Thursday, March 01, 2012

ஜெனீவா மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்து கொள்வதை இந்தியாவே தடுத்தது _

தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க முன்வரும்போது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் விமல் வீரவன்ச, சம்பிக ரணவக்க ஆகியோர் மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படும்போது ஏகாதிபத்தியத்தை மறுத்து விடுகின்றனர் என இடதுசாரி முன்னணி தெரிவித்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான இலங்கையில் எழுத்து மூலமான உறுதிமொழியை பெற்றுக் கொள்ளவே இந்தியா முயற்சிப்பதாகவும் அம் முன்னணி அறிவித்தது.

இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நியமித்தார்.

அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் உறுதிமொழிகளும் வழங்கப்பட்டது.

ஆனால் இன்று பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை கைவிட்டுள்ளது. இதனால் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் இதனை ஆதரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இந்தியா மௌனமாக உள்ளது. ஏனென்றால் இம் முறையும் இந்தியா இலங்கையிடம் ஏமாறத் தயாரில்லை.

எனவே பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எழுத்து மூலமான உறுதிமொழியை பெற்றுக் கொள்வதற்கான பலாத்காரத்தை இந்தியா பிரயோகிக்கின்றது. அவ்வாறு இலங்கை உறுதிமொழியை வழங்காவிட்டால் கதை கந்தலாகிவிடும்''

ஏனென்றால் ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாமென கூட்டமைப்பினரை இந்தியாவே தடுத்து வைத்துள்ளது. இவ்வாறானதோர் நிலையில் இலங்கை உறுதியை வழங்காவிட்டால் கூட்டமைப்பினரை ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்தியா பணிப்புரை விடுக்கும்.

இதுதான் இந்தியாவின் மௌனத்திற்கு காரணமாகும். அதேவேளை, அமெரிக்காவின் பிரேரணையை சீனாவோ ரஷ்யாவோ எதிர்க்காது. ஏனெனில் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்றே இது முன்வைக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென பிரேரணை கொண்டு வருவதற்கு எதிராக ஏகாதிபத்தியவாத எதிர்ப்பையும் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்ளும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்கவும் விமல் வீரவன்சவும் ஏகாதிபத்திய வாதிகளின் சொல்லைக் கேட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களின் வயிற்றில் அரசாங்கம் அடிக்கும்போது மௌனமாக இருக்கின்றார்கள். ஏகாதிபத்திய விரோதம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

இது புதுவிதமான தீர்ப்பு என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.