Tuesday, August 02, 2011

இறுதிப் போரில் பொது மக்கள் கொல்லப்பட்டது உண்மையே: ஏற்றுக் கொண்ட சிறிலங்கா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதை சிறிலங்கா அரசாங்கம் தனது அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றில் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டு கோத்தாபய ராஜபக்சவினால், நேற்று வெளியிடப்பட்ட மனிதாபிமானப் போரின் உண்மைசார்ந்த பகுப்பாய்வுகள் என்ற 161 பக்க அறிக்கையிலேயே இவ்வாறு பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுத்தாத கொள்கை பின்பற்றப்பட்ட போதிலும், வலிமைமிக்க எதிரியின் முன்னால் அதை கடைப்பிடிக்க முடியாமல் இருந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெளிவான உத்தரவுகளை வழங்கியிருந்த போதும், புலிகளின் இரக்கமற்ற செயற்பாடுகளின் முன்னால் அது முடியாமல் போனதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு ஜுன் மாதம் போர் வெற்றி கொள்ளப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வில், உரையாற்றிய போது எந்தவொரு பொதுமகனும் தமது படையினரால் கொல்லப்படவில்லை என்று கூறியிருந்தார்.

அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அடியோடு நிராகரித்து வந்தது.

இந்தநிலையிலேயே சிறிலங்கா அரசின் அதிகாரபூர்வ அறிக்கை போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை முதல்முறையாக ஏற்றுக் கொண்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

ஆனால் போரில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றிய எந்தத் தரவுகளையும் பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.