Friday, May 20, 2011

21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா போர் வீரன் பால்ராஜ்

தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான்; பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.

தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர்” என்று தேசியத்தலைவர் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர்.

ஒப்பற்ற இராணுவத் தலைமைத்துவம், கடுமையான உழைப்பு என்பவற்றின் ஊடாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றிய பெருமைக்குரியவர். வெற்றி நாயகனாய் வலம் வந்த அந்த தளபதி வித்தாகி மூன்று ஆண்டுகள் மறைந்து விட்டாலும் அவருடன் நீண்டகாலமாக பயணித்த அந்த நாட்களின் நினைவுகள் என்றைக்குமே அழியாதவை. ஒவ்வொரு கணமும் வந்து போகும் அவரைப்பற்றிய நினைவுகள், தொடர் துன்பங்களால் துவண்டுபோன உணர்வுகளின் அடிநாளத்தை உரசிச் செல்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அழகிய கரையோரக் கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய்தான் வீரத்தளபதி பால்ராஜ் அவர்களை எமக்குக் கொடுத்தது. ஒருபக்கம் பெருங்கடல் மற்றைய பக்கம் சிறுகடல் சூழ்ந்திருக்க, வயல் வெளிகள் தென்னைத்தோப்புகள் அதனைத் தொடர்ந்து காடு என அழகான அமைதியான அந்தக் கிராமத்தில் கந்தையா கண்ணகி தம்பதியினருக்கு 1964 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 ம் திகதி (தமிழீழ மாவீரர் தினம் கொண்டாடும் நாள்) பிறந்த இவர் ஆரம்பகல்வியை கொக்குத்தொடுவாயிலும் பின்னர் புல்மோட்டையிலும் படித்தார்.

அவரது வாழ்வியல் சூழல் இளவயது முதலே வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவராக ஆக்கியது. அதனால் அப்பகுதி காடுகள், பிரதேசங்களை முழுமையாக தெரிந்து வைத்திருந்தார்.

வேட்டையாடுவதற்கு தேவையான அடிப்படை விடயங்களான அவதானிப்பு, கடுமையான முயற்சி, கடினங்களை தாங்கும் தன்மை, அலைந்து திரிதல், மிருகங்களின் தன்மைகளுக்கேற்ப தந்திரோபாய ரீதியல் வேட்டையாடல், பொறுமை, மிருகங்களின் தடையங்களை பின்தொடர்ந்து செல்லுதல் போன்ற பண்புகள் சிறுவயது முதல் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன. அது மட்டுமல்லாமல் வேட்டைக்கு சென்றால் ஒருபோதும் வேட்டையில்லாமல் திரும்பமாட்டார் என்னுமளவிற்கு ஓர்மம் மிக்க குணாதியசம் கொண்டவர்.

இவர் பிறந்து வளர்ந்த மணலாறு என அழைக்கப்படும் சிலோன் தியட்டர், மண்கிண்டிமலை முந்திரைக்குளம், கென்பாம், டொலர்பாம் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்ற தொழில் வாய்ப்புள்ள, வளம் மிக்க விளைநிலங்களை கொண்ட பகுதிகளில் இருந்த தமிழ்மக்களை விரட்டியடித்து, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்குடன் இலங்கை அரசானது செயற்பட்டது. இதனால் அவரது குடும்பம் உட்பட அங்கு வாழ்ந்த மக்களும் அவரது உறவினர்கள் பலரும் வாழ்விடங்கள் சொத்துக்களை இழந்து ஓரிரவில் அகதிகளாக்கப்பட்டனர். இச்சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக ஆயுதப் போராட்டத்தினுடாகவே எமது பிரதேசங்களை பாதுகாக்க முடியும் என்று முடிவெடுத்தார். இவரது போக்கை உணர்ந்த தந்தையார் “நீ போராட தீர்மானித்தால் பிரபாகரன் இயக்கத்தில் இணைந்து போராடு, அந்த இயக்கம் தான் சரியான வழியில் போராடும்” என சொல்லி வழிகாட்டியதை பால்ராஜ் அவர்கள் நினைவுகூருவார்.

அவர் 1983ம் ஆண்டு விடுதலைப் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டார். கொக்குத் தொடுவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவருக்கு மணலாறு, தென்னமரவடி, புல்மோட்டை உள்ளடங்கலாக அப்பிரதேசங்கள் முழுதும் பரீட்சயமாக இருந்தது. ஆரம்பத்தில் உள்ளுர் பயிற்சியுடன் வழிகாட்டியாகத் தனது பணியை செய்து கொண்டிருந்த காலத்தில் 1984ம் ஆண்டு ஒதியமலையில் உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்தபோது இலங்கை இராணுவத்தின் பதுங்கித் தாக்குதலில் லெப் காண்டிபன் உட்பட 09 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதில் தோள்பட்டையில் காயமடைந்து சிகிச்சைக்காக இந்தியா சென்றார். அதன் பின்னர் இந்தியா-09 பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.


மேஜர் பசீலன் அவர்களுடன்


நாடு திரும்பிய அவர் வன்னி அணியுடன் இணைந்து அணிக்கான சமையல் பணிகளை செய்து வந்தார். இவரது பல்வேறுபட்ட திறமைகளை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட தளபதியாகவிருந்த பசீலன் அவர்கள் முல்லைத்தீவு அணியுடன் இணைந்து பணியாற்ற அழைத்துச் சென்றார். அவரது செயற்பாடுகளினால் சில நாட்களிலேயே பசீலன் அவர்களின் நம்பிக்கைக்குரியவரானார்.

முந்திரிகைக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல், கிளிநொச்சி திருநகர் முறியடிப்புத் தாக்குதல், என பல தாக்குதல்களில் பசீலன் அண்ணையுடன் பங்கெடுத்திருந்தார். அது மட்டுமன்றி இந்திய இராணுவத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் கோப்பாயில் நடந்த சமரில் ஆர்.பி.ஜி யால் டாங்கி ஒன்றை தகர்த்து பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினார்.

1987 ம் ஆண்டு முல்லைத்தீவு முகாமிலிருந்து நந்திக்கடற்கரை வெளியினூடாக, தண்ணீரூற்று நகரப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் நகர்ந்த இந்தியப்படைகளை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டிருந்த போது பசீலன் அண்ணை வீரச்சாவடைந்தார். தளபதியை இழந்த நிலையில் உடனடியாக அக்களமுனை கட்டளையை பொறுப்பெடுத்த பால்ராஜ் அவர்கள், தனக்கேயுரிய தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தி தாக்குதலைத் தொடர்ந்து வழிநடத்தினார். பல சண்டைகளில் தனது சண்டைத்திறனை வெளிப்படுத்தினாலும் இச்சண்டையே அவரது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலையும் சண்டைத்திறனையும் தலைவருக்கு வெளிக்காட்டியது.

தளபதி பசீலன் அண்ணையின் இழப்பினால் துயரமும் கோபமும் அடைந்த தளபதியும் போராளிகளும், பசீலன் அண்ணைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தாக்குதல் ஒன்றை செய்யும் நோக்குடன் ஓய்வின்றி திரிந்தனர். அவர்களின் முயற்சி வீணாகவில்லை. பழம் நழுவி பாலில் விழுவதைப்போல பசீலன் அண்ணையின் இழப்பிற்கு காரணமான இருந்த இந்திய அணியே தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால் ரோந்தில் சென்று கொண்டிருந்த போது இவர்களின் தாக்குதல் எல்லைக்குள் வந்தது. கோபத்துடன் இருந்த போராளிகள் அனைவரும் ஆவேசமாக தாக்குதலை மேற்கொண்டு வந்த படையை நிர்மூலமாக்கினர். அத்துடன் உதவிக்கு வரும் அணியையும் அழிக்க வேண்டும் என பொருத்தமான இடத்தில் நிலையெடுத்துக் காத்திருந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே உதவிக்கு வந்த அணியையும் அழித்து மொத்தமாக இருபந்தைத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தை கொன்று இழந்த தளபதிக்கு அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

பசீலன் அண்ணை “எல்லோரையும் மிரளவைக்கும் துணிச்சல்காரன், சிறந்த திட்டமிடலான பல தாக்குதல் உத்திகளையும் அவரிடம் அறிந்து கொண்டேன் அவருடனிருந்த நாட்கள் பசுமையானவை” என பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் கூறுவார்.

தலைவருடன்

தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பால்ராஜ் அவர்கள் இந்தியப்படையினர் மணலாற்றுக் காட்டை முற்றுகையிட்டு தலைவரை குறிவைத்துப் பல இராணுவ நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருந்தபோது தலைவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையிலும், தலைவரைச் சந்திக்க வருபவர்களை முற்றுகைக்குள்ளால் நகர்த்தும் பணிகளையும் செய்து வந்தார். இச்சமயத்தில், தலைவர் காட்டிலிருப்பது பாதுகாப்பில்லை எனவே வெளியேறி வேறு நாட்டுக்கு செல்லுமாறு சில விடுதலை விரும்பிகள் கேட்;டபோது “என்ர இனத்தின்ற கௌரவத்தையும் என்னையும் விற்கவேண்டாம் எனக்கு என்ன நடந்தாலும் அது இங்கேயே நடக்கட்டும் பிரபாகரன் தப்பி ஓடியதாக இருக்கக்கூடாது போராடி வென்றான் அல்லது வீரமரணமடைந்தான் என்றுதான் வரலாற்றில் இருக்க வேண்டும்” என்ற செய்தியை சொல்லும்படி தலைவர் ஆக்ரோசமாக கூறியதை போராளிகளுடன் பகிர்ந்து கொள்வார்

வன்னிப்பிராந்திய தளபதியாக

முல்லைத்தீவு, நெடுங்கேணி பாடசாலையில் அமைந்திருந்த இந்தியப்படையினர் முகாம் மீதான தாக்குதல் நடவடிக்கையில் தளபதி லெப்.கேணல் நவம் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இதன் பின்னர் பால்ராஜ் அவர்களை அழைத்த தலைவர் “இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை மேலும் பரவலாக்கும் போது தான் கூடுதலாக இராணுவத்தை மணலாற்றை நோக்கி ஒன்று சேர்க்கமுடியாது. அது தான் மணலாற்றை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள்ளிருந்து தளர்த்துவதற்கான வழிமுறை” எனவே முல்லைத்தீவில் மட்டுமல்ல வன்னியெங்கும் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் எனக்கூறி, வன்னி பெருநிலப்பரப்பின் தளபதியாக நியமித்தார்.

பால்ராஜ் அவர்கள் பசீலன் அண்ணையிடம் கற்றுக்கொண்ட சண்டை அனுபவம் மற்றும் தலைவருடன் இருந்த காலத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட தலைமைத்துவம், சண்டைத் தீர்மானங்கள், நிர்வாகம், அரசியல், போன்றன அவரின் தலைமைத்துவத்தை மேலும் செம்மைப்படுத்துவதற்கு வாய்ப்பளித்தது. பொறுப்பை ஏற்ற தளபதி பால்ராஜ் அவர்கள் முதலில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்குடன், அம்மாவட்டங்களில் இருந்த போராளிகளை சந்தித்து தலைவரின் எண்ணத்துடன் புதிய தாக்குதல் உத்திகளையும் அறிவுரைகளையும் வழங்குவதற்காக நடைப்பயணம் ஒன்றை மேற்கோண்டார். ஆனாலும் வெறும் நடைப்பயணம் என்ற நோக்கைத் தாண்டி சென்ற இடங்களிலெல்லாம் தென்படும் இராணுவத்தின் மீது உடனடி தாக்குதல்களை மேற்கொண்டார். இத்தாக்குதல்கள் போராளிகளுக்கு மேலும் தெம்பைக் கொடுத்தது.

பால்ராஐ; அவர்களை தனது போர் ஆசானாக கொண்ட தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் இந்திய இராணுவத்துக்கு எதிரான தாக்குதல் பற்றி தெரிவிக்கும் போது “மணலாற்றில் தலைவரிடத்தில் இருந்து வந்து மூன்று மாவட்டங்களிற்கும் நடைப்பயணம் செய்து போராளிகளைச் சந்தித்து ஊக்கப்படுத்தி, தாக்குதல் திட்டங்களையும் கொடுத்து, தலைவரின் கட்டளைகளையும் வழங்கி ஒரு பம்பரம் போல் சுழன்று திரிந்தார். அவர் நடந்து போய் வருகின்றாரா! வாகனத்தில் போய் வருகின்றாரா! என்று எங்களுக்குள் பேசுவது வழமை. அந்தளவுக்குப் பயணத்தில் வேகம், வேலை முடிந்ததும் உடனடியாகவே அடுத்த பயணம், அவரின் முகத்தில் சோர்வோ களைப்போ தெரிவதில்லை. படையினர் மீதான தாக்குதல் என்று வரும் போது வேவு பார்த்து - திட்டமிட்டுத் தாக்குவது வழமை. எதிரிப்படை எதிர்ப்படும் போது உடனடியாகவே திட்டம் தீட்டித் தாக்குதல்களை நடாத்துவது கடினம். ஆனால் இது கடினமானது என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது என்று பால்ராஜ் நினைப்பதில்லை. எதிரி தென்பட்டால் உடனடியாகத் தாக்கு என்பது அவரின் கருத்து”. என்று கூறியுள்ளார்.

இந்திய கொமாண்டோக்களின் பதுங்கித் தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்

தளபதி பால்ராஜ் அவர்களைப் பொறுத்தவரையில் சண்டைகளை சவாலாக எடுத்துச் செய்வது இயல்பு. மணலாற்றை இந்திய இராணுவம் இறுக்கமான முற்றுகைக்குள் வைத்திருந்த காலப்பகுதியில் முக்கிய பயணம் ஒன்றை மேற்கொண்டு நெடுங்கேணி பழம்பாசி காட்டுப்பகுதியில் சிறு அணியுடன் சென்று கொண்டிருந்தார். நகர வேண்டிய காட்டுப்பாதையில் இருந்த தடயங்களை வைத்து இந்தியப்படையின் விசேட கொமாண்டோக்களின் தடையம் என்பதை ஊகித்துக் கொண்டார். நாங்கள் செல்ல வேண்டிய பாதையில் ஏதோ ஒரு இடத்தில் எதிரி நிலையெடுத்திருப்பான் என்பதை புரிந்து கொண்ட தளபதி பயணத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தாக்குதலை மேற்கொள்பவனுக்கெதிராக தாக்குதலை மேற்கொள்வோம் என முடிவெடுத்தார். எதிரியின் பதுங்கித்தாக்குதலை எதிர்கொள்ளக்கூடிய வகையில் உடனடித்திட்டம் ஒன்றை வகுத்தார்.

அதன்படி அணிகளை இரண்டாக பிரித்து, முன்னே லெப்.கேணல் நவநீதன் தலைமையில் ஒரு அணியும் குறிப்பிட்ட இடைவெளியில் மறுஅணியும் நகர வேண்டும். எதிரி எந்தப்பக்கத்திலிருந்தும் தாக்குதலை மேற்கொள்ளலாம். எனவே எதிரி தாக்குதலை மேற்கொண்டால்; முன்னால் செல்லும் அணி தாக்குதலை எதிர்கொள்ள மறு அணி பக்கவாட்டால் காட்டுக்குள் இறங்கி, வளைத்து பின்பக்கத்தால் தாக்க வேண்டும் என்பதை விளக்கிவிட்டு, எதிரியின் தாக்குதலை எதிர்பார்த்துக் கொண்டு அவதானமாகவும் மெதுவாகவும் நகரத் தொடங்கினார்கள். திடீரென, இயல்புக்கு மாறாக இருந்த பற்றைகள் மரங்ககளிற்கிடையில் எதிரி நிலையெடுத்திருப்பதை லெப்.கேணல் நவநீதன் திடீரென்று நின்று அவதானித்ததை குறிப்புணர்ந்த தளபதி மறுஅணியை பக்கவாட்டால் வளைக்குமாறு சைகை காட்ட, நவநீதன் தனக்கு அருகே இருந்த இராணுவத்தை சுட்டுக்கொண்டு வேகமாக எதிரிக்குள் நுழைந்து தாக்குதலை தொடர, மறு அணியும் பக்கவாட்டால் வளைத்து பின்பக்கமாக தாக்குதலை செய்தனர். எதிரி சுதாகரிப்பதற்குள் முழு இராணுவத்தையும் அவர்கள் நிலையெடுத்திருந்த இடங்களிலேயே கொன்று மயிர்கூச்செரியும் தாக்குதலை நடாத்தி முடித்தனர்.

இந்திய இராணுவத்தின் பதுங்கித்தாக்குதலை முறியடித்த சண்டையானது பால்ராஜ் அவர்களினது துணிவு, போர் உத்தி, சண்டையிடும் திறனை வெளிப்படுத்திய முக்கியமான சண்டைகளில் ஒன்று. குறிப்பாக இந்திய இராணுவத்தை அதிர்ச்சி, வியப்புக்குள்ளாக்கிய சண்டையாகும். ஏனெனில் பதுங்கித்தாக்குதலை மேற்கொள்ளும் போது நகரும் பாதை, எதிராளிகளின் ஆயுதபலம், ஆட்கள் தொகை போன்ற தகவல்களின் அடிப்படையில் பதுங்கித்தாக்குதல் திட்டமிடப்படும். பின்னர் தாக்குதலிற்கான கொலைவலயத்தை உருவாக்கி, பொருத்தமான ஆயுதங்களுடன் உருமறைத்து, நிலையெடுத்து தாக்குதலை மேற்கொள்வதுதான் தாக்குதலிற்கான அடிப்படை உத்தி. அத்துடன் உலகத்தின் நான்காவது வலிமையான இராணுவம் தனது சிறப்புப்படைகளை வைத்து திட்டமிடும் பதுங்கித்தாக்குதலை சாதாரண விடயமாக எடுத்து விட முடியாது. பல பதுங்கித் தாக்குதல்களை வெற்றிகரமாக செய்த அனுபவம் மிக்க பால்ராஜ் அவர்கள் அதிலிருக்கும் ஆபத்தை உணர்ந்து அப்பாதையைத் தவிர்த்து வேறுபாதையால் சென்று இருக்கக்கூடிய வாய்ப்பிருந்தது.
அப்படியிருந்தும் இந்தசந்தர்ப்பத்தில் பதுங்கித்தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை செய்வோம் என்று (அவருடைய மொழியில் இன்டைக்கு ரென்டில ஒன்டு பாப்பம் அவனா? நானா? எண்டு) தீர்க்கமாகவும் தற்துணிவாகவும் முடிவெடுத்து அப்பதுங்கித் தாக்குதலுக்கான முறியடிப்புத் தாக்குதலை எதிர்கொண்டு, வென்று காட்டி தனக்கென்று ஒரு தனிமுத்திரை பதித்தார். இத்தாக்குதல் நடவடிக்கை விடுதலைப்புலிகள் மீது இந்திய இராணுவத்திற்கு மேலும் அச்சத்தை கொடுத்ததுடன் போராளிகளுக்கு மேலதிக தெம்பையும் உத்வேகத்தையும் கொடுத்தது. இது போன்ற பல தாக்குதல் நடவடிக்கைகள் பால்ராஜ் அவர்களை சிறந்த தளபதியாக தனித்துவமாக அடையாளம் காட்டின.

இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின்னர், வன்னியின் இராணுவம், அரசியல், அபிவிருத்தி போன்ற எல்லா பணிகளையும் ஒருங்கிணைத்தார். இந்திய இராணுவ காலத்தில் தங்களுக்கு உதவி செய்த வீடுகளுக்கெல்லாம் சென்றதுடன் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து இயன்றளவு அவர்களிற்கு உதவிகள் செய்தார். மக்களின் பிரச்சனைகள் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை அறிந்து உதவி செய்தார் அந்தளவிற்கு மக்களை நேசித்த தளபதியவர்.

கொக்காவில் முகாம் வலிந்ததாக்குதல்


இலங்கை இராணுவத்துடனான ஈழப்போர்-02, 1990 ம் ஆண்டு மத்தியில் தொடங்கியது. முதலில் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அம்முகாமின் ஒரு பகுதி வீழ்ந்தாலும் சண்டையை தொடர்ந்து நடாத்துவதிலுள்ள பாதக நிலையை உணர்ந்து உடனடியாக சண்டையிலிருந்து பின்வாங்கினர். பின்னர் கிளிநொச்சி படைமுகாம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் முயற்சியும் கைகூடவில்லை. தொடர்ந்து முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இந்த முகாம்கள் அழிக்கப்படாவிட்டால் வன்னி பெருநிலப்பரப்பின் மேலாதிக்கம் விடுதலைப்புலிகளிடம் இல்லாமல் போவது மட்டுமல்லாமல் மக்களும் பாரிய சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி நேரிடும். அத்துடன் ஏற்கனவே மூன்று முகாம் தாக்குதல்களும் வெற்றியளிக்காத நிலையில் இந்த முகாமை எப்படியும் கைப்பற்றியே தீரவேண்டும் என்ற உறுதியான முடிவுடன் கொக்காவில் முகாமைத் கைப்பற்றுவதற்காக தாக்குதலை ஆரம்பித்தார்.

முதல் நாள் கடுமையான சண்டை, சில பகுதிகள் கைப்பற்றப்பட்டது அதேவேளை துணைத்தளபதியாகவிருந்த தளபதி தீபன் அவர்களும் வேறு சில தளபதிகளும் காயமடைந்திருந்தனர். கடுமையான சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. நிலைமையினை உணர்ந்த பால்ராஜ் அவர்கள் ஏற்கனவே மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு முகாம்களை கைப்பற்றமுடியவில்லை, இதிலும் தோல்விகண்டால் போராளிகளின் உளவுரண் பாதிப்படையலாம். அதுமட்டுமன்றி இராணுவத்தின் உளவுரண் அதிகரிக்கலாம். அத்தகைய வாய்ப்பை வழங்கக்கூடாது என்ற உத்வேகத்துடன் போராடினார். கொக்காவில் முகாமை எப்படியாவது கைப்பற்றியே தீர வேண்டும் என்ற தீர்மானமான முடிவிலிருந்தார். தளபதி தீபன் அவர்கள் காயமடைந்ததுடன் களமுனைக்கே சென்று அணிகளை மீள் ஒழுங்குபடுத்தி, கட்டளைகளை வழங்கிக் கொண்டு தானும் ஒரு பக்கமாக இறங்கி சண்டையில் ஈடுபட்டார். பால்ராஜ் அவர்களும் இறங்கி சண்டையிடுகின்றார் என்றவுடன் போராளிகள் மேலும் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொள்ள, சில மணிகளில் முகாம் முற்றாக அழிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதன்முதலாக கைப்பற்றி அழிக்கப்பட்ட முகாம் தாக்குதலாக அது பதிவாகின்றது.

மாங்குளம் முகாம் வலிந்ததாக்குதல்

இதனைத் தொடர்ந்து மாங்குளம் முகாமை மீள தாக்கியழிக்க வேண்டும் என்று நோக்குடன் களப்பணிகளை முடுக்கிவிட்டார். ஏற்கனவே தாக்குதலை மேற்கொண்டு பின்வாங்கிய முகாம் என்பதால் அடுத்த முயற்சி தோல்வியடையக்கூடாது என்ற முடிவுடன் தாக்குதல் திட்டம் தயாரிக்கப்படுகின்றது. அம்முகாமின் இரு முனைகளில் தாக்குதலை நடாத்தி எதிரியை பலவீனப்படுத்தி கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு முகாமை கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகின்றது. பசீலன் ஷெல் தாக்குதலுடன் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலின் முகாமைச் சுற்றியிருந்த காவலரண்கள் முதலில் வீழ்ச்சியடைந்தன. அதன் பின்னர் கரும்புலித் தாக்குதலை கரும்புலி லெப்.கேணல் போர்க் மேற்கொள்ள, காவலரண்களையும் மினிமுகாம்களையும் உடைத்துக் கொண்டு முன்னேறிய அணிகள் பிரதான முகாமிற்கு அருகிலிருந்த ‘வானூர்தி’ இறங்குதளத்திற்கு அருகில் பலமான எதிர்த்தாக்குதலுக்கு முகம்கொடுத்தன. ஏனெனில் வானூர்தி தளத்தை தாம் இழந்தால் மேலதிக உதவியை எடுக்க முடியாமல் அழிந்துவிடுவோம் என்ற நிலைப்பாட்டில் இராணுவம் மூர்க்கத்தனமாக மோதியது.

அதேவேளை முகாமின் தென்பகுதி வயல் வெளியால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் இழப்பின் காரணமாக பின்வாங்கப்படுகின்றது. அகோர விமானத்தாக்குதல்களிற்கு மத்தியிலும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. இழப்புகளின் அளவும் கணிசமாக உயர்ந்து கொண்டிருந்தது. நிலைமைகளை அறித்த தலைவர் விரைவாக முகாமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு அறிவுறுத்தினார். சண்டையின் வியூகத்தை மாற்ற நினைத்த தளபதி, துணைத்தளபதி தீபன் அவர்களை கட்டளைமையத்தில் சண்டையை ஒழுங்குபடுத்தும்படி விட்டு விட்டு, வானூர்தித் தளத்தில் சண்டையிடும் எதிரியை சுற்றி வளைத்து தாக்கியழிக்க வேண்டும் என முடிவெடுத்தார். லெப்.கேணல் நவநீதன் தலைமையில் சிறப்பு அணியொன்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு சென்றார். பகல் வேளையாக இருந்த போதிலும் பொருத்தமான இடத்தில் தாக்குதலை மேற்கொண்டு வானூர்தித் தளத்தை கைப்பற்றினார். வானூர்தி தளம் கைப்பற்றப்பட்டவுடன் தமது தோல்வியை உணர்ந்த எஞ்சியிருந்த இராணுவத்தினர் பின்வாங்கி வவுனியாவில் அமைந்திருந்த இராணுவ முகாம் நோக்கி தற்பாதுகாப்புத் தாக்குதலை மேற்கொண்டு கொண்டு ஓடத்தொடங்கினர். அவர்களும் ஆங்காங்கே கொல்லப்பட்டனர். இச்சமரில் பெருந் தொகையான இராணுவத்தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக 50 கலிபர் துப்பாக்கி முதன்முதலில் இத்தாக்குதலின் போது கைப்பற்றப்பட்டது.

சாள்ஸ் அன்ரனி படையணியின் தலைமைத்தளபதியாக

இரண்டாம் கட்ட ஈழப்போரில் இவரது தாக்குதல் வெற்றிகள் இராணுவ ரீதியில் பரிமாண வளர்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்ததுடன் போராளிகளின் உளவுரன், மனோதிடத்தை வளர்த்து சிங்களப்படையை கதிகலங்க வைத்தது. அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவத்தை ஒர் மரபுவழி இராணுவமாக வளர்த்தெடுக்க தீர்மானித்த தலைவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது மரபுவழிப்படையணியான சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையை 1991 ம் ஆண்டில் உருவாக்கினார். சண்டைகளின் தன்மைகளிற்கேற்ப புதிய புதிய உத்திகளை வகுக்கும் பண்பு, சண்டையிட்டுக்கொண்டே தாக்குதலை தலைமை தாங்கும் தலைமைத்துவப்பண்பு, தாக்குதலின் போது எல்லா களச்சூழல்களையும் தனக்கு சாதகமாக மாற்றும் திறமை, சிறந்த வேவு ஆற்றல், திட்டமிடல், நிர்வாகம் போன்றன அடிப்படை ஆற்றல்களைக் கொண்ட பால்ராஜ் அவர்களை சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதியாக்கினார். துணிவு, தந்திரம், கடும்பயிற்சி போன்றவற்றை தாரக மந்திரமாக கொண்டு தலைவரின் எதிர்பார்ப்பிற்கமைவாகவும், ஆலோசனைக்கமைவாகவும் வலிமை மிகுந்த படையணியாக உருவாக்க தலைவரது சிந்தனைகளையும் தனது போர் அனுபவங்களையும் போராளிகளுடன் பகிர்ந்து, சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியை ஒரு வலிமை மிகுந்த படையணியாக உருவாக்கினார்.

மரபுவழிப்படையணியாக உருவாக்கிய அப்படையணியிடம் இருந்த இலகு மற்றும் கனரக ஆயுதங்களை மட்டும் வைத்தே பல வெற்றிகரமான தாக்குதல்களையும் புதிய உத்திகளுடன் கூடிய மூலோபாயத் தாக்குதல்களையும் செய்து காட்டினார். குறிப்பாக வன்னி விக்கிரம எதிர்தாக்குதலில் 50 கலிபர் துப்பாக்கியை பயன்படுத்தி உலங்குவானூர்தி அழிக்கப்பட்டது. 1991 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பினால் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல் நடவடிக்கையான ஆ.க.வெ தாக்குதல் நடவடிக்கையில் கிளிநொச்சி உப்பளப்பக்கத்தால் தாக்குதலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக செய்து முடித்தார். பின்னர் மணலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மின்னல் எதிர்ச்சமர், அளம்பில் ஒப்பிறேசன் 7 பவர் எதிர்ச்சமர், கொக்குத்தொடுவாயில் இருந்து முன்னேறிய இராணுவத்தை தாக்கி பின்வாங்க வைத்ததுமல்லாமல் முதன்முதலில் ஆர்.சி.எல் கைப்பற்றிய சமர் போன்ற பல சமர்களை வெற்றிகரமாக நடாத்தினார்.

மூலோபாயத் தாக்குதல்கள்

தலைவர், தளபதியிடம் சண்டைகள் பற்றி ஆலோசித்துக்கொண்டிருக்கும் போது “இப்படியே ஒவ்வொரு காவலரணாக மட்டும் தாக்கியழித்துக் கொண்டிருந்தால் எப்படி நாம் இராணுவத்தை அப்புறப்படுத்த முடியும். பாரியளவில் இராணுவத்தை தாக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்” இதனை புரிந்து கொண்ட தளபதி கிளிநொச்சி, தட்டுவன்கொட்டியில் இருந்த இராணுவ காவலரண்களை வேவு பார்த்தார். இராணுவத்தின் பாதுகாப்பு நிலைகளை விரைவாக தாக்குவதற்கான புதிய மூலோபாயத்தை வகுத்து அதனடிப்படையில், இருபத்துநான்கு காவலரண்களைத் தாக்கியழிப்பதற்கான திட்டத்தை வகுத்து பயிற்சிகளை வழங்கினார்.

இத்தாக்குதலுக்கு செல்வதற்கு முன் போராளிகளை சந்தித்த தலைவர் அவர்கள் “புதிய மூலோபாயத்திட்டத்தில் தாக்குதலை ஒன்றை செய்யப் போகின்றீர்கள் இத்தாக்குதல் வெற்றி எதிர்காலத் தாக்குதல்களிற்கு அடிப்படையாக அமையும்” என்று கூறி வாழ்த்தியனுப்பினார். தாக்குதல் திட்டத்தின்படி இரகசிய நகர்வை மேற்கொண்டு நகர்ந்த அணிகள், எதிரியின் காவலரணுக்கு மிக அண்மையாகச் சென்று தாக்குதலை தொடங்கின. தாக்குதல் ஆரம்பித்த வேகத்திலேயே வேகமாக காவலரண்களை ஊடறுத்து பின்பக்கமாகச் சென்று இராணுவத்தை அழித்து ஆயுதங்களையும் கைப்பற்றினர். அத்தாக்குதல் உத்தியானது, குறைந்த இழப்புடன் விரைவாக எதிரியைத் தாக்கியழிப்பதற்கான மூலோபாய வெற்றியையும் நம்பிக்கையும் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் நடந்த பல தாக்குதல் வெற்றிகளுக்கு அந்த உத்தி அடிப்படையாக அமைந்தது.

1991ம் ஆண்டு கரைநகர் பொன்னாலை பிரதான பாதையில் அமைந்திருந்த காவலரண்களை தாக்கியழித்த சமர் இன்னுமொருவகையான புதிய தாக்குதல் உத்தியாகும். ஏனெனில் காவலரண் வீதியில் அமைந்திருந்தது. வீதியின் இரண்டு பக்கமும் கடல். தாக்குதலை மேற்கொள்ள எந்த விதமான காப்பும் மறைப்பும் இல்லாத குறைந்த தண்ணீர் உள்ள கடற்பிரதேசம், அக்காவலரணை தாக்கி அழிக்க வேண்டும் என முடிவெடுத்து மேஜர் கிண்ணியின் தலைமையில் வேவு பார்த்து, தண்ணீருக்குள்ளால் காவலரணின் பின்பக்கமாக அணிகளை நகர்த்தி வெற்றிகரமாகத் தாக்குதலை செய்து முடித்தார். எப்போதுமே சவாலான சண்டைகளை தேர்ந்தெடுத்து வெற்றி கொள்வதும் இறுக்கமாக போர்க்களங்களில் செயற்பட்டு வெல்வதும் இவருடைய குணாதிசயங்களில் ஒன்று.

அதன் பின்னர் 1992 ன் ஆரம்பகாலப்பகுதியில் பூநகரி முகாமின் முன்னணி காவலரண்களில் அறுபத்து நான்கு காவலரண் தாக்கியழித்த தாக்குதல், அதனைத் தொடர்ந்து 1992 ன் பிற்காலப்பகுதியில் பலாலி வளலாய் பகுதியில் 150 காவலரண்களை அழித்த தாக்குதல் போன்றவற்றை தலைமையேற்றுச் செய்தார். குறிப்பாக 1992 ம் ஆண்டு பயிற்சித் தேவைகளுக்காக தலைவரிடம் ரவைகள் வேண்டும் என தளபதிகள் கேட்டபோது “சண்டைகளுக்கு மட்டுமே ரவைகள் இருக்கு, இப்ப உங்களுக்கு தேவையான ரவைகள் இராணுவத்திட்ட இருக்கு, அங்க போய் எடுங்கோ என கூறினார்” இதுவே பலாலி – வளலாயில் இருந்த 150 காவலரண்களை அழித்து ஒன்றறை இலட்சத்திற்கும் மேற்பட்ட ரவைகள் பல ஆயுத, வெடிபொருட்;களையும் கைப்பற்றி அடிப்படையானது.

காவலரண்களை உடைத்துக் கொண்டு உட்சென்று பின்பக்கத்தால் தாக்குதலை நடாத்தும் முறை, தரையால் படைகளை நகர்த்தும் சமநேரத்தில் கடலாலும் படைகளை நகர்த்தி எதிரியின் விநியோகம், ஆதரவுப்படைகளை அனுப்பும் வழிகளை தடுத்தல் கட்டளைமையங்கள் தகர்த்தல், தரைவழித் தாக்குதல் படையணிகள் உள் நுழைவதற்காக காவலரண்களை பின்பக்கத்தால் தகர்த்து பாதையேற்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கிய ஈரூடக தாக்குதல் முறை மூலம் எமது தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அழித்தொழிக்க முடியும் என்ற உத்தியை தனது முன்னுதாரணமான செயற்பாட்டினூடாக வெளிப்படுத்தினார்.

1990 ஆண்டு ஈழப்போர் - 02 ஆரம்பித்திலிருந்து 1992 ம் ஆண்டு வளலாய் தாக்குதலை வரை தலைவரின் இராணுவ சிந்தனைக்கு உரியவடிவமும் அதற்கு பொருத்தமான மூலோபாயங்களையும் உத்திகளையும் வகுத்து பல பாதுகாப்பு, வலிந்த தாக்குதல்களை செய்து விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தை மேன்மைப்படுத்தினார். இதுவே இவரை விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவின் துணைத்தளபதியாக 1992 ம் ஆண்டு தலைவர் நியமிக்க காரணமாகியது.

யாழ்தேவி முறியடிப்புத் தாக்குதல்

பின்னர் 1993 ல் பூநகரி முகாம் வேவு நடவடிக்கைகளை விசேட வேவு அணியை வைத்து செய்து முடித்தார். தொடர்ந்து அதை கைப்பற்றுவதற்கான தாக்குதல் திட்டத்தை வகுத்து, அணிகளை ஒன்றிணைத்து பயிற்சிகளையும் அதற்கான ஏனைய ஒழுங்குபடுத்தல்களை தயார்ப்படுத்துவதில் தீவிரமாக செயற்படடுக்கொண்டிருந்தார்;. இச்சமயத்தில் யாழ் குடாநாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்குடன், ஒரேயொரு போக்குவரத்து பாதையாக இருந்த கிளாலி கடற்கரை பாதையை மூடுவதை இலக்கு வைத்து ஆனையிறவிலிருந்து இராணுவம், ‘யாழ்தேவி’ என்ற இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப்போகின்றது என்ற செய்தி கிடைக்கின்றது.

தலைவரின் ஆலோசனைக்கமைவாக, தயார்ப்படுத்துவதற்கு கிடைத்த குறுகிய நேரத்தில் தந்திரோபாயத் தாக்குதல் திட்டத்தை வகுத்து, இராணுவத்தின் நகர்வை தடுப்பதற்கான தாக்குதலை மேற்கொண்டார். இராணுவத்திற்கெதிரான தாக்குதல் மிக மூர்க்கத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது களமுனையிலிருந்து தொடர்களில் சிக்கலடைந்தது. இச்சமயத்தில் நேரடியாக களமுனைக்குச் சென்று தாக்குதலை வெற்றி நோக்கி வழிநடத்தியபோது காலில் காயமடைந்தார். இந்த நடவடிக்கையில் படுதோல்வியுடன் இராணுவம் பின்வாங்கியது.

காயத்திலிருந்து மீண்டாலும் காலில் பாதிப்பிருந்தது. அப்படியிருந்தும் மீண்டும் தனது இராணுவப் பணிகளைத் தொடர்ந்தார். மண்டைதீவு தாக்குதலுக்கான வேவு, கொக்குத்தொடுவாய் 05 முகாம்களின் தாக்குதலுக்கான வேவு நடவடிக்கை மற்றும் தாக்குதலுக்கான களத்தலைமை, முன்னேறிப்பாய்தல் முறியடிப்புத் தாக்குதல், சூரியகதிர் ஒன்று தாக்குதல் நடவடிக்கை என பல இராணுவ நடவடிக்கைகளில் பங்கு கொண்டார்.

முல்லைத்தீவு முகாம் வலிந்ததாக்குதல்

1996ம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து தந்திரோபாய ரீதியில் பின்வாங்கி வன்னி பெருநிலப்பரப்பிற்குள் புலிகள் வந்த தருணத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமை தொடர்பான பல வினாக்கள் முன்வைக்கப்பட்டன. சிங்களப்படைகள் விடுதலைப்புலிகளை விரைவில் அழித்துவிடுவோம் என மார்தட்டிக் கொண்டிருந்தவேளை விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையை மீளநிரூபித்து இராணுவ வெற்றியினூடாக சிங்களத்திற்கு பதில் சொல்ல தீர்மானித்த தலைவர், முல்லைத்தீவு முகாமை அழிக்க முடிவெடுத்தார். இத்தாக்குதல் நடவடிக்கையை தளபதி பால்ராஜ் அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து தாக்குதலுக்கான மூலோபாயத்தையும் வகுத்துக்கொடுத்தார். தலைவரின் சிந்தனைக்கமைவாக அத்தாக்குதல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். துல்லியமான திட்டமிடலுடன் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. வேகமாக கடற்கரைப்பகுதி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது பிரதான திட்டங்களில் ஒன்று. அதன்படி வெற்றிகரமாக நடைபெற்றதுடன் 122 கனரகப் பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன, இருப்பினும் கடற்கரைப் பிரதேசத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

கடற்கரையில் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே தம்மால் உதவியை பெற முடியும் என்பதால் தேவாலயம் அமைந்திருந்த கடற்கரைப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இராணுவம் கடுமையாகப் போரிட்டது. அப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் தாக்குதல் நடவடிக்கைகள் முனைப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அளம்பிலில் இராணுவத்தை தரையிறக்கி, முகாமிற்குள் போரிட்டுக் கொண்டிருக்கும் படையினருக்கு உதவ இராணுவம் முயன்றது. இச்சந்தர்ப்பத்தில் களத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்ட பால்ராஜ் அவர்கள் தலைவரிடம் நிலைமையும் உடனடித்திட்டத்தையும் தெரிவித்தார்.

தலைவர் அவர்கள் தளபதி பிரிகேடியர் பானு அவர்கள் தலைமையில் மேலதிக அணியை அனுப்பி வைத்தார். அத்திட்டத்தின்படி தேவாலயத்தின் முன்பக்கமாக நிலையெடுத்திருந்த படையினர் மீது விடுதலைப்புலிகளிடம் இருந்த டாங்கியால் தாக்குதலை ஆரம்பிக்க எதிரி நிலைகுலைந்தான், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய படையணி எதிரியின் பகுதியில் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டு, கடற்கரையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, முகாம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. அத்துடன் அளம்பிலில் தரையிறங்கிய இராணுவமும் எதிர்த்தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பாரிய இழப்புகளுடன் கடல்வழி தப்பி ஓடியது.

சத்ஜெய முறியடிப்புப் தாக்குதல்

முல்லைத்தீவு படைமுகாம் வீழ்ச்சியை தொடர்ந்து ஆனையிறவில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவம் சத்ஜெய ஒன்று இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் பகுதியை கைப்பற்றியது. முன்னேறிய சிங்களப்படையைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைக்கான தலைமையை தலைவர் பால்ராஜ் அவர்களிடம் கொடுத்தார். உடனடியாகப் படையணிகளை வேகமாக நிலைப்படுத்தினார். அத்துடன் இராணுவம் எமது நிலைகளை உடைத்து நகர்ந்தால் உடையும் பகுதியில் உள்ள படையணிகளை மட்டும் மீள் ஒழுங்குபடுத்தி, காவலரண்களை மீளக் கைப்பற்றினால் உடைத்த பாதையால் உள்வரும் இராணுவம் எமது பிடிக்குள் அகப்படும் இதனால் எதிரிக்கு பாரிய இழப்பை ஏற்படுத்த முடியும் என்ற திட்டத்தை வகுத்து, படையணிகளுக்கு விளக்கி, பயிற்சி கொடுத்து தயார்நிலையில் வைத்திருந்தார்.

சிங்களப்படை சத்ஜெய இரண்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. ஏ-09 பாதைக்கு வலதுபக்கமாகவும் இடதுபக்கமாகவும் தாக்குதலை தொடங்கிய இராணுவத்தின் தாக்குதல் முனையாக ஏ-09 பாதைக்கு வலதுபக்கம் பிரதானப்பட்டிருந்தது. டாங்கிகளுடன், துருப்புக்காவிகளில் இராணுவத்தை நகர்த்தி முன்னேறிய இராணுவம் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து உள்நகர்ந்தது. நிலைமையை உணர்ந்த தளபதி, லெப்.கேணல் தனம், லெப்.கேணல் ராகவன் தலைமையில் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி இரண்டு பக்கத்தாலும் எமது காவலரண் பகுதியால் தாக்குதலை தொடுத்து மீண்டும் பாதுகாப்பு நிலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இராணுவம் பாரிய இழப்பை சந்தித்துப் பின்வாங்கியது. விடுதலைப்புலிகளின் காவலரண்களுக்கு முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் டாங்கிகள் அழிக்கப்பட்டு இருந்தது இந்த தாக்குதல் தந்திரோபாய, மனோதிட வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும்.

கிளிநொச்சி நகர் வலிந்த தாக்குதல்

ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த இலங்கை இராணுவம் மாங்குளத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. அதேவேளை கிளிநொச்சியில் உள்ள இராணுவத்துடன் இணைந்து கொள்ள குறிப்பிட்ட தூரமே இருந்தது. இந்த நேரத்தில் கிளிநொச்சி நகரை மீளக் கைப்பற்ற தலைவர் முடிவெடுத்தார். இத்தாக்குதல் திட்டத்தில், கிளிநொச்சி நகரப்பகுதியை கைப்பற்ற வேண்டுமாயின் இராணுவத்திற்கு உதவி வருவதையும் இராணுவத்தின் பின்வாங்கி செல்வதையும் தடுக்க வேண்டும் என்பது பிரதான திட்டமான இருந்தது. எனவே பரந்தனுக்கும் கிளிநொச்சி நகரத்திற்க்குமிடையில் ஊடறுத்து மறிப்பு நடவடிக்கையை செய்யும் பொறுப்பை பால்ராஜ் அவர்களிடம் ஒப்படைத்த தலைவர் “உனது நடவடிக்கை தாக்குதலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப்போகின்றது. அத்துடன் இது உனக்கு ஒரு பரீட்சார்த்த தாக்குதல் நடவடிக்கையும் கூட” என தெரிவித்தார்.

தாக்குதல் நடவடிக்கையை பொறுப்பொடுத்த தளபதி மிகத்துல்லியமாகத் திட்டமிட்டு கடுமையாக பயிற்சிகளைக் கொடுத்து படையணிகளைத் தயார்ப்படுத்தினார் ஏனெனில் காவலரண்களை ஊடறுக்கின்ற சமநேரத்தில் கிளிநொச்சியிலிருந்து எதிரி ஓடாமலும் பரந்தனிலிருந்து எதிரியின் ஆதரவு கிடைக்கமாலும் இருக்கக்கூடிய வகையில் அணிகளை நிலைப்படுத்தி தாக்குதலுக்கு முகங்கொடுக்கின்ற அதேவேளை, அணிகளை நிலைப்படுத்தும் பகுதிக்கிடையில் இருக்கும் மினிமுகாம்கள், சிக்குப்படும் படையினரை அழித்து அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தயார்நிலையில் நிற்க வேண்டும். மற்றும் கிளிநொச்சி வெற்றியின் பிரதான பங்கு இவரது நடவடிக்கையில் தங்கியிருந்தது.

தாக்குதல் தொடங்கியவுடனேயே ஏ-09 வீதிக்கு அருகில் அதாவது களத்தில் மையத்திற்கு சென்ற பால்ராஜ் அவர்கள் அங்கிருந்து தாக்குதலை நெறிப்படுத்தினார். ஆனையிறவு பரந்தன் பகுதியிலிருந்த இராணுவத்தினர் கிளிநொச்சியில் சிக்குண்ட படையினருக்கு உதவ பல புதிய படையணிகள் டாங்கிகள் சகிதம் கடும் முயற்சியை மேற்கொண்டனர். முயற்சிகள் எதுவும் பலனளிக்காது போனது. மற்றும் தளபதி பால்ராஜ் தங்களிற்கு பின்னால் வந்து மறித்து நிற்கின்றார் அதனால் உதவி கிடைக்கவில்லை. இச் செய்தி கிளிநொச்சி நகரப்பகுதியில் சண்டையிட்ட சிங்களத்தளபதிகளுக்கு கிடைக்கின்றது. திகைத்த தளபதிகள் தப்பியோடுவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்தனர். இராணுவம் எந்த வித ஒழுங்குபடுத்தலுமின்றி தப்பியோட தொடங்கியது. அங்கு ஓடும் இராணுவத்தை தடுக்கும் நோக்குடன் நிலைப்படுத்தப்பட்ட அணிகளின் உக்கிர தாக்குதலை எதிர்கொண்டது. இத்தாக்குதலை எதிர்பார்க்காத இராணுவம் முன்செல்பவர்கள் சாகச்சாக தப்பியோடும் முயற்சியில் மட்டும் ஈடுபட்டனர்.

குடாரப்பு ஊடறுப்புத்தாக்குதல்


வத்திராயன் பெட்டிச் சண்டையைப்பற்றி தளபதி கூறும் போது “ஆனையிறவுக்கான சண்டையை நீதான் நடத்தப்போகிறாய், நீ சண்டியன், எத்தனையோ சோதனைகளை உனக்குத் தந்திருக்கிறேன் இது நான் உனக்கு வைக்கின்ற பெரிய சோதனை இதற்கான பரீட்சார்த்தத்தை ஏற்கனவே கிளிநொச்சியில செய்து பாத்திட்டேன். எனவே நீ இதையும் வென்று தருவாய் என நம்பிறேன் 1500 பேருடன் தரையிறங்கி கண்டி வீதியை மறிச்சு விநியோகத்தை தடுத்து நிறுத்து, ஆனையிறவு தானாக விழும். சூசை உன்னை கடலால் இறக்கி விடுவான் நீ தரையால் தான் திரும்பி வரவேண்டும்” என்ற தலைவரின் திட்டத்தை நிறைவேற்றி ஆனையிறவின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

வத்திராயன் பெட்டிச் சண்டை என்பது தமிழ்மக்களின் வீரத்தின் வெளிப்பாடு உலக வரலாற்றில் முதன்மைத் தரையிறக்கச் சண்டையாக பதிவு செய்யுமளவிற்கு, உலக இராணுவ வல்லுனர்களையே வியக்க வைத்தது குடாரப்பு தரையிறக்க தாக்குதல் நடவடிக்கை ஆகும். இலங்கை இராணுவத்தின் ஆகாய விமானங்கள், நவீன கடற்படை, கனரக ஆயுதங்கள், டாங்கிகள் போன்றவற்றைக் கொண்ட பலம் வாய்ந்த 40,000 சிங்களப்படைகளின் நடுவே 1500 போராளிகளுடன் 34 நாட்கள் எதிரியை ஊடறுத்து நின்று துவம்சம் செய்தனர். சிங்களத்தின் முக்கிய இராணுவத்தளபதிகளையும் அவர்களின் தந்திரோபாயங்களையும் வெறும் இலகு, கனரக ஆயுதங்கள் மற்றும் ஆட்லறி பிரங்கிகளின் ஆதரவுச்சூட்டுடன் மட்டும் எதிர்கொண்டு வெற்றி பெற்று, தமிழ்மக்களின் போரிடும் ஆற்றலின், துணிச்சலின், வீரத்தை சர்வதேசம் வியக்கும் வகையில் வெளிப்படுத்தினார். இது தமிழ்மக்களின் வீரத்திற்கும் போர்க்குணத்திற்கும் கிடைத்த மகுடமாகும்.

சுனாமி ஆழிப்பேரலையின் போது

2004 ம் ஆண்டு வாகரையில் அமைந்திருந்த கடற்கரை முகாமில் இருந்தார். திடீரென கடல் உள்வாங்கப்பட்டு அலைகள் உயர்ந்து வேகமான வருவதை பார்த்த பால்ராஜ் அவர்கள், ஏதோ ஆபத்து வரப்போகின்றது என்பதை உணர்ந்து, உடனடியாக வானத்தை நோக்கிச் சுடுமாறு போராளிகளிடம் சொன்னார். திடீரென துப்பாக்கிச் சத்தத்தை கேட்ட மக்கள் பலர் வீட்டுக்கு வெளியே வந்து பார்க்க கடல் உள்நோக்கி வருவதை கண்டு ஓடித்தப்பினர் இதனால் பலர் காப்பாற்றப்பட்டனர். அதேவேளை கடற்கரையில் உள்ள முகாமில் நின்ற அவர் கடல் அலைகளுடன் கடுமையாக போராடி உயிர்தப்பினார். அத்துடன் உடனடியாக போராளிகளை ஒழுங்குபடுத்தி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகளை செய்தார்.

பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கு


பால்ராஜ் அவர்கள் எப்போதும் களமுனையில் ஒவ்வொரு காவலரணுக்கும் சென்று போராளிகளிற்கு சண்டையிடும் முறையை சொல்லிக்கொடுப்பார், அடிக்கடி அவர்களை சென்று சந்தித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைத்து போராளிகளை எப்போதும் உச்ச மனோதிடத்துடன் வைத்திருப்பார். இதனால் பால்ராஜ் அவர்கள் சண்டையை பொறுப்பெடுக்கின்றார் என்றால் போராளிகளிற்கிடையே தனித் தெம்பு ஏற்படுமளவிற்கு நம்பிக்கையான தளபதியாக விளங்கினார். திட்டமிட்ட சண்டைக்கான வேவு நடவடிக்கையை முழுமைப்படுத்த முன் வேவுகள் அனைத்தையும் நேரடியாக பார்த்தே தலைவரிடம் சண்டைத்திட்டத்தை கொடுப்பார். குறிப்பாக அவரது கால் சீராக இயங்காத போதும் கைத்தடியுடன் எதிரியின் முட்கம்பி வரை சென்று இந்த இடம் சண்டைக்கு பொருத்தமானதா? என முடிவெடுப்பது அவரது வழக்கம். சிலர் அவரிடம் ஏன் நீங்கள் போய் பார்க்கிறீர்கள் நாங்கள் பார்த்து வருகிறோம் என்றால் அதற்கு அவர் “சண்டையை தலைமைதாங்கும் போது தாக்குதலிடங்களும் தாக்குதல் பிரதேசம் தொடர்பான பூரண விளக்கம் மற்றும் நிலவரம் தெரிந்தாலே சண்டைக்கான கட்டளையை துல்லியமாக வழங்கலாம், அடுத்தது நான் நினைப்பதைப்போல ஒவ்வொரு தாக்குதல் இடமும் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றதா! என எனக்கு தெரியவேண்டும். பாரிய படையை கொண்டு செல்லும் பாதையில் என்னை கொண்டு செல்ல முடியாது என்றால் எப்படி படையணிகளை சரியாக கொண்டு செல்வீர்கள்? அத்துடன் நான் உறுதிப்படுத்தி முடிவுகளை தலைவருக்கு சொல்லவேண்டும் எனவே நானும் பார்க்கவேண்டும்” என்பதே போர் அனுபவமும், போரியலில் மாற்றத்தையும் ஏற்படுத்திய தளபதியின் பதிலாக இருக்கும்.

தளபதி பால்ராஜ் அவர்களைப்பற்றி அவருடைய பல தாக்குதல்கள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தேசியத்தலைவர் அவர்களால் என்னையும் விஞ்சிய போராளி என்று பாராட்டப்பட்ட தளபதி, உலக இராணுவ வல்லுனர்களின் தந்திரோபாயங்களை எல்லாம் வத்திராயன் பெட்டிச்சண்டையில் நிர்மூலமாக்கியவர் மற்றும் பால்ராஜ் ஒரு இடத்தில் வந்து இருந்திட்டால் அவரை வீழ்த்துவது அல்லது அப்புறப்படுத்துவது கடினம் என சிங்களப்படைகளின் மனோதிடத்தையே பலவீனப்படுத்திய தளபதி, போர்க்கலை வல்லுனர் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.

இந்நினைவு நாளில் தமிழ்மக்களின் கவனத்திற்காக….

தழிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் பல வீரத்தளபதிகளும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர். பல வியக்கத்தக்க மகத்தான போரியல் சாதனைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்தது. போர்க்குணம் மிக்க தமிழினத்தின் வெற்றிகளே இவையாகும். ஆனால் முள்ளிவாய்க்கால் பின்னடைவு என்பது சர்வதேச நாடுகள் வழங்கிய தொழில்நுட்ப உதவி, ஆயுத வெடிபொருள் உதவி, மறைமுக இராணுவ உதவி மற்றும் புலனாய்வு உதவிகளின் விளைவாகவும், பூகோள அரசியல் போட்டி காரணமாக சிங்களத்திற்கு கிடைத்த உதவிகளின் அடிப்படையிலும் ஏற்பட்ட பின்னடைவே அன்றி, சிங்களம் தனித்து நின்று விடுதலைப்புலிகளை அழிக்கவில்லை. அவர்களால் அழிக்கவும் முடியாது. மேற்குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் தாண்டி இப்பின்னடைவின் அடிப்படை வெடிபொருள் விநியோகம் தடைப்பட்டமையும் மலிந்து போன துரோகத்தனங்களுமே ஒழிய வேறு ஒன்றுமல்ல.

தாயக விடுதலையையும், தமது உயிர்களை விடுதலைக்காக நம்பிக்கையுடன் அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் கனவுகளையும், மக்களின் பேரிழப்புகளையும் மனதில் நிறுத்தி நம்பிக்கையிழக்காமல், எம்மால் முடியும்! எமது அரசியல் விடுதலைக்காக இறுதிவரை உழைப்போம் என சிந்தனையில் நிறுத்துவதே இந்நாளில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களிற்கும் மற்றும் மாவீரர்களிற்கும் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களிற்கும் ஆத்மார்த்தமாக வழங்க வேண்டிய வாக்குறுதி.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.