்விகளை சந்தித்துவருவதாலும் அரசியல் எதிர்காலம் கருதி சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதன் பின்னணியில் இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.

இதன் பின்னயில் முன்னர் குறிப்பிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தமது போராட்டத்தால்தான் எச்சரிக்கையினால்தான் இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்தது என தம்பட்டம் அடிக்கும் கூத்து அரங்கேறும்.

மன்மோகன்சிங் தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா விரும்புகின்றது என்ற அறிவிப்பை பாராளுமன்றத்தில் விடுத்த உடனேயே தமிழகத்தில் போராட்டங்கள் வலுக்குறைந்துவிட்டதை அவதானித்த போது இந்த தீர்மானத்தின் வெற்றி முழுமையாக தமிழக களத்தை ஓய்ந்துபோகச் செய்துவிடுமோ என்ற அச்சம் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகின்றது.

தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவாளர்களிற்கும் தமிழின உணர்வாளர்களிற்கும் தாய்த்தமிழக உறவுகளிற்கும் இந்த வேளையில் சொல்ல விரும்புவது சிறிலங்காவில் ராசபக்சே கும்பலால் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டது அப்பட்டமான தமிழினப் படுகொலை என்பதையும் அதற்கு காரணமான ராசபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றி தண்டனை வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட ஈழத்தமிழர்களே தமது தலைவிதியை தீர்மானிக்கும் வகையில் சர்வதேச கண்காணிப்பில் பொதுசன வாக்கெடுப்பினை நடாத்தக் கோரியும் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதுதான்.

இதுவே புலம்பெயர் தமிழர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வெற்றியை வெடிவெடித்து கொண்டாடவோ வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியடையவோ யாரும் முற்படக்கூடாது. எமது இலக்கு தமிழீழத் தனியரசை அமைப்பதிலையே இருக்க வேண்டும்.

ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து தற்போதுவரை சர்ச்சைகள் நிலவிவந்தாலும் சர்வதேச அரங்கில் தமிழர்களிற்கு சிங்கள இனவெறி அரசால் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நியாயம் கேட்கும் போட்டக்களத்தின் திறவுகோளாகவே கருதவேண்டும்.

உலக வல்லாதிக்க நாடுகளும் பிராந்திய வல்லாதிக்க நாடுகளும் பிராந்திய நலன் சார்ந்து ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த நூற்றாண்டு கண்டிராத மாபெரும் இனப்படுகொலையினை கண்டுகொள்ளாது விட்டதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட சிங்கள இனவெறி அரசு தன்னை கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற ஆணவப்போக்குடன் செயற்பட்டுவந்த நிலைக்குப் போடப்பட்ட கடிவாளமாகவே இதனை நாம் பார்க்க வேண்டும்.

இதுவரை தாங்கள் எது செய்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்த சிங்களத்தை ஒரு சர்வதேச கண்காணிப்பிற்குள் கொண்டுவரும் பொறியாகவே இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது.

தமிழீழம் நோக்கிய எமது நீண்ட நெடிய போராட்டத்திற்கு மே-18 2009இல் தடைக்கல் போடப்பட்டது. அதனை உடைத்து தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்து வரும் நாம் இந்த திறவுகோளைப் பயன்படுத்தி திறந்துகொண்டு அடுத்த கட்டத்திற்கு விடுதலைப் போராட்டத்தை முன்நகர்த்த வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களின் இராசதந்திரப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக இதனை கருதலாம். தொடர்ந்து அனைத்துலக தளத்தில் போராடுவோம். தமிழீழத்தை வென்றெடுப்போம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்.(22-03-2012)

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.