Friday, June 17, 2011

வடக்கில் சுதந்திரமான சூழல் ஏற்படவில்லை – கெபே!

வடக்கில் சுதந்திரமாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழல் இன்னும் ஏற்படவில்லை என்பதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தின் மீதான தாக்குதல் உணர்த்துவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகின்றமை இந்த சம்பவத்தின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கெபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தமது கொள்கைகளை மக்கள் மத்திக்கு எடுத்துச் செல்வதற்குரிய சந்தர்ப்பம் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், வட மாகாணத்தில் இத்தகைய நிலைமை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மீண்டும் மீண்டும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதாக கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் கீழ் யாழ் குடாநாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையத்திற்கு இதுவரை எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் யாவும் வடபகுதியில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றிருந்ததாக அந்த நிலையத்தின் தேசிய இணைப்பதிகாரி ரசாங்க ஹரிஸ்சந்திர குறிப்பிட்டார்.

இந்த நிலைமை எதிர்காலத்திலும் நீடிக்கும் என தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.