Tuesday, February 28, 2012

அரசு மக்களைப் பலாத்காரமாக வீதியில் இறக்குவதாக ஐதேக குற்றச்சாட்டு : கண்காட்சியைக் கைவிடவும் கோரிக்கை _

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு பிரபாகரன் இறந்த போது நாட்டு மக்கள் சுயமாக வீதியில் இறங்கி கொண்டாட்டங்களை நடத்தினார்கள். ஆனால் அரசாங்கம் இன்று தனது குறைகளை மறைத்துக் கொள்வதற்கும் மக்களை திசை திருப்புவதற்கும் பலாத்காரமாக மக்களை வீதியில் இறக்குகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் எம்.பி.யுமான கயன்த கருணாதிலக்க குற்றம் சாட்டினார்.

ஆர்ப்பாட்டம் என்ற கண்காட்சிகளை கைவிட்டு சர்வதேசப் பிரச்சினைகளை ராஜதந்திர ரீதியில் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று திங்கிட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே கயந்த கருணாதிலக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் நாட்டின் மனித உரிமைகள் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா பிரேரணையை முன் வைக்கின்றது. இது தொடர்பில் எந்தவொரு இலங்கையரும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.

நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த ஆட்சியென்ற ரீதியில் ஐ.தே.கட்சியும் கவலையடைகின்றது. ஜெனரல் சரத்பொன்சேகா தலைமையில் படையினரின் அர்ப்பணிப்பும் அரசியல் தலைமைத்துவத்தின் வழிகாட்டலாலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் சமாதானம் ஏற்பட்டது. ஆனால் இச் சூழ்நிலையை பயன்படுத்தி அரசாங்கம் நல்லாட்சிக்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவில்லை. ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகள் முடக்கப்பட்டது. இவ்வாறு ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடுகள் தொடர்ந்தது. இதன் மூலம் அரசாங்கமே எமது நாட்டுக்குள் சர்வதேச தலையீடுகளை உருவாக்கியது. நாட்டு மக்களோ எதிர்க்கட்சிகளோ இந்த நிலைமையை உருவாக்கவில்லை. அரசாங்கமே உருவாக்கிக் கொண்டது. எனவே தீர்வையும் அரசாங்கமே காணவேண்டும்.

தருஷ்மன் அறிக்கை வெளிவந்த போது உண்ணாவிரதங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்ற மக்களை ஏமாற்றும் கண்காட்சிகளை அரசாங்கம் நடத்தியது. அதேபோன்று இன்றும் அமெரிக்காவின் செயற்பாட்டுக்கு எதிராகவும் மக்களை பலாத்காரமாக வீதியில் இறக்கியுள்ளது.

இப்பிரச்சினைக்கு ராஜதந்திர அணுகுமுறையிலேயே தீர்வு காணப்படவேண்டும். ஆனால் நாட்டில் பொருட்கள்,எரிபொருட்கள், வரிகள் அதிகரிக்கப்பட்டதால் மக்கள் மீது அதிக வாழ்க்கைச் செலவு சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் அரசாங்கத்தின் மீது மக்கள் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்களின் உண்மையான போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் அடக்குமுறையை பிரயோகிக்கின்றது. ஆனால் அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்கான ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூர்த்தி உதவி பெறுபவர்கள் மற்றும் தொழில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டுமென கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பய ங்கரவாதம் ஒழிக்கப்பட்டு பிரபாகரன் இறந்தபோது மக்கள் சுயமாகவே வீதியில் இறங்கி ஆர்ப்பரித்தனர். ஆனால் இன்று மக்கள் பகிரங்கமாக வீதியில் இறக்கப்படுகின்றனர்.

இப் பிரச்சினையை எதிர்க்கட்சிகளால் தீர்க்க முடியாது. அரசாங்கமே ராஜதந்திர முறையில் தீர்க்க வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பெரும்பாலனவற்றை ஏற்றுக் கொள்ள முடியும். எனவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.