Thursday, March 01, 2012

அமெரிக்காவின் முயற்சியை முறியடிக்கும் உபாயத்தை வகுத்து செயற்படுங்கள் ஜெனீவாவில் இலங்கைக்கு இந்தியா அறிவுரை

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக உறுப்பு நாடுகளின் ஆதரவை திரட்டுவதற்காக அமெரிக்கா கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அதனை முறியடிப்பதற்கான உபாயங்களை வகுக்குமாறு இந்தியா இலங்கையிடம் எச்சரிக்கை கலந்த அறிவுரையை வழங்கியுள்ளது.

 இலங்கைக்கு முன்னர் ஆதரவு தெரிவித்திருந்த நாடுகள் பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றி அமெரிக்கா சார்பு நிலையை கடைப்பிடிக்கலாம் எனவும் இந்தியா, இலங்கையை எச்சரித்துள்ளது. ஜெனீவாவுக்கான இந்திய உதவித் தூதுவர் டாக்டர் கேயா பட்டாச்சாரியா அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை பிரதிநிதிகளிடம் இதனைத் தெரிவித்துள்ளதாக அரச வட்டாரங்கள் கூறின.

அவதானமாக செயற்படுங்கள், ஆதரவு திரட்டுங்கள்,சகல நாட்டுப் பிரதிநிதிகளுடனும் பேசுங்கள் என இலங்கை பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ள ஜெனீவாவுக்கான இந்திய உதவித் தூதுவர் கேய பட்டாச்சாரியா சம்பவம் ஒன்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது ஜெனீவாவில் இடம் பெற்ற முதல் நாள் அமர்வில் இலங்கைக்கு ஆதரவாக தாய்லாந்து கருத்து வெளியிட்ட போதிலும் பின்னர் தாங்கள் தாய்லாந்து பிரதிநிதிகளிடம் உரையாடிய போது அவர்கள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதை அறிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவருவதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளதாகவும் தீர்மானத்தை கைவிட்டுவிட அது தயாரில்லை எனவும், ஆகவே ஜெனீவாவிலுள்ள தூதுவர்களையும் ஜெனீவா வந்துள்ள வெளிவிவகார அமைச்சர்களையும் மாத்திரம் நம்பிக் கொண்டிருக்காமல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாட்டுத் தலைவர்களை இலங்கை சந்திப்பதே சிறந்தது எனவும் இந்தியத் துணைத் தூதுவர் கேயா பட்டாச்சாரியா இலங்கை அரசாங்கத் தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அறிய வருகிறது.

 இந்தியாவிடமிருந்து கிடைத்த இந்த தகவலைக் கேட்டு இலங்கை அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் இம்முறை ஜெனீவாவில் மிகப்பெரும் நெருக்கடியை இலங்கை சந்திக்கக் கூடும் எனக் கருதுவதாகவும் அறியவருகிறது.

அதேநேரம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மண்டபத்திற்குள் கூட அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக இலங்கை தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான நாடுகளை தன் பக்கம் இழுத்தெடுப்பதே இதன் நோக்கம் எனவும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா கொண்டுள்ள அழுத்தம் இதன் மூலம் தெளிவாகுவதாகவும் இலங்கை தரப்பினர் விசனம் அடைந்துள்ளனர்.

மேலும் ஜெனீவாவில் முகாமிட்டுள்ள இலங்கை அரசாங்கத் தரப்பினர் கொங்கோ வெளிநாட்டு அமைச்சரையும் சந்தித்துள்ளனர். இவர்களுடன் பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா நாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர். அல்ஜீரியா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர் அல்லாத போதும் ஏனைய முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுத் தருவதாக அல்ஜீரியா இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.

புதன்கிழமை காலை நேரம் (சுவிஸ் நேரம்) இலங்கை அரசாங்க தரப்பு மேற்கத்திய நாடுகளின் ஒருங்கிணைப்புக் குழுவை சந்தித்து போரின் பின்னரான இலங்கை நிலைவரம் , நல்லிணக்க செயற்பாடுகள், மீள் குடியேற்றம் உள்ளிட்ட விடயங்கள் பற்றி எடுத்துரைத்துள்ளது. இதுபோன்று இஸ்லாமிய நாடுகளின் ஒருங்கிணைப்பு குழு பிரதிநிதிகளையும் சந்தித்தும் கலந்துரையாடியதுடன் இலங்கைக்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகள் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் இதன் போது இலங்கை அரசாங்கத் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரம் தென்னாபிரிக்கா இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை தற்போது கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அங்கு தங்கியிருப்பதாக இலங்கை அரசாங்கத் தரப்பினர் கூறினர். இருந்த போதும் இதுவரை தென்னாபிரிக்காவிடமிருந்து சாதகமான பதில் எதுவும் கிட்டவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.

இன்று வியாழக்கிழமையுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர்கள் மட்ட உரைகள் மற்றும் சந்திப்புகள் முடிவுக்கு வருகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சரத்து 10 இன் படி பேரவையில் ஒரு உறுப்பு நாடு தீர்மானத்தை கொண்டுவர வேண்டுமாயின் கூட்டத் தொடர் நிறைவடைய 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் அந் நாடு குறித்த தீர்மானத்தை முன்வைக்க வேண்டும்.

மார்ச், 23 ஆம் திகதி மாலை 6 மணியுடன் (சுவிஸ் நேரம்) ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத் தொடர் நிறைவடைகிறது. இந் நிலையில் மார்ச் 19 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.