Thursday, January 13, 2011

கிழக்கில் இதுவரை 17 பேர் பலி! 31 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டள்ளனர்: அம்பாறையில் 17 வயதச் சிறுவனை வெள்ளம் இழுத்துச் சென்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 14பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் வெள்ளத்தால் இழுத்துச்செல்லப்பட்டு காணமற்போயுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

அதேவேளை அம்பாறையில் மூவர் பலியானதாக அம்பாறை தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகரையில் ஒருவர், வாழைச்சேனையில் மூவர், செங்கலடியில் ஒருவர், மன்முனை வடக்கில் ஒருவர், களுவாஞ்சிக்குடியில் ஒருவர் மற்றும் பட்டிப்பளையம் மூவர், போரளைப்பற்றில் மூவர் என 11பேர் உயிரிழந்துள்ளார்கள் என மேற்படி செயலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த 32,641 குடும்பங்களைச் சேர்ந்த 1,22,047 பேர் 225 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அச்செயலகம் தெரிவித்தது.

இந்நிலையில், வாகரை - 4,
ஓட்டமாவடி - 08,
வாழைச்சேனை - 10,
கோரளைப்பற்று மத்தி - 07,
கிரான் - 19,
செங்கலடி - 35,
ஏறாவூர் - 15,
வவுணதீவு - 20,
மண்முனை வடக்கு - 32,
காத்தான்குடி - 01,
ஆரையம்பதி - 07,
பட்டிப்பளை - 04,
களுவாஞ்சிக்குடி - 25,
போரைத்தீவுப்பற்று - 18

என்ற ரீதியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1,200 குடும்பங்களைச் சேர்ந்த 25,000 பொதுமக்கள், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று காரைத்தீவு பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 48 மணித்தியாலங்களாக கிழக்கில் பெய்துவரும் அடைமழையினால் மரங்களிலும் மலைகளிலும் பாதுகாப்புடன் இருந்த 31 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.அடை மழையினால் மகா ஓயா ஆறு திடீரென பெருக்கெடுத்தமையால் தத்தம் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் டெம்பிட்டிய பிரதேச மலைகளிலும் மரங்களிலும் ஏறிக்கொண்டனர். எனினும் அடைமழையினால் வெள்ளம் தீவிரமடையவே மகா ஓயா பிரதேச செயலக அதிகாரிகள் பொலிஸார் ஆகியோர் இணைந்து விமானப் படையின் விசேட ஹெலிக்கொப்டர்கள் மூலம் மீட்டெடுத்தனர்.

அம்பாறை, மண்டூர் தம்பளாவத்தை பாலத்தை கடக்க முற்பட்ட 17 வயது சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் வௌ்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான் என அம்பாறை மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிறுவனின் சடலம் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை.இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் வௌ்ளத்தினால் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.