ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போய் இற்றைக்கு ஒரு வருடமாகியும் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆராய்வதற்கு பொறுப்பான பிரிவினர் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போய் நேற்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியது. இதுதொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறுகையில்,காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ஒரு சாதாரண மனிதரல்லர்.
அவர் சமூக விரோதியுமல்ல. நாட்டிலுள்ள முக்கிய பிரிவினர் மௌனமாயிருக்கும்போது குரல் கொடுப்பவராகத் திகழ்ந்தவராவார். அதனெல்லாவற்றிலும் நாட்டின் குரலாக விளங்கினார்.இந்நாட்டில் இடம்பெற்ற பாரியளவான நிதி மோசடிகளை முதற் தடவையாக மக்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர் ஊடகவியலாளர் பிரகீத் ஆவார். அதேவேளை, தட்டவேண்டிய இடங்களிலும் அவர் தைரியமாகத் தட்டினார். நாட்டுக்கு, சமூகத்துக்கு நல்வழியை காட்டிய அவர், பணத்துக்கும், பலத்துக்கும் அடிபணியாது அவற்றுக்காக தம்மை மாற்றிக்கொள்ளாமல் செயற்பட்டார்.
சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் காணாமல்போன சுதந்திர ஊடக அமைப்பை சேர்ந்த ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொட தொடர்பில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எக்நலிகொடவின் மனைவியும், பிள்ளையும் நேரடியாக சென்று இந்த மனுவை கையளித்தபோது, அவர்களுக்கு ஆதரவாக பல ஊடகவியலாளர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். எக்நலிகொட காணாமல்போய் ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் சிறீலங்கா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கத்தவறி வருவதால், ஐக்கிய நாடுகள் சபை இதில் தலையிடவேண்டும் என மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த வாரம் ஊடகவியலாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.