Friday, February 04, 2011

5000 ரூபா நாணயத் தாள் அறிமுகமானது பொருளாதாரப் பின்னடைவை பறைசாற்றுகின்றது – ஐ.தே.க

5000 ரூபா நாணயத்தாள் அறிமுகமானது பொருளாதார பின்னடைவை பறைசாற்றி நிற்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

அதிகரித்துச் செல்லும் பண வீக்க வீதத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் அரசாங்கம் புதிய 5000 ரூபா நாணயத் தாளை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

30 ஆண்டு கால யுத்தத்தை வெற்றி கொண்டமை பாரட்டுக்குரியது என்ற போதிலும், பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார யுத்தத்தை வென்றெடுப்பதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்தியையும் சுபீட்சத்தையும் வெளிப்படுத்தும் நோக்கில் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத் தாள்கள் வெளியிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், புதிய நாணயத் தாள் வெளியீடானது ஆரோக்கியமான பொருளாதார நிலைமையாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2004ம் ஆண்டு கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டி 111 ஆகக் காணப்பட்டதாகவும், 2011ம் ஆண்டில் 231 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட காலத்தில் பொருட்கள் சேவைகளுக்காக ஒருவர் 2415 ரூபாவை செலவிட்டிருந்தால் இன்று 5000 ரூபா செலவிட நேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.