Friday, December 23, 2011

பிரபாகரனுக்காக சேவையாற்றிய கூட்டமைப்பு இன்று புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளுக்காக சேவையாற்றுகிறது: இந்திய அதிகாரப்பகிர்வு முறையை ஏற்கப் பொவதில்லை என்கிறார் கெஹலிய ரம்புக்கவெல.

இந்தியாவின் அதிகாரப் பகிர்வு முறையை ஏற்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து காவல்துறை அதிகாரங்களுடன் கூடிய அரசு ஒன்றை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைகிறது. அவர்கள் விரும்புவதை நாம் கொடுத்தால், சிறிலங்கா அதிபரோ அல்லது தெற்கிலுள்ள ஏனைய தலைவர்களோ வடக்கு,கிழக்கிற்கு செல்வதற்கு அவர்களிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும்.

இந்திய அதிகாரப் பகிர்வுமுறையை சிறிலங்காவில் கொண்டு வர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைகிறது, ஆனால் அதனை சிறிலங்கா அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களையே பிரதானமாகக் கோருகிறது. அவற்றை ஒருபோதும் சிறிலங்கா அரசினால் வழங்க முடியாது.

எனவே, இந்த கலந்துரையாடல்கள் அர்த்தமற்றவை. இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுக்கள் நேரத்தை வீணடிக்கும் செயலாகவே உள்ளது. காவல்துறை அதிகாரங்களை வழங்க மறுப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றைப் பகிர்ந்து கொடுத்தால், சிறிலங்காவும் இந்தியாவைப் போன்று ஆகிவிடும்.

இந்தியப் பிரதமரோ அல்லது மத்தியில் உள்ள தலைவர்களோ எந்தவொரு மாநிலத்துக்கும் செல்வதற்கு முன்னர் அந்தந்த மாநில முதலமைச்சர்களின் அனுமதியைப் பெற வேண்டியுள்ளது. இது அபத்தமானது. சிறிலங்காவின் அதிபரோ அல்லது ஏனைய தலைவர்களோ மாகாண முதல்வர்களின் அனுமதிக்காக காத்திருக்கின்ற முறையை சிறிலங்காவில் அறிமுகம் செய்ய நாம் தயாரில்லை.

அத்தகைய நிலைமை சிறிலங்காவுக்குத் தேவையில்லை. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக பொறுப்புணர்வு உள்ளது. அரசியல் பிரச்சினை தீர்வு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆளும் தரப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்த்தரப்பு சார்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பிலும் உறுப்பினர்கள் நியமிக்க அவர்கள் நேர்மையாக முன்வர வேண்டும். திம்பு பேச்சுக்களின் போதும் இறுதிக் கட்டத்தில் தீர்வு முயற்சிகள் தோல்வியடையக் காரணம் தமிழர் தரப்பே.

சில விடயங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு பேச்சுக்களில் இருந்து வெளியேறினர். அதேபோன்ற நிலையே தற்போதும் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு, கிழக்கு மக்களுக்கு இருந்த நெருக்கடி நிலை இன்றும் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபாண்டமான குற்றச்சாட்டு கூறுகிறது.

அவர்கள் வேறு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகிறார்கள். இத்தகையவர்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட முடியுமா?

முழு நாட்டையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறாக வழி நடத்துகிறது. முன்னர் பிரபாகரனுக்காக சேவையாற்றிய கூட்டமைப்பு இன்று புலம்பெயர் அமைப்புக்களின் தேவைகளுக்காக செயற்படுகிறது. அவர்கள் தமிழ் மக்களுக்காக சேவையாற்றவில்லை என்றும் சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.