Monday, November 21, 2011

மாவீரர் வாரம்‏

மாவீரர்களின் மரணம் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு, புனிதமான ஒரு விடுதலைப்பயணத்தில் தம் இன்னுயிரை துறந்த அந்த உன்னத மனிதர்களின் நினைவை நெஞ்சில் நிறுத்தி அவர்களின் விடுதலைப்பயணத்தை தொடர்வதே ஒவ்வொரு தமிழரினதும் கடமையாகும், தமிழீழ விடுதலை என்ற நீண்ட பயணத்தின் பெறுமதிமிக்க மைல்க்கற்கள் எங்கள் மாவீரர்களே.

நவம்பர் மாதத்தின் 21ம் நாள்தொடக்கம் 27ம் நாள்வரையிலான ஒருவாரகாலம் எம் மாவீரர்களின் இலட்சியத்தியாகத்திற்க்காக அவர்களை வணங்கி நிற்க்கும் வாரம். விடுதலை என்பது மிக அதிக தியாகங்களினால் பெறப்படும் ஒன்று தமிழர்களின் அந்த விடுதலைக்காக தமது சொந்த வாழ்க்கையைத்துறந்து மிகப்பெரும் தியாகங்கள் புரிந்து வீரமரணம் அடைந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்.

நீர், உணவு, உறக்கம் என அவசியத்தேவைகளை மறந்து எம் மக்களின் விடுதலைக்கும், பாதுகாப்பிற்க்கும் அயராது பாடுபட்ட அந்த உன்னதமான எங்கள் உறவுகளை நிகழ்காலத்தின் கடவுள்கள் என்று சொல்வது எல்லாவிதத்திலும் தகும்.

எத்தனை இடரிலும் துயரினிலும்,இலட்சியத்தில் நிலைதடுமாறாமல் போராடி வீழ்ந்த அந்த உன்னத வீரர்களை நாங்கள் போற்றிவணங்கிய துயிலுமில்லங்கள் கூட நாகரிகமும், மனிதாபிமானமும்மற்ற கொடிய அரசுகளால் அழிக்கப்பட்ட போதும் தமிழர்களினது மனங்களிலிருந்து அழிக்கப்படவில்லை என்பது 2009 மாவீரர்தினத்திலிருந்து எதிரிக்கும், உலகுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த நிலையையும் மாற்றிவிட நினைக்கின்ற கயவர்களுக்கு இந்த வருட மாவீரர் எழுச்சிநாள் கோடிட்டு காட்டிவிடும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் எவ்வித குழப்பமுமில்லாமல் வழமைபோல இம்முறையும் மாவீரர்தினத்தில் கலந்து கொள்வார்கள் என்ற நிலை சமகால நிகழ்வுகளிலிருந்து தெரிகின்றது.

மாவீரர்வாரத்தின் இறுதி நாளில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தலைவரின் உரை நிகழும் அந்த நேரத்தை யாரும் பயன்படுத்தவோ, முக்கியமாக உரைநிகழ்த்தவோ வேண்டாமென எல்லாத் தமிழர்களையும் போல நாமும் சம்மந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம், அந்த நேரம் எமது தேசியத்தலைவரின் உரைநிகழும் உன்னத நிமிடங்களென்பதாலேயே இந்த வேண்டுகோள் என்பது புரிந்துகொள்ளப்படவேண்டும்.(இருண்ட மேகம் விலகும் போது தலைவர் உரை மீண்டும் இதே கார்த்திகை 27 - ல் உலகமெங்கும் ஒலிக்கும்) இவ்வேண்டுகோள் யாருக்கான புறக்கணிப்பல்ல, தேசியத்தலைவருக்கான மரியாதை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டுமென்பதே தமிழ்மக்களின் அவா.

ஒவ்வொரு தமிழரும் மாவீரர்வாரத்தில் இயலுமான வரை களியாட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து தமிழர் தேசிய எழுச்சிநாளை அனுட்டிக்க வேண்டுமென்பதே தமிழர்களின் வேண்டுகோள். புனிதமான அந்த வீரர்கள் உயிர்துறந்தது எமது சுதந்திர வாழ்க்கைக்காகவே. உலகம் வியர்ந்து நின்ற தமிழரின் வீரம் மங்கிவிடுவதில்லை என்பது நாமடையும் சுதந்திர தேசத்தின் எழுச்சியிலிருந்து வெளிப்படும், அதுபோல உள்ளங்களிலும் இல்லங்களிலும் தியாக உறவுகளின் நினைவெழுச்சியே எமது விடுதலைக்கும் உயிரூட்டும் என்பதே உண்மை.

"சத்திய இலட்சியத்தீயில் தம்மையே ஆகுதியாக்கிய மாவீரர்களின் வழியில் சென்று, நாமும் எமது இலட்சியத்தை அடைவோம்" என்ற தலைவரின் கூற்றுக்கிணங்க மாவீரர்களைப்போற்றி வணங்கி, அவர்களின் இலட்சியப்பயணத்தைத் தொடர்வோம்.

-ராஜேஸ் (விடுதலை பெற்று தமிழீழத்தில் சந்திப்போம்)

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.