Sunday, January 30, 2011

நோர்வேயும் நாடுகடந்த தமிழீழ அரசும் சிறிலங்காவில் இழந்ததை சூடானில் பெற்றிருக்கின்றன

சூடானிய நாட்டுப்பற்றுள்ள விடுதலை அமைப்பு மீது நோர்வே அதிக செல்வாக்கினைச் செலுத்திவரும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அமைப்பு அழைப்பினை விடுத்திருப்பதன் அடிப்படையில் நோக்குமிடத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வரவேற்றும் வகையிலே நோர்வே செயல்படுகிறது என எண்ணத் தோன்றுகிறது.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் டெயிலிமிரர் ஆங்கில ஏட்டில் அதன் பத்தி எழுத்தாளர் Gomin Dayasiri எழுதியுள்ளார்.

அப்பத்தியின் முழுவிபரமாவது,

“ஜேசுவும் புத்தரும் வந்திருந்தால் கூட இதுபோல ஒன்றை இலகுவில் அடைந்திருக்கமுடியாது” என 2004ம் ஆண்டு கிளிநொச்சிக்குச் சென்று தமிழ்ச்செல்வனைச் சந்தித்த பின்னர் எரிக் சொல்கெய்ம் குறிப்பிட்டிருந்தார்.

ஐரோப்பிய நாடுகளின் நிதியுதவியுடன் செயற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மேற்கு நாடுகளின் அரசாங்கங்களுடன் மேற்கொண்ட முயற்சியில் சிறிலங்காவில் சொல்கெய்ம் தோல்வியினைச் சந்தித்த அதேநேரம் நோர்வே சூடானில் தனது முதல் வெற்றியினைப் பெற்றிருக்கிறது.

சுதந்திர நாடாக தென் சூடானை அங்கீகரிக்கும் முதலாவது நாடு நோர்வேயாகத்தான் இருக்கும் என ஒஸ்லோ உறுதியளித்திருக்கிறது. இந்த நிலையில் அது நினைத்தபடி எல்லாம் நிகழ்ந்திருந்தால் நோர்வே சிறிலங்காவில் எத்தகைய முனைப்புக்களை மேற்கொண்டிருக்கும் என்பது சூடானின் கருத்துக்கணிப்புடன் வெளியே தெரிந்துவிட்டது.

சூடானிய அரசாங்கத்திற்கும் தென்சூடான் பிராந்தியத்திற்கும் இடையிலான பிணக்கு வலுவடைந்ததைத் தொடர்ந்த இரண்டு தரப்பினருக்குமிடையில் உத்தியோகபூர்வச் செய்திகளைப் பரிமாறும் ஒரு தூதுவனாகவே நோர்வே சூடானுள் நுழைந்தது.

சிறிலங்காவில் இடம்பெற்றதைப் போலவே ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களுடன் இணைந்து பணிசெய்த நோர்வே மக்கேக்ஸ் உடன்பாடு என்ற ஒன்றைக் கொண்டுவந்தது.

தென்சூடானின் நிர்வாகத்தினைக் கவனிப்பதற்கென ஆறு ஆண்டுகளுக்கு இடைக்கால ஆட்சிமுறையொன்று கொண்டுவரப்படும் என்றும் இந்தக் காலம் முடிவடைந்தவுடன் தென் சூடானின் தன்னாட்சிக்கான மக்கள் கருத்துக் கணிப்பு இடம்பெறும் என்றும் இந்த உடன்பாடு கூறுகிறது.

சிறிலங்காவில் இருந்ததைப் போலவே, இந்த ஒப்பந்தம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு நோர்வே, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் வழங்கப்பட்டன.

உலகின் பல்வேறுபட்ட பிராந்தியங்களில் அமைதியினை ஏற்படுத்தும் நோர்வேயின் முயற்சிகளுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன திரைமறைவு ஆதரவினை வழங்கி வருவது வெளிப்படை.

நோர்வேயினைத் தமது சமாதானத் தூதுவனாக பயன்படுத்தும் இந்த நாடுகள் சிறிலங்காவிலும் தங்களது அமைதிசார் முனைப்புக்களை முன்னெடுத்திருந்தன.

இதனடிப்படையில் 2005ம் ஆண்டு பரந்துபட்ட அமைதி உடன்பாடு என்ற ஒன்று நோர்வேயின் துணையுடன் சூடானில் கொண்டுவரப்பட்டிருந்தது. சிறிலங்காவில் 2004ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தினை விட சூடானில் ஏற்படுத்தப்பட்ட இந்த உடன்பாடு அதிக விடயங்களை உள்ளடக்கியிருந்தன.

சூடானில் ஏற்படுத்தப்பட்ட இந்த உடன்பாட்டில் நோர்வே கண்காணிப்பாளராகச் செயற்பட்டது.

இந்த உடன்பாட்டுக்கமைய, எந்தவிதப் பிரச்சினைகளுமின்றி ஆறு ஆண்டுகளுக்கு உடன்பாடு நடைமுறைப்படுத்தப்படுமிடத்து ஆறு ஆண்டுகளின் முடிவில் இடம்பெறும் மக்கள் கருத்துக்கணிப்பில் தென் சூடான் வெற்றிபெறும்போது அது தனிநாடாகப் பிரியமுடியும் என்பதை இந்த உடன்பாடு தெளிவாகக் கூறுகிறது.

தென்சூடான் தனியாகப் பிரிவதற்கான நிதியுதவியினை நோர்வேயே வழங்கி வந்திருக்கிறது.

சூடானிய அரசாங்கத்திற்கும் தென் சூடானின் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான போர் நிறுத்தத்தினைக் கண்காணிப்பதற்கு அனைத்துலக ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டது. இதன் சிறப்புத் தூதுவராக நோர்வேயின் ரொம் வர்லேசன் [Tom Vrallsen] நியமிக்கப்பட்டிருந்தார்.

சூடானில் நோர்வே முன்னெடுத்த அமைதி முயற்சிகளின் ஒரு அங்கமாக தென் சூடானின் அரசியல் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்களும் தென் சூடானின் அதிபரும் ஏற்றுக்கொண்டனர்.

இதற்கமைய தென் சூடானின் அதிபர் செயலகத்தினை அமைப்பதற்கும் அங்கு மக்கள் கருத்துக்கணிப்பினை நடாத்துவற்குமாக நோர்வே வழங்கிய இந்த நிதி பயன்படுத்தப்பட்டது.

தென் சூடான் தனிநாடாக உருவாவதற்கு வழிவகுத்த சூடானிய அரசாங்கத்திற்கும் சூடாவின் மக்கள் விடுதலை அமைப்புக்கும் [Sudanese Peoples Liberation Movement - SPLM] இடையிலான உடன்பாடு உருவாக்கம் பெறும் செயற்பாட்டில் நோர்வேயும் பங்கெடுத்திருக்கிறது என்பதால் தாம் பெருமை கொள்வதாக எரிக் சொல்கெய்ம் குறிப்பிட்டிருக்கிறார்.

புலம்பெயர் நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புக்கள் அனைத்தும் சாதிக்கத் தவறியதை வி. உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சூடானின் அங்கீகாரத்திற்கு ஊடாக பெற்றிருக்கிறது.

சூடானிலிருந்து தென்சூடான் தனி நாடாகப் பிரிந்த மகிழ்ச்சியினைக் கொண்டாடும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அழைப்பு நாடு கடந்த தமிழீழ அரசுக்குக் கிடைத்திருக்கிறது.

சுதந்திரத் தனிநாட்டினைப் பிரகடனப்படுத்துவதோடு ஆட்சியினைக் கையில் எடுப்பதற்குத் தான் தயார் என தென் சூடானின் நாட்டுப்பற்றுள்ள விடுதலை அமைப்பு அறிவித்திருக்கும் நிலையில் கிளர்ச்சிக் குழுக்களுடன் எப்போதுமே பரிவுடன் செயற்படும் நோர்வே புதிதாக உதயமாகியுள்ள தென்சூடானின் நெருங்கிய பங்குதாரராக மாறியிருக்கிறது.

“தென் சூடானின் முன்னணிக் கிளர்ச்சிக் குழுவான சூடானிய நாட்டுப்பற்றுள்ள விடுதலை அமைப்புடன் நாங்கள் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிறோம்” என காட்டூமிலுள்ள நோர்வே தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சூடானிய நாட்டுப்பற்றுள்ள விடுதலை அமைப்பு மீது நோர்வே அதிக செல்வாக்கினைச் செலுத்திவரும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அமைப்பு அழைப்பினை விடுத்திருப்பதன் அடிப்படையில் நோக்குமிடத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வரவேற்றும் வகையிலே நோர்வே செயல்படுகிறது என எண்ணத் தோன்றுகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு ஒன்றில் மேற்குறித்த இந்த சூடானிய விடுதலை அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நோர்வேயினைத் தளமாகக் கொண்டு செயற்படும் விடுதலைப் புலிகளமைப்பின் பிறிதொரு பிரிவொன்று வன்முறைசார் முனைப்புக்களில் தொடர்ந்தும் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுவரும் நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது நோர்வே தனது செல்வாக்கினைச் செலுத்த விரும்புவதாகவே தெரிகிறது.

தேவைக்கேற்றால்போல் நோர்வே அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு வசதியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒஸ்லோவிலும் தனது செயலகம் ஒன்றை அமைத்திருக்கிறது.

விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் அந்த அமைப்பின் வெளிநாட்டுக் கட்டமைப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்திய உருத்திரகுமாரனைப் பலமுறை சந்தித்திருக்கும் நோர்வே அதிகாரிகளும் சொல்கெய்மும் தமிழர் பிரச்சினை என்று வரும்போது நாடுகடந்த அரசாங்கத்துடன் தொடர்பினை வைத்திருப்பதுதான் சாலப் பொருத்தமானது என நம்புகிறார்கள்.

தென் சூடானின் சுதந்திர தின அணிவகுப்பைப் பார்வையிடுவதற்கான வெறும் பார்வையாளராக இல்லாமல் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைக்கப்பட்டிருப்பதானது அதற்குக் கிடைத்த சிறந்ததோர் அங்கீகாரம் என்றுதான் கூறுவேண்டும்.

நோர்வேயின் மனதினை வென்று அவர்களுடனான தமது உறவினை வலுப்படுத்தும் வகையில் உருத்திரகுமாரன் மிகுந்த அவதானத்துடன் நகர்வதாகவே தெரிகிறது.

சிறிலங்காவில் மேற்கொண்டதைப் போல, தென் சூடான் பிராந்தியத்தின் நோர்வே பரந்துபட்ட மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. தென் சூடானைப் பொறுத்தவரையில் 50 சதவீதமானவர்கள் கிறீஸ்தவர்கள். சூடான் மற்றும் எதியோப்பியாவினை எல்லையாகக் கொண்ட எரித்திரியாவிலும் நோர்வே மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்திருக்கிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.