Hi Friend, Get paid 72 times per day!

My Advertising Pays, It Pays To Be On M.A.P!

Wednesday, March 07, 2012

இந்தியா பிரேரணையை ஆதரிக்க வேண்டும் தவறினால் ஈழத் தமிழரின் சாபம் கிடைக்கும்-தினமணி

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை விவகாரத்தில் அமெரிக்காவும் வேண்டும், அண்டை நாடான இலங்கையில் சீனா நெருங்கிவிடவும் கூடாது என்றால், இந்தியா இப்பிரேரணையைப் புறக்கணிப்பதையே விரும்பும் என்று கருதப்படுகிறது.

எனினும், அமெரிக்காவுக்கு நம் மீது இருக்கும் அக்கறை, நமது தொப்புள் கொடி உறவு நாடான இந்தியாவுக்கு இல்லையே என்று இலங்கைவாழ் தமிழர்கள் நம்மைச் சபிக்காமல் இருக்க வேண்டுமானால் இந்திய அரசு இந்தப் பிரேர ணையை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு தமிழக நாளேடான “தினமணி’ தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. “தீர்வுத்திட்ட விடயத்தில் இந்தியா உட்பட நேச நாடுகளின் கோபத்துக்கு இலங்கை இலக்காகியுள்ளது. எனவே, அவசர தீர்வுக்கான ஆர்வமே தற்போதைய உடனடித் தேவை” என்று சென்னையிலிருந்து வெளியாகும் “இந்து’ பத்திரிகை நேற்றுமுன்தினம் தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இலங்கைப் பிரேரணை விவகாரம் தொடர்பில் தினமணி தனது ஆசிரியர் தலையங்கத்தைத் தீட்டியுள்ளது. தினமணி தீட்டிய ஆசிரியர் தலையங்கத்தின் முழு விவரம் வருமாறு

கூர்ந்து கவணிக்கின்றன உலகநாடுகள் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்குமா, எதிர்த்து வாக்களிக்குமா அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைக் கடைசி நேரத்தில் தவிர்த்துவிடுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன.

2009 இல் இதேபோன்ற நிலைமையை இலங்கை சந்திக்க நேர்ந்தபோது இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்தியா மேற்கொண்டது. இலங்கை தனக்கு ஆதரவாக 29 வாக்குகளைப் பெற்று, சிக்கலில் இருந்து தப்பியது. இந்த முறையும் அதேநிலையை இந்தியா மேற்கொள்ளாது என்று உலக நாடுகள் கருதுகின்றன.

இப்படி ஒரு பிரேரணையை, போர்க்குற்றங்கள் நிகழ்த்துவதில் எல்லோருக்கும் அண்ணனான அமெரிக்கா கொண்டுவருவதற்குக் காரணம், இலங்கையுடன் சீனா நெருக்கமாகி வருவதன் எதிர்வினைதான். இதில் இந்தியா எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதும் முன்னமே பேசி முடிவாகியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அது எத்தகைய நிலைப்பாடு ஆதரவா? எதிர்ப்பா? புறக்கணிப்பா? என்பதுதான் எதிர் பார்ப்பைக் கிளப்பி இருக்கிறது.

அமெரிக்காவும் வேண்டும், அண்டை நாடான இலங்கையில் சீனா நெருங்கிவிடவும் கூடாது என்றால், இந்தியா இப்பிரேரணையைப் புறக்கணிப்பதையே விரும்பும் என்று கருதப்படுகிறது.

இவ்வளவு தீவிரமான விவகாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தமிழகத்தைத் தவிர, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுகுறித்த எந்தப் பேச்சும், விழிப்புணர்வும் அல்லது சலசலப்பும் காணப்படவில்லை. கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தைக்கூட இந்தியாவில் பிற மாநிலத்தவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள், கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், இலங்கைத் தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதைத் தமிழர்கள் விவகாரமாகக் கருதுகிறார்களே தவிர, குறைந்தபட்டம் இதை மனித உரிமைப் பிரச்சினையாகக்கூட கருதவில்லை என்பதுதான் வேதனையானது.

தமிழ் நாட்டவரின் நிலையே வேதனையாகிறது அதையும்விட வேதனையானது, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மனநிலை! அரசியல் கட்சிகள் அளவில் பேசப்படும் இந்த விவகாரம், தமிழர்கள் அனைவரிடமும் உணர்வுபூர்வமான சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரியவில்லை.
இந்தக் கசப்பான உண்மைக்குக் காரணம், அ.தி.மு.க., தி.மு.க. என்கின்ற இரண்டு பெரிய கட்சிகளின் தலைமைகளும் பிரதமருக்குக் கடிதம் எழுதியதுடன் தங்களது கடமையை முடித்துக் கொண்டுவிட்டதுதான்.

இலங்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையிலான கடைசிக் கட்டப்போரில் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள் என்பது பல வகைகளிலும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்தான், இத்தகைய ஒரு பிரேரணை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் கொண்டுவருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் முன்பாகவே, இந்தியா ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 47 நாடுகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில் இந்தியா கூறியிருப்பதன் சாராம்சம் இதுதான்:
“ஒரு தனிப்பட்ட நாட்டின் பெயரைக் குறிப்பிட்டு, இத்தகைய பிரேரணை கொண்டுவருவது இந்த சபையின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானது.” மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, சத்தியமூர்த்தி பவனில் அளித்த பேட்டியில், இரு தரப்பிலும் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாகவும், மனித உரிமை மீறலுக்கான எந்தவித பிரேரணைக்கும் இந்தியா ஆதரவு தெரிவிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

கேரள மீனவர்கள் சுடப்பட்டதும் கொதிப்பு “இரு தரப்பிலும் மனித உரிமை மீறல்”, “எந்தவித பிரேரணைக்கும் ஆதரவு’” இப்படியெல்லாம் கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாக மத்திய அரசின் நிலைப்பாடு இருக்கும் என்பதைத்தான் இந்தப் பேட்டி வெளிப்படுத்துகிறது.

கேரளக் கடற்பகுதியில் இரண்டு மீனவர்களை இத்தாலி கப்பல் படையினர் சுட்டுக் கொன்றார்கள் என்றவுடன் அந்தக் கப்பலை கரைக்கு இழுத்துவந்து நிறுத்தி, காவலர்களைக் கைதுசெய்து, இத்தாலியின் அமைச்சர்கள், தூதர்கள் என எல்லோரையும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் படியேற வைக்க முடிகிறது.

காரணம், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகக் கேரளத்தைச் சேர்ந்த ஏ.கே.அந்தோனி இருக்கிறார். கேரளத்திலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் சுடப்பட்ட மீனவர்களுக்காகக் குரலெழுப்புகின்றன.

இதேபோல, இராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக இலங்கை இராணுவத்தினரைக் கடலில் மடக்கிப் பிடித்து, நமது கட்சிகள் ஒத்த குரலில் கோரிக்கை எழுப்பி இருக்குமா?

இந்திய சட்டத்தின்படி நீதிபரிபாலனம் செய்ய ஒருநாளாகிலும் முயற்சி செய்திருப்பார்களா?

இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது பெயரளவுக்கு அரசியல் அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதும் கூட, உலக அரங்கின் நெருக்கடியால்தான். இன்னமும்கூட, ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழர் வாழும் மாகாணங்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை. அனைத்தும் கொழும்பு மேற்பார்வையில்தான் நடைபெறுகிறது. இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தவும், அதில் வெற்றிபெறவும் இந்தியா மனப்பூர்வமான முயற்சிகளைச் செய்யவில்லை.

பெயரளவுக்கு அமைச்சர் கிருஷ்ணாவும் அரசுச் செயலர்களும் பயணம் போய் வருகிறார்கள், அவ்வளவே. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது இந்தியா அமைதி காத்தது. அதெல்லாம் போகட்டும், குறைந்தபட்சம் இப்போதாகிலும், உலக அரங்கில் இலங்கையைப் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கும் பிரேரணைக்கு ஆதரவாகவாகிலும் வாக்களியுங்கள் என்பதுதான் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்று அந்த ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.