Monday, November 07, 2011

மனோ கணேசனின் காலில் கடிதத்துடன் விழுந்த ரணில் விக்கிரமசிங்க (கடிதம் இணைப்பு)

கொழும்பு மாநகரசபையில் நாளை (08-11-2011) நடைபெறவுள்ள பலப்பரிட்சையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் ஐதேக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய (07-11-11) திகதியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொழும்பு மாநகரசபையில் மாநகரசபையின் முதல்வர் ஏ.ஜே.எம். முஸாமில் தலைமையிலான நிர்வாகம் சீராக நடைபெறுவதற்காகவும், சபையில் நிலையியற்குழுக்களை அமைப்பதற்காகவும் எங்களது ஐக்கிய தேசியக் கட்சி, உங்களது ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவை கோருகின்றது என்பதை எழுத்து மூலம் உங்களுக்கு அறியத்தருகின்றேன்.

இதுதொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் உள்ளடக்கத்தை நான் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்கின்றேன். இதுபற்றி மாநகர முதல்வருடன் கலந்தாலோசித்துள்ளேன்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை வரைபுடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கையை நான் அங்கீகரித்து மாநகர முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

இந்த உடன்படிக்கையை எமது கட்சியின் செயற்குழுவின் அங்கிகாரத்தின் பின்னர் நான் கையெழுத்திடுவேன் என்பதையும், சந்தேகத்திற்கு இடமில்லாத முறையிலே நீங்கள் அறிந்தப்படி நான் இன்று மாலை லண்டன் நோக்கி பயணமாகின்றேன் என்பதையும் உங்களுக்கு அறியத்தருகின்றேன்.

இங்ஙனம் தங்கள் உண்மையுள்ள ரணில் விக்கிரமசிங்க என ஐக்கிய தேசியக் கட்சியின் கடிதத்தலைப்பில் எழுதப்பட்டு, அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் கையெழுத்திடப்பட்டு ஜமமு தலைவர் மனோ கணேசனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்,

ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ள ஒரேயொரு மாநகரசபையான கொழும்பு மாநகரசபைக்கான எமது கட்சியின் ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமிசங்க எழுத்து மூலம் கோரியுள்ளார். அவர் கையெழுத்திட்டுள்ள கடிதம் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன் ஐதேகவுடன் நாம் ஏற்படுத்துகின்ற புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிற்சேர்க்கை பட்டியலின்படி எமது கட்சியின் உறுப்பினர்கள் மாநகரசபையில் பல்வேறு முக்கியமான நிலையியற்குழுக்களின் தலைவர்களாகவும், கணிசமான நிலையியற்குழுக்களின் அங்கத்தவர்களாகவும் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியுடனான எமது புரிந்துணர்வு உடன்படிக்கை வரைபில் தற்சமயம் பகிரங்கப்படுத்தப்படமுடியாத பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்விவகாரம் தொடர்பில் நாளை (08-11-11) காலை கொழும்பிலேகூடும் எமது கட்சியின் தலைமைக்குழு ஆராய்ந்து மாநகரசபையில் நமது அங்கத்தவர்கள் வாக்களிக்க வேண்டிய முறைமைப்பற்றி தீர்மானிக்கும்.

ஐதேகவுடன் நாம் ஏற்படுத்தவுள்ள உடன்படிக்கை பற்றி எமது கட்சியின் அரசியற்குழு அடுத்தவாரம்கூடி ஆராயும். ஐதேக தலைவர் நாடு திரும்பியவுடன் இந்த உடன்படிக்கை கையெழுத்தாகும். எது எப்படியிருந்தாலும் நாளை (08-11-11) நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கொழும்பு மாநகரசபையில் ஆதரவு வழங்குவோமானால், அது இவ்வருடம் டிசெம்பர் மாதம் 31ம் திகதி வரை மாத்திரமே செல்லுபடியாகும்.

அடுத்த வருடத்திற்கான நிலையியற்குழுக்கள் ஜனவரி மாதம் தெரிவுசெய்யப்படும் பொழுது எமது நிலைப்பாடுகளை மீண்டும் பரிசீலனைக்கு நமது கட்சி எடுக்கும் என்பதை எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், மாநகரசபை முதல்வர் ஏ.ஜே.எம்.முஸாமில் அவர்களுக்கும் நமது கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகரசபையின் முதலாம் அமர்வு நிறைவுப்பெற்ற பின்னர் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க எனக்கு எழுதியுள்ள கடிதத்திற்கான அரசியல் ரீதியான பதில் அவருக்கு அனுப்பப்பட்டு, ஊடகங்களுக்கும் வழங்கப்படும் என்றார்.

 

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.