Monday, January 24, 2011

கனடாவின் சீ- 49 சட்டத்தை நாங்கள் எதிர்த்தே தீருவோம் - லிபரல் கட்சித் தலைவர்

கனடாவில் ஸ்ரீபன் கார்ப்பர் அரசு நிறைவேற்றியே தீருவோம் என முனைப்புக் கொண்டுள்ள குடிவளவாளர்களிற்கு எதிரான சீ- 49 சட்டத்தை லிபரல் கட்சி எதிர்த்தே தீரும் என அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மைக்கல் இக்னாரீப் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த கனடியத் தமிழ்க் காங்கிரஸின் பொங்கல் விழாவில் தெரிவித்தார்.

கனடியத் தமிழ்க் காங்கிரஸின் பொங்கல் விழா நேற்று மார்க்கம் நகரில் அமைந்துள்ள பெரியதொரு மண்டபத்தில் 900 பேராளர்களுடன் இடம்பெற்றது. 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 17 மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், மற்றும் மாநரக மேயர், மாநகரசபை உறுப்பினர்கள் என பலதரப்பட்ட பிரமுகர்களும் கலந்து கொண்ட இந்தப் பொங்கல் விழாவில்,


கனடிய சட்டத்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர, மகாண, மத்திய காவலர்கள் மற்றும் பல தொண்டார்வ நிறுவனங்கள் என்பவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கனடியத் தமிழ்க்காங்கிரசானது கப்பலில் வருகை தந்த அகதிகளின் பிரச்சினையை மையப்படுத்தியே இப் பொங்கல்விழாவை நடத்தியது பலரினதும் கவனத்தையும் ஈர்த்தது. நேர்மையான அரசியல் நிரலாக இச் சட்டத்தை எதிர்ப்பது என்ற அதன் முடிவை எதிர்க்கட்சிகளாக லிபரல் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி மற்றும் மனிதவுரிமை ஆர்வலர்கள் வரவேற்று கனடியத் தமிழ்க் காங்கிரஸின் நேர்மைத் தன்மையான உறவுப் பேணலிற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.


அகதிகள் யாராக இருந்தாலும் அவர்களிற்குரிய அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மேற்படி விழாவில் தெரிவித்த கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் சிறீலங்கா தமிழர்களிற்கு இழைத்த குற்றங்கள் காலத்தால் மறைந்து போகக் கூடியவை அல்ல என்றும் ஈழத் தமிழர்களின் தீர்விற்காக கனடியத் தமிழ்க் காங்கிரஸ் என்றுமே குரல் கொடுக்கும் என்றும் ஈழத்தமிழர்களிற்கு தீர்வு கிடைக்கும் வரை அது ஓயாது என்றும் தெரிவித்தார்.


1999ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 11 வருடங்களிற்கு மேலாக கனடியத் தமிழர்களினமும், ஈழத்தமிழர்களினதும் வாழ்வின் குரலாக நேர்மை தழுவிய அரசியல் மற்றும் இராசதந்திர சாணக்கியத்தில் நகர்ந்துவரும் தமிழ்க காங்கிரஸானது என்றைக்கும் மக்களின் குரலாக, மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி நீதி வேண்டும் ஒரு அமைப்பாகச் செயற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

படித்தரவர்கள், தொழிலதிபர்கள், பண்பாளர்கள், இதர தமிழ் அமைப்புக்கள் என அனைவரையும் உள்வாங்கி பொதுநோக்கோடு எடுக்கப்பட்ட இந்தப் பொங்கல் விழா பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை விழியுயர்த்தி தமிழ்ச் சமுதாயத்தை நோக்க வைத்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.