Friday, February 03, 2012

இலங்கை விவகாரமாக இந்தியா விரைந்தார் எரிக்!

ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள மேற்குலக நாடுகள் அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சி களில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதற்காக நோர்வே அமைச்சர் எரிக் சொல் ஹெய்ம் இந்தியாவுக்கு விரைந்துள்ளார்.

அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள இந்தத் தீர்மானம் தொடர் பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்குக் கடந்த வெள்ளியன்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அதிகாரபூர்வமாகத் தெரியப்படுத்தியிருந்தார்.
 
இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு வழங்குவதாகவும் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டிச் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் மேற்குலக நாடுகள் ஈடுபட்டிருப்பதாக புது டில்லித் தகவல்கள் கூறுகின்றன.
 
இதன் ஒரு கட்டமாக நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சரும், இலங்கைக்கான் சிறப்பு சமாதான தூதுவராகப் பணியாற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம் புதுடில்லி சென்றுள்ளார்.
 
அவர் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பு அதிகாரிகளுடனும் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை அமெரிக்கா தரப்பில் சில உயர்மட்டப் பிரதிநிதிகள் புதுடில்லி செல்லும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.
 
இந்தநிலையில் இலங்கையும் இந்தியாவின் ஆதரவைத் தக்க வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 24ஆம் திகதி வெளிவிவகார அமைச்\ர் ஜி.எல்.பீரிஸ் குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்று திரும்பியிருந்தார். அடுத்து அவர் ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்திட்டம் ஒன்றைக் கொண்டுள்ளபோதும், அவர் மீண்டும் புதுடில்லிக்குச் சென்று பேச்சுக்களை நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
 
அதேவேளை தற்போது இந்தியஇலங்கைப் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இந்திய அதிகாரிகள் பலருடனும் ஜெனிவாத் தீர்மானம் குறித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.ஜெனிவா கூட்டத்தொடரில் மேற்குலகின் சார்பில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு இந்தியாவின் ஆதரவு கிடைக்குமானால் அது இலங்கைக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.