Saturday, December 31, 2011

நாம் ஒன்றும் புதிதாக கேட்கவில்லை. ஏற்கனவே பல தடவை முன்வைத்த விடயங்களையே வலியுறுத்தி வருகிறோம். திருமலையில் நடைபெற்ற மாநாட்டில் இரா.சம்பந்தன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் தொடர்ந்து நடத்திவரும் பேச்சுக்களில் மிகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் நடந்து வருகிறது. நாம் ஒன்றும் புதிதாக கேட்கவில்லை. ஏற்கனவே பல தடவை முன்வைத்த விடயங்களையே வலியுறுத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் நியாயமான, என்றும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம். அதுவே தமிழ் மக்களின் அபிலாஷை, எதிர்பார்ப்பு எல்லாம்.
இந்த யதார்த்தமான நிலைமையை உணர்ந்து அரசும் நேர்மையாகச் செயற்பட முன்வர வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்கள் மட்டு மல்ல அனைத்து இன மக்களும் நன்மையடைவார்கள் அரசியல் தீர்வுதான் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் வழிவகுக்கும் என கூறினார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ. சரவணபவன், அரியநேத்திரன், யோகேஸ்வரன், சிறிதரன், செல்வராசா, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சி.வி.கே.சிவஞானம், குலநாயகம், பரஞ்சோதி, பேராசிரியர் சிற்றம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் உட்பட வடக்கு, கிழக்கிலுள்ள கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

சம்பந்தன் அங்கு உரையாற்றுகையில் கூறியதாவது:

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை கூட்டமைப்பு முற்றாக நிராகரித்து விடவில்லை. கூட்டமைப்பும் அரசும் நடத்தும் பேச்சுகளில் காணப்படும் இணக்கப்பாடுகளை ஆராய்வதாகவே நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைய வேண்டும்.

நாம் ஒன்றும் புதிதாக கேட்கவில்லை பண்டா செல்வா ஒப்பந்தம், மங்கள முனசிங்க தெரிவுக்குழுவால் முன்வைக்கப்பட்ட விடயங்களையே முன்வைத்துள்ளோம். என்றார்.

* தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்துதல், கிளைகளை அமைத்தல்.

* நிர்வாக ரீதியில் சில மாற்றங்களை ஏற்படுத்துதல்

* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்தல்

* அரசியல் நிலை அரசியல் தீர்வு

* சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு

* நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை

* ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை

* ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயம்

ஆகிய விடயங்கள் விரைவாக ஆராயப்பட்டன. திருகோணமலையில் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் காலை 9 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெற்றது.

"தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கடும்போக்கை பின்பற்றுகின்றது, புலிகளின் கோட்பாடுகளுக்கு அமைய செயற்படுகின்றது, புலம்பெயர் தமிழர்களின் எண்ணப்பாடுகளுக்கும் அவர்களுடைய அட்டவணையின் படியும் செயற்படுகின்றது." என்ற ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்களையும் சம்பந்தன் முற்றாக நிராகரித்தார்.

1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலும் மேற்கொண்ட அரசியல் முயற்சிகளின் அடிப்படையிலும் நியாயபூர்வமாக நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். நாம் அரசுடனான பேச்சுகளின் நிதானமாகவும் பக்குவமாகவும் செயற்பட்டுவருகின்றோம் அரசும் உண்மையை உணர்ந்து நேர்மையாகச் செயற்பட முன்வரவேண்டும்.

தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து இன மக்களும் நன்மை அடைய இது அவசியம். போர் முடிந்த பின்னர் அதற்குக் காரணமாக இருந்த கருமங்களை கருத்தில்கொண்டு காணப்படும் அரசியல் தீர்வுதான் சமாதனத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் வழிவகுக்கும் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சட்ட பூர்வமாக பதிவு செய்வது தொடர்பாக ஆராயப்பட்டதாக கூறிய சம்பந்தன், தற்போது அங்கம் வகிக்கும் கட்சிகளுடனும் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடப்பட்டு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் சம்பந்தன் கூறினார். இதேவேளை, தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பது குறித்தான பேச்சின்போது இலங்கை அரசு முன்வைத்துவரும் அடிப்படையற்ற நிபந்தனைகள் குறித்து இலங்கை தமிழரசுக்கட்சி நேற்று விரிவாக விவாதித்திருக்கிறது.

அடுத்த வருடாந்த மாநாடு மட்டக்களப்பில்:

அடுத்த வருடம் கட்சியின் வருடாந்த மாநாட்டை மட்டக்களப்பில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், அரசுடன் நடத்தப்பட்டுவரும் தீர்வுப் பேச்சுகளின் தற்போதைய நிலைமை குறித்தும் தலைவர் சம்பந்தன் விரிவான விளக்கமொன்றை ஆரம்பத்திலேயே வழங்கினார்.

இதன் பின்னர் கட்சியின் இதர உறுப்பினர்கள் தற்போதைய நிலவரம் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுகள் குறித்து விரிவாக விவாதித்தனர். "தீர்வுப் பேச்சுகளில் தமிழ்க் கூட்டமைப்பு மிகவும் பொறுமையாக, மிதவாதப் போக்கைக் கடைப்பிடித்து வருவது நிரந்தர தீர்வொன்று தமிழர்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற இதயசுத்தியுடன்தான். ஆனால், இதனைப் பலவீனமாகக் கருதும் அரசு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகிறது" என்று இங்கு பல உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விட்டுக்கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்பன புதிய கோரிக்கை அல்ல. எமது பிரச்சினையின் அடிப்படை அவை. அவ்வாறானவற்றை விட்டுக்கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லையென்றும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் எடுத்துக்கூறினர்.

சுயநிர்ணய உரிமை, வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் இதர அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கை தமிழரசுக்கட்சியினால் இன்று நேற்றுக் கொண்டுவரப்பட்டவை அல்ல. தந்தை செல்வாவின் காலத்திலிருந்து இவை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் பின்னிப்பிணைந்தவை. இந்தக் கொள்கையிலிருந்து இம்மியளவேனும் பின்வாங்கக் கூடாது என்று தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தின் போது ஏகோபித்த குரலில் வலியுறுத்தினர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.