Monday, January 24, 2011

ஆர்மிரேஜின் கொழும்பு வருகையும் “மகிந்தவின் அமெரிக்கப் பயணமும்” “சொல்லும் செய்தி” என்ன……..?

அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் றிச்சர்ட் ஆர்மிரேஜ் கடந்த செவ்வாயன்று (18) மாலை கொழும்பு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துப் பேசினார். அலரி மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பை அடுத்து மறுநாள் அதிகாலை 2 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்.

தனிப்பட்ட பயணமாக அவர் அமெரிக்கா சென்றதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. வேறு சில ஊடகங்களோ, கிரகநிலைகள் சரியில்லை என்பதால் நாட்டில் அவர் இருப்பது நல்லதல்ல என்று சோதிடர்கள் கூறிய ஆலோசனைப்படியே அமெரிக்கா சென்றதாக செய்தி வெளியிட்டன. கிட்டத்தட்ட 12 மணிநேரம் கழித்தே ஜனாதிபதியின் அமெரிக்கப் பயணம் பற்றிய அறிவிப்பை அவரது ஊடகச் செயலாளர் பந்துல ஜெயசேகர வெளியிட்டார். இது தனிப்பட்ட பயணம் என்பதை மட்டும் குறிப்பிட்ட பந்துல ஜெயசேகர, எத்தனை நாட்கள் அவர் அமெரிக்காவில் தங்கியிருப்பார் என்றோ எப்போது நாடு திரும்புவார் என்றோ குறிப்பிடவில்லை. ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பத்து நாட்கள் வரை அங்கு தங்கியிருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகத் தெரியவில்லை.

திடீரென மேற்கொள்ளப்பட்ட ஒன்று பொலவே உள்ளது.

காரணம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரதீப் வசந்த் நாயக்கை சந்தித்துப் பேசியிருந்தார்.

அதுபோலவே புதனன்று கொழும்பு வந்த பாகிஸ்தான் இராணுவத் தளபதியையும் வியாழக்கிழமை சந்திப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கியானியின் நிகழ்ச்சி நிரலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஸவைச் சந்திப்பதும் ஒன்று.

ஆனால் அதற்குள் அவர் நாட்டை விட்டுக் கிளம்பி விட்டார்.

எனவே முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணமாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.

அப்படியான திட்டம் ஏதும் இருந்திருந்தால், பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு சந்திப்பு நேரம் ஒதுக்கப்பட்டிருக்காது.

அதேவேளை இது சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகவும் இருக்காது.

பெருவெள்ளப் பாதிப்பின் துயரில் இருந்து நாடு மீள்வதற்கிடையில் ஜனாதிபதி சுற்றுலாவில் நேரத்தைக் கழித்தால் அது மோசமான நடவடிக்கையாகவே பார்க்கப்படும். வெள்ளப்பாதிப்பை அடுத்து ஐ.நா உதவிசெயலர் ஒருவர் இங்கு வந்திருக்க ஜனாதிபதியோ உல்லாசப் பயணம் சென்றிருக்கிறார் என்ற கதை பரவினால் போதும் ஒரு பொறுப்பற்ற ஆட்சித் தலைவர் என்ற பழி தானாக வந்து சேர்ந்து விடும்.

எனவே நிச்சயம் இது உல்லாசப் பயணம் அல்ல. ஒரு இராஜதந்திரப் பயணம். ஆனால் அதை வெளிக்காட்ட முடியாத நிலை. இது தான் உண்மை.

அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் றிச்சர்ட் ஆர்மிரேஜின் வருகைக்கும் மகிந்த ராஜபக்ஸவின் அமெரிக்கப் பயணத்துக்கும் தொடர்புகள் இருப்பதாகவே கருதப்படுகிறது.

ஆர்மிரேஜ் கொழும்பு வந்தது தனிப்பட்ட பயணமாகவே என்பது உறுதியாகியுள்ளது. அவரது பயணத்துக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை. அவரை அதிகாரபூர்வ பயணமாக இலங்கைக்கு அனுப்புவதற்கு, அவர் அமெரிக்காவில் அரசுப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவரல்ல.

“ஆர்மிரேஜ் இன்ரநஷனல்” என்ற தனியார் நிபுணத்துவ ஆலோசனை நிறுவனம் ஒன்றையே அவர் இப்போது நடத்திக் கொண்டிருக்கிறார். எனவே அவரை இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணமாக அனுப்ப வேண்டிய தேவை அமெரிக்க அரசுக்குக் கிடையாது. தனிப்பட்ட பயணமாக வந்த ஆர்மிரேஜ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க வேண்டிய தேவையும் இல்லை. அதற்கு முன்னர் இவர்களுக்கு இடையில் அப்படி எந்த தொடர்புகளும் இருந்தாகவும் கூற முடியாது. ஏனென்றால் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸ பதவியேற்க முன்னரே ஆர்மிரேஜ் அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர் பதவியை விட்டுச் சென்று விட்டார். எனவே பழைய நட்பு இந்தச் சந்திப்புக்குக் காரணமாக அமையவில்லை. புதியதொரு நட்புத்தான் இந்தச் சந்திப்புக்கு காரணமாகியுள்ளது.

புதிய நட்பு என்பது எப்படி ஏற்பட்டது எதற்காக உருவானது என்ற கேள்வி எழுகின்றது.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் வெளியே தெரியாதளவுக்கு விரிசல்கள் விழுந்திருக்கின்றன. குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் போக்குகள் தொடர்பாக அமெரிக்கா அவ்வளவு திருப்தியைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கு விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களே சான்றாகவுள்ளன. அதைவிடப் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று அமெரிக்கா தெரிவிக்கும் கருத்துகளும் மனிதஉரிமை மீறல்கள் பற்றிய அதன் விமர்சனங்களும் இலங்கை அரசக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இலங்கை அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒருவித இராஜதந்திர நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இந்தநிலையில் தான் ஆர்மிரேஜின் கொழும்பு வருகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

ஆர்மிரேஜ் நடத்தும் “ஆர்மிரேஜ் இன்ரநஷனல்” என்ற நிறுவனத்தின் செயற்பாடு என்ன தெரியுமா?

பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல், தந்திரோபாயத் திட்டமிடல், வர்த்தக அபிவிருத்தி தொடர்பாக சர்வதேச நிறுவனங்களுக்கு உதவுதல். அதாவது இந்த விடயப் பரப்புகளில் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவது. வெளிப்படையாக இந்தச் சேவைகள் வர்த்தக நிறுவனங்களுக்கு என்று அறிவிக்கப்பட்டாலும் பல்வேறு அரசாங்கங்களுக்கும் இந்த நிறுவனம் உதவத் தயாராகவே உள்ளது. அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஆர்மிரேஜ் ஒரு வர்த்தகப் புள்ளியல்ல. அவர் ஒரு முக்கிய இராஜதந்திரி.

வியட்னாம் போரில் சைகூனின் வீழ்ச்சியை அடுத்து அமெரிக்காக திரும்பிய அவர் ஈரானுக்கும் தாய்லாந்துக்கும் தூதுவராக அனுப்பப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதிகள் றீகனுக்கும் புஸ்ஸுக்கும் நெருக்கமாக இருந்தவர்.

கடந்த 2007இல் அமெரிக்க அரசாங்கம் இவரை சிஐஏ யின் தலைவராக நியமிக்க முற்பட்டது. ஆனால் அவர் அந்தப் பதவியை ஏற்கவில்லை.

அமெரிக்காவின் ஒரு முக்கியமான இராஜதந்திரியாகக் கருதப்படும் ஆர்மிரேஜ் வெறுமனே வர்த்தக நிறுவனங்களுக்கான ஆலோசனை நிறுவனத்தை வைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

இலங்கை அரசு இப்போது ஆர்மிரேஜின் உதவியை நாடியிருப்பதாகவே தெரிகிறது.

அதன் முதற்கட்டமாகவே அவர் கொழும்பு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.
எதற்காக ஆர்மிரேஜின் உதவியை அரசாங்கம் நாட வேண்டும்?

இலங்கை அரசுக்கு இப்போது பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானதொன்று அமெரிக்காவுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள நெருடல் நிலை. முதலில் இதைத் தீர்க்க வேண்டும். அடுத்து மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டம் ஜெனிவாவில் நடக்கப் போகிறது. அங்கே இலங்கை விவகாரம் நிச்சயம் இடம்பெறும். குறிப்பாக ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை மேசையில் போடப்படும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவும் இதைப் பிரச்சினையாக்குவதற்காக காத்திருக்கிறது.

இதைத் தடுக்க வேண்டும்.

அதற்கான ஒரு ஏற்பாடாக ஆர்மிரேஜைப் பயன்படுத்த அரசாங்கம் முனைந்திருக்கலாம்.

பிரித்தானியாவுடனான உறவுகளில் ஏற்பட்ட தேக்கநிலையை அடுத்து இலங்கைக்கு சாதகமான நிலையை உருவாக்க அந்த நாட்டின் மக்கள் உறவு தொடர்பு நிறுவனம் ஒன்றுடன் இலங்கை அரசு உடன்பாடு செய்து கொண்டது.

அதற்காக மாதாந்தம் பல ஆயிரம் பவுண்ஸ்களை கொடுத்த விவகாரம அண்மையில் வெளியாகியது.

அந்த முயற்சி இன்னமும் வெற்றி பெறவில்லை.

அது போன்றே அமெரிக்காவுடனான உறவுகளை சீர்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு ஆர்மிரேஜிடம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
ஆர்மிரேஜ் முன்னர் இலங்கை அரசுக்கு பல்வேறு வழிகளில் உதவியவர்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது நடத்தப்பட்ட பேச்சுக்களில் அரசுக்கு சார்பாக செயற்பட்டவர். உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் புலிகளை பார்வையாளராக மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற பிடிவாதத்தை வெளிப்படுத்தியவர். இந்த மாநாட்டில் பங்கேற்க சமநிலை அந்தஸ்து வழங்க்கப்பட வேண்டும் என்று புலிகள் கேட்டனர். ஆனால் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட புலிகள் சமநிலையில் பங்கேற்கும் கூட்டத்தில் தாம் பங்கேற்க முடியாது என்ற அடித்துக் கூறியவர். அதுமட்டுமன்றி ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடன் இணைந்து கொண்டு புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலை உருவாக்கியவர். இவர் ஊடகவே அமெரிக்காவின் உதவிகள் பல இலங்கைக்குக் கிடைத்தன.

மிலிந்த மொறகொட, றோகித போகொல்லாகம போன்றவர்கள் இவரது நெருக்கமான நண்பர்கள்.

மிலிந்த மொறகொடவும் ஆர்மிரேஜும் மேற்கொண்ட இராஜதந்திர உறவாடல்களின் விளைவாகவே அமெரிக்கக் கடலோரக் காவல்படைக் கப்பலான “கரேஜஸ்” இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அதுவே இப்போது “சமுத்திர” என்ற பெயரில் இயங்குகிறது.

இப்படி 2005 இற்கு முற்பட்ட காலங்களில் இலங்கையுடன் நெருக்கமான தொடர்புகளில் இருந்த ஆர்மிரேஜ் இப்போது மீண்டும் இலங்கைக்கு உதவ முற்படுவதாகத் தெரிகிறது.

ஆர்மிரேஜின் ஏற்பாட்டில் மகிந்த ராஜபக்ஸ அமெரிக்காவில் தனிப்பட்ட சில சந்திப்புகளை மேற்கொள்ளலாம்.

அது அமெரிக்காவுடனான உறவுகளை சுமுகமடையச் செய்வதற்கான முயற்சியாக அமையலாம்.

இவையெல்லாம் எந்தளவுக்கு இலங்கை அரசுக்குக் கை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கட்டுரையாளர் ஹரிகரன் இன்போதமிழ் குழுமம்

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.