Thursday, September 22, 2011

2 கொள்கலன்களில் தங்கம்: ஏப்பம் விட்டது யார் ?

தீவிரவாதிகள் தொடர்பிலான விசாரணைகளின் போது சந்தேகத்திற்குரியவர்களின் நிதி, வங்கிக் கணக்கு, மற்றும் உடைமைகளை நீதிமன்ற அனுமதி பெறாமலேயே முடக்கும் அதிகாரமிக்க சட்டத் திருத்தம் ஒன்று நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதி வழங்குவதை கட்டுப்படுத்தும் ஏற்பாடும் இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ளடங்குகிறது. வெளிநாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக உள்நாட்டில் சொத்துச் சேகரிக்கப்படும் நடவடிக்கையைத் தடுக்கவும் இந்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்திட்டங்களுக்கு அமைய இவ்வாறான சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே நிதி மற்றும் சொத்துகளைத் தடைசெய்ய முடியும். இப்புதிய சட்டத்தின் மூலம் நீதிமன்ற அனுமதியை பெறாமலே பாதுகாப்பு அமைச்சு சொத்துக்களையும் வங்கிக்கணக்குகளையும் முடக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இச்சட்ட மூல விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இறுதிக்கட்ட போரின்போது, அரச படைகளினால் மீட்கப்பட்ட இரண்டு கொள்கலன் தங்கத்திற்கு என்ன நடந்தது என கேள்வி எழுப்பினார். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இரண்டு கொள்கலன் தங்கம் மீட்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் அவற்றுக்கு என்ன நடந்துள்ளது என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை என்றும் இது தொடர்பில் அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனல் இதற்கு அரசாங்கத் தரப்பிடம் இருந்து எதுவித பதிலும் வரவில்லை. வழமையாக உடனே எழுந்து வாதிடும் அரசாங்க அமைச்சர்கள் இந்தவேளை மட்டும் பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டனராம்.

வன்னியில் மீட்கப்பட்ட இரண்டு கொள்கலன் தங்கமும் இதுவரை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் திறைசேரி கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று கோடிக்கணக்கான பணமும் மீட்கப்பட்ட போதும் அவை அரசாங்க திறைசேரி கணக்கில் வைப்பிலிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.