Thursday, March 15, 2012

உதயன் சரவணபவான் இன்னொரு கருணாவா? இன்னொரு டக்ளசா? - ஈழநாடு

மிகக் கொடூரமான இன அழிப்பு யுத்தம் ஒன்றை எதிர்கொண்டு, தமக்கான அனைத்தையும் பறி கொடுத்துவிட்டு, எதிர்கால வாழ்வுக்காக ஏங்கி நிற்கும் ஈழத் தமிழர்கள்மீது எதிர்பாராத திசையிலிருந்து ஒரு புதிய தாக்குதல் ஒன்று மிகத் திட்டமிட்ட வகையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 04 அன்று யாழ் உதயன் பத்திரிகை மூலமாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலின் பிரதான இலக்கு தமிழ்த் தேசியமாகவே இருந்தது. ஒரு கட்டுரை ஊடாக தமிழ்த் தேசிய ஆன்மா மீது அசிங்கம் விழைவிக்கப்பட்டது. தேசியத் தலைவர் அவர்களது தமிழீழ இலட்சியமும், அதற்கான அவரது உச்சநிலை அர்ப்பணிப்பும், அவரது வாழ்வியலும் அசிங்கமான முறையில் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளது எதிர்நிலைச் செயற்பாட்டாளர்களும், ஒட்டுக் குழு என்ற வட்டத்திலிருந்து இன்றுவரை விடுபடாது, சர்வதேச குற்றச்சாட்டுக்களுக்குமுள்ளாகியுள்ள ஈ.பி.டி.பி.யினரும்கூட இதுவரை துணியாத ஒரு ஈனச் செயலை உதயன் பத்திரிகை எப்படி மேற்கொண்டது அதன் உரிமையாளர் ஈ. சரவணபவானை அறிந்தவர்கள் ஆச்சரியம் கொள்ள முடியாது.

தமிழ்த் தேசியம் மீதான இந்த மோசமான கட்டுரை மூலம் சரவணபவானின் இலக்கு எதுவாக இருக்கும் என்பதை, அவரது மைத்துனரும், உதயன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான திரு. வித்தியாதரன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டோம்.

'அண்ணா - ஐயா பின்னுக்குத்தான் திட்டமிருந்தது' என்ற கட்டுரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளே பூதாகரமாக எழுந்திருந்தது. அது தேசியத் தலைவர் மீதான தாக்குதல் குறித்ததல்ல. ஐயா என்ற குறியீட்டுடன் சம்பந்தரும் அதில் விமர்சிக்கப்பட்டிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் சரவணபவான் தனது கட்சித் தலைமைக்கு எதிராகத் தனது பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை குறித்து விளக்கம் தெரிவிக்க வேண்டிய நிலைக்கு உள்ளானார்.

 அதற்கான பொறுப்பை அந்தக் கட்டுரையை எழுதியவர் மீது சுமத்தித் தப்பிக்கொள்ள முயற்சித்துள்ளார். இந்த மோசமான கட்டுரை மூலம் சரவணபவான் கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் தலைமையைக் குறி வைத்து நகர முற்பட்டுள்ளார் என்ற தகவலை அவரிடம் அறிந்து கொள்ள முடிந்தது.

ஆனால், தமிழ் மக்களது கோபம் அந்தக் கட்டுரையில் எழுதப்பட்ட சம்பந்தர் பற்றிய குறிப்பு அல்ல. தேசியத் தலைவர் குறித்த கேவலமான, மோசமான கருத்தியல் உருவாக்க முயற்சி குறித்ததே. முள்ளிவாய்க்கால் இறுதிக் கணம்வரையும், அதன் பின்னரும் தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தை எந்த சக்தியிடமும் சமரசம் செய்து கொள்ளாத விடுதலைப் புலிகளது ஈகமும், தியாகமும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட 'பயங்கரவாதம்' என்ற குற்றச்சாட்டை வலுவிழக்கச் செய்துள்ளதுடன், அவர்களை விடுதலைப் போராளிகளாக ஒப்புக்கொள்ளும் நிலையையும் அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தேசியத் தலைவர் குறித்து மோசமான கட்டுரை ஒன்றைத் தனது பத்திரிகையில் வெளிவிடும் தைரியம் சரவணபவானுக்கு எப்படி ஏற்பட்டது? என்ற கேள்விக்குப் பின்னால், பலத்த சதிகள் உள்ளதாகவே தமிழ் மக்கள் நம்புகின்றார்கள். ஏக காலத்தில், தமிழ்த் தேசிய தலைமை மீதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீதும் ஏக காலத்தில் தாக்குதல் மேற்கொண்டதன் மூலம் சரவணபவான் வேறொரு இலக்கைக் குறி வைத்துள்ளார் என்பதையே வெளிப்படுத்துகின்றது. பெரும்பாலும், கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு சரவணபவன் மகிந்தவுடன் ஐக்கியமாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியத்தின்மீதான தாக்குதல் சரவணபவானின் அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், உதயன் பத்திரிகையின் எதிர்காலத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிடும் என்பது சரவணபவான் அறியாதது அல்ல. ஆனாலும், மிகப் பெரிய துணிச்சலுடன் தமிழத் தேசியக் கருத்துச் சிதைவை மேற்கொள்ளும் சரவணபவான் என்ற வர்த்தகருக்குப் பின்னால் சிங்கள தேசத்தின் மிகப் பெரிய பேரம் பேசுதல் ஒன்று உள்ளதாகவே நம்ப முடிகின்றது.

- ஈழநாடு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.