வன்னி யுத்த வெற்றியைக் குறிக்கும் வகையில் சிங்கள மொழியிலமைந்த கொடிகள் யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு நிதி சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த மே 27 ஆம் திகதி முல்லைத்தீவில் இடம்பெற்ற பாதுகாப்புப் படையினரின் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களையொட்டி இந்தக் கொடிகள் தயாரிக்கப்பட்டதாகவும் வலயக் கல்வித் திணைக்களங்களூடாகக் குடாநாட்டின் பாடசாலைகளுக்கு இவை வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களிடமிருந்து இந்தக் கொடி விற்பனை மூலம் நிதி சேகரிக்கப்பட்டு அந்த நிதி பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் செயற்பாடு தொடர்பாகப் பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எமது உறவுகளின் அழிவுக்கு காரணமானவர்களுக்கு நாம் நிதியுதவி செய்ய வேண்டுமா? என வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்தில் வந்து தங்கியுள்ள பெற்றோர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இந்தக் கொடிகளில் தமிழ் மொழியில் ஏதும் குறிப்பிடப்படாததனால் இவை என்ன? எதற்காக விற்கப்படுகிறன? என்ற தெளிவும் இல்லாமல் அதிபர்களும் பாடசாலை மாணவர்களும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டையும் அரசகரும மொழிகள் பயன்பாட்டையும் கண்காணித்து அவற்றை அமுல்படுத்தும் பொறுப்பு சிரேஷ்ட அமைச்சர் வாசுதேவநாணயக்காரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூத்த அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்கார ஆரம்பம் முதலே சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பவர். இந்த நிலையில் இந்த விடயத்தில் அவர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.