ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் முப்படையினரையும் 25 மாவட்டங்களிலும் பொது அமைதியை ஏற்படுத்துமாறு அழைப்பு விடுத்திருப்பதானது நாட்டை இராணுவ மயமாக்கலின் பக்கம் இட்டுச் செல்வதாக அமையப் போகின்றது என்ற பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்திருப்பதாக அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.2011 ஆகஸ்ட் 6 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 1717/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்ட (40 ஆம் அத்தியாயத்தின் பிரகாரம்) பின்வரும் கட்டளையைப் பிறப்பித்திருக்கிறார்.
40 ஆம் அத்தியாய பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு ஜனாதிபதியாகிய நான் இக்கட்டளையின் மூலம் இதற்கான இரண்டாம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட இடப்பரப்புகளில் பொது அமைதியைப் பேணுவதற்காக இதற்கான முதலாம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட எல்லா ஆயுதம் தாங்கிய படை உறுப்பினர்களையும் அழைக்கின்றேன்.
முதலாம் அட்டவணைப்படி இலங்கை தரைப்படை, இலங்கை கடற்படை, இலங்கை வான்படை என்பனவாகும். இரண்டாம் அட்டவணைப் பிரகாரம் நாட்டிலுள்ள சகல நிர்வாக மாவட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் இந்த வர்த்தமானிப் பிரகடனத்தின் மூலம் முப்படையினரையும் அமைதியைக் காக்க அழைக்கப்பட்டுள்ளனர். அமைதியைக் காக்கும் பொறுப்பு சாதாரணமாக பொலிஸ் படையினரிடமே இருந்து வந்தது.
அந்தப் பொறுப்பை படைத்தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இச் செயற்பாடான நாட்டை படிப்படியாக இராணுவ மயமாக்கலின் பக்கம் கொண்டு செல்வதாகவே அவதானிக்க முடிவதாக ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்திருக்கிறார்.
வடக்கிலும் கிழக்கிலும் தனது முழு அளவிலான இராணுவ மயமாக்கல் இருந்து வந்தது. அன்று நிருவாக சேவைக்குட்பட்ட இராணுவத்திலிருந்து விலகியவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இப்போது வடக்கு கிழக்குடன் தென்னிலங்கையையும் உள்வாங்கி முழு நாட்டையும் இராணுவ மயமாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முனைவதையே இந்த உத்தரவு காட்டுகின்றது.
அவசரகாலச் சட்டத்தை விரைவில் நீக்கப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் மறுபுறத்தில் இராணுவ மயமாக்கலைக் கொண்டு வரும் முயற்சியிலீடுபட்டுள்ளது. தெற்கில் மீண்டும் ஸ்திரமற்ற நிலை தோற்றுவிக்கப்படக்கக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் இந்த நடவடிக்கையின் மூலம் மீண்டும் நாட்டில் கிளர்ச்சியொன்றைத் தோற்றுவிக்கும் ஒரு நடவடிக்கையின் ஆரம்பமாக இதனைக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் யோகராஜன் எம்.பி.சுட்டிக்காட்டினார்.
மர்ம மனிதர் நடமாட்ட விடயத்திலும் கூட “பின்னணி’ ஒன்று இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அது கூட தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் கூடுதலாக வாழும் கிழக்கிலும் மலையகத்திலுமே இச் செயற்குழு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.