Saturday, March 24, 2012

வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்குமாறு கோதாபய விடுத்த வேண்டுகோளுக்கு மகிந்த அனுமதி!!

ஜெனீவாவில் இலங்கை அடைந்த தோல்விக்கு அடிப்படைக் காரணம் வெளிவிவகார அமைச்சின் குறைபாடுகள் என சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எனவே,சிறீலங்கா வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க வேண்டியது இன்றியமையாதது என அவர் நேற்று (23) மகிந்த ராஜபக்‌ஷவிற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

சிறீலங்கா ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சும் நாட்டிற்காக எவ்வாறான அர்ப்பணிப்புகளை மேற்கொண்டாலும், வெளிவிவகார அமைச்சின் குறைபாடுகளினால், நாளுக்கு நாள் இலங்கை சர்வதேச ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் செயற்பாடுகள் முழுமையாக தோல்விகண்டவை என சுட்டிக்காட்டியுள்ள சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர், அந்த அமைச்சின் செயலாளர், கருணாதிலக்க அமுனுகமவிற்கும், மேலதிக செயலாளர் சேனுகா செனவிரத்னவிற்கும் இடையிலான பனிப்போர் வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகளை முற்றாக சீர்குலைத்துள்ளதாகவும் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர்,ஆந் நாட்டு ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு உடனடியாக மறுசீரமைக்கப்படாவிடின், பாதுகாப்பு அமைச்சு பெற்றுக்கொண்ட வெற்றி, தண்ணீர் அடித்துச் சென்ற ஒன்றாகிவிடும். அத்துடன்,சிறீலங்கா அரசாங்கம் கவிழ்வதற்கான புறச்சூழல் ஏற்படும் எனவும் கோதாபய ராஜபக்‌ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தமிழ், சிங்களப் புத்தாண்டின் பின்னர், வெளிவிவகார அமைச்சை முழுமையாக மறுசீரமைக்க மகிந்த ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.