Sunday, February 26, 2012

கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாததன் மூலம் - கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வரலாற்றுத் துரோகம் செய்துள்ளது: ஜெயானந்தமூர்த்தி.

ஜெனிவா ஐ.நா.சபையில் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாததன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு வரலாற்றுத் துரோகத்தைச் செய்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி காட்டமாத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது மக்களை அழித்து படுகொலை செய்த சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா. சபையில் இம்மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் முக்கியமான தீர்மானமொன்றை கொண்டு வருவதற்கு உலக நாடுகள் திடசங்கற்பம் பூண்டுள்ளன.

அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள இத்தீர்மானத்தில் உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்கப்போகின்றன.

இந்த விடயமே தற்போது உலக நாடுகளில் முக்கிய செய்தியாக உள்ளது.

 ஆனால் இந்தியா இலங்கைக்கு சார்பாக ஐ.நா.வில் நடந்து கொள்ளும் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.நாவில் இடம் பெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு கருத்துக் கூறுவதில்லை என அறிவித்துள்ளது. இத்தீர்மானம் ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு செய்துள்ள துரோகமாகவே அமைந்துள்ளது.

முள்ளிவாய்காலில் கண்முன்னே இடம் பெற்ற மனிதப் படுகொலைகளை ஐ.நாவில் எடுத்துக் கூறத்துணிவில்லாமல் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை இந்தியா ஆகிய நாடுகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் அந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று கொண்டு செயற்பட்டு வருகின்றன. இது தமிழ் மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகவே கருதப்படும்.

வடகிழக்கு மக்களால் இன்றைய நிலைமை பற்றியோ அல்லது தமது உரிமை பற்றியோ எதுவும் பேச முடியாத நிலையிலேயே அவர்கள் தமது பிரதிநிதிகாளக தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தெரிவு செய்துள்ளனர்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்போ தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அப்பால் தமது சுயநல அரசியலுக்காகவும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளின் சுயநலத்திற்காகவும் செயற்பட்டு வருகின்றனர். இது மிகமோசமான துரோகமாகவே அமைந்துள்ளது.

எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு உலகநாடுகள் அனுசரணையாக இருந்தன. தற்போது அதை உணர்ந்துள்ள சர்வதேச சமுகம் தமி;ழ் மக்களுக்கு உரிமை வழக்க வேண்டுமென இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றன இந்த நிலையிலேய ஐ.நாவில் இடம் பெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் கலந்து கொள்ளாதது "வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைத்த கதையாகவே அமைந்துள்ளது. புலம் பெயர் தமிழ் மக்கள் இன்று ஒன்று பட்டு உரிமைக்காக போராடி வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.