Monday, December 05, 2011

வடக்கில் கால்பதிக்க அமெரிக்கா முயற்சி – அமைச்சரவையில் விமல் வீரவன்ச பாய்ச்சல்

வடக்கில் போரினால் சேதமடைந்த மருத்துவமனைகளைத் திருத்தியமைப்பதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது குறித்து கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற சிறிலங்காவின் அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை திருத்தியமைக்கவும், புதிய மருத்துவமனைகளை அமைக்கவும் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடம் உதவ முன்வந்துள்ள திட்டத்துக்கு அனுமதியளிக்கும் பிரேரணை ஒன்றை சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

பசுபிக் கட்டளைப் பீடத்தின் இந்த நிதியுதவி அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (யுஎஸ் எய்ட்) கொழும்பு பணியகம் ஊடாக வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே இந்தப் பணியகத்தில் உள்ள, வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பசுபிக் கட்டளைப்பீடத்தின் ஆளணியினரே இந்தப் பணியை கவனிக்கவுள்ளனர்.

இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதும் உடனடியாகவே அமைச்சர் விமல் வீரவன்ச அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

சிறிலங்காவில் அமெரிக்க இராணுவத் தலையீட்டுக்கான அடிக்கல் இது என்றும் இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

“இது அமெரிக்கப் படையினரை சிறிலங்காவுக்குள் கொண்டு வருகின்ற தந்திரமாக இருக்கக் கூடும். மருத்துவமனைகள் மூலம் அமெரிக்க இங்கு கால் வைக்கக் கூடும். ஏனைய நாடுகளிலும் இது தான் நடந்தது“ என்று அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

அப்போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலையிட்டு அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.

இந்தத் திட்டம் சார்ந்த எல்லாப் பணிகளையும் சிறிலங்கா அரசே கவனித்துக் கொள்ளும் என்று அவர் உறுதி வழங்கினார்.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சிறிலங்காப் படையினரின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் ஆதரவு வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமே பல்வேறு பிரச்சினைகளை கிளப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலுள்ள மக்களுக்கு இந்த மருத்துவமனைகள் மூலம் சேவைகள் கிடைக்கும் என்றும், இதன் மூலம் எந்த இராணுவ அச்சுறுத்தலும் ஏற்படாது என்றும் மகிந்த ராஜபக்ச தெளிவுபடுத்தினார்.

ஏற்கனவே வீதி திருத்தம், துறைமுக, மின் திட்டங்களில் சீனாவும், தொடருந்து, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டங்களில் இந்தியாவும் பணியாற்றுவதை சுட்டிக்காட்டியே அமைச்சரவையில் எழுந்த எதிர்ப்பை சிறிலங்கா அதிபர் சமாளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.