Friday, February 04, 2011

பாதுகாப்பு வலயத்தில் மக்களை மீளக் குடியமர்த்தவும் தடுத்துவைக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடவும் அரசு இணக்கம்

யாழ். குடாநாட்டிலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களில் படிப்படியாக மக்கள் மீள்குடியமர்த்தப்படுவர் எனவும், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விவரங்கள் வவுனியா பயங்கரவாத புலனாய்வு திணைக்கள அலுவலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அரச தரப்பினர் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சின்போது தெரிவித்தனர்.

இவ்வாறு கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. நேற்று தெரிவித்தார்.

அரசு – கூட்டமைப்பு இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் நேற்றுப் பகல் 12.30 மணியளவில் நடைபெற்றன. சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இப்பேச்சுக்களில் கூட்டமைப்பின் சார்பில் எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.கணகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசு தரப்பில் சிரேஷ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், நிமால் சிறிபால டி சில்வா மற்றும் சசின் வாஸ் குணவர்தன எம்.பி. ஆகியோர் பங்குபற்றினர். அரசுக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின்போது கூட்டமைப்பு முன்வைத்த சில பிரச்சினைகள் கேள்விகளுக்கு அரச தரப்பினர் விளக்கமளித்தனர்.

யாழ். குடாநாட்டில் உயர் பாதுகாப்பு வலயமென்று ஒரு பிரதேசம் இல்லை. இருந்தும் சில இடங்களில் படையினர் நிலைகொண்டிருப்பர். உயர் பாதுகாப்பு வலயங்களிலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டது என அறிவிக்கப்பட்ட பிரதேசங்களிலும் மக்கள் படிப்படியாக மீளக் குடியமர்த்தப்படுவர்.

திருகோணமலை சம்பூர் பிரதேசம் வர்த்தமானி மூலம் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்களை அதே இடத்தில் மீள்குடியமர்த்தப்படுவது குறித்து ஆராயலாமெனவும் அரச தரப்பு தெரிவித்ததாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கூட்டமைப்பினர் மேலும் சில தீர்வுத் திட்டங்கள் குறித்து பேச்சு நடத்தினர் என்றும் தொடர்ந்துவரும் பேச்சுகளில் இதுதொடர்பாக முடிவுகள் கிட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.தமிழ் மக்களின் உரிமைகள் அவர்களுக்குத் தேவையான அதிகாரங்கள் தொடர்பான பேச்சுக்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் பேச்சுக்களின்போது ஆராயப்படும்.எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் மூன்றாம் கட்டப் பேச்சுக்கள் நடைபெறும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.