Sunday, March 18, 2012

தமிழகத்தில் 23-ந் தேதி வேலைநிறுத்தம்: பழ.நெடுமாறன் அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அனைத்து நாடுகளும் ஆதரிக்க வலியுறுத்தி தமிழகத்தில் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வேலை நிறுத்தம் நடைபெறும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் 5 லட்சம் தமிழர்கள் வாழ்க்கையை இழந்து நிற்கின்றனர். 1,1/2 லட்சத்திற்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டனர். இறுதி கட்ட போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஐ.நா. சபையின் முதற்கட்ட அறிக்கை, ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

மனித குலத்திற்கு எதிராக நடந்துள்ள இந்த கொடுமையை எதிர்த்து தமிழக மக்கள் அனைவரும், அரசியல் வேறுபாடுகளை கடந்து ஒன்று சேர்வது அவசியமாகிவிட்டது. தமிழ் மக்களின் இந்த கொலைக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் கடமையோடு செயல்பட வேண்டும்.

ஐ.நா சபையின் மனித உரிமை குழுவில் இன அழிப்பு போர் குற்றத்திற்காக, ராஜபக்சே அரசாங்கத்தின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணை சர்வதேச விசாரணை குழுவின் நேரடி விசாரணையாக அமைய வேண்டும் என்ற திருத்தத்துடன் இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.

ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக தீர்மானத்தை மனித உரிமை குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் ஆதரிக்க வேண்டும். இந்த தீர்மானங்களை முன்வைத்து ஜெனிவாவில் தீர்மானம் முன்மொழியப்பட உள்ள மார்ச் 23-ந் தேதி அன்று காலை முதல் மாலை 6 மணி வரை தமிழக மக்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் திறக்காமல் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.