போர்க்குற்றங்களின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையை நிறுத்துவதற்கு தேவையான அனைத்து சாட்சியங்களையும் ஐ.நா.வின் நிபுணர் குழு சேகரித்து வைத்துள்ளது. இதற்கு மேலும் வலுச்சோ்க்கும் வகையிலேயே நல்ரலிணக்க ஆணைக்குழுவை ஐ.நா. குழு சந்திக்கவுள்ளது.
ஐ.நா.வின் தேவைகளுக்காக சர்வதேசம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் எமது இராணுவத்தைச் சிக்கவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்க்கூடாது என்று ஜாதிக ஹெல எறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கழுத்தை வெட்ட வருபவனுக்கு யாராவது வாளைத் தீட்டிக் கொடுப்பார்களா? இவ்வாறான புத்திசாதுரியமற்ற செயலையே அரசாங்கம் செய்துள்ளது. எனவே ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கை வந்தால் நாம் தீர்க்கமான முடிவுகளை எடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமது கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டில் நேற்று கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் புலிகளையும் அவரது போராட்டத்தையும் பாதுகாக்க அமெரிக்கா மற்றும் ஐ.நா.வின் உள்ளிட்ட பல நாடுகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டன.
அத்துடன் அமெரிக்கா புலிகளின் 47 தலைவர்களைப் பாதுகாக்க கப்பல் ஒன்றை இலங்கைக்கு அனுப்ப தயார் நிலையில் வைத்திருந்தது. இதற்கு முக்கிய பங்கு வகித்தவர் அமெரிக்க முன்னாள் தூதுவர் றொபேட் ஓ பிளேக் ஆவர்.
இதைத்தவிர புலிகளின் தலைவர் பிரபாகரனை பாதுகாக்க பான் கீ மூன் நேரடியாக இலங்கை வந்திருந்தார்.எத்தனையோ சர்வதேச நபர்கள் வந்து பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவையனைத்தையும் இராணுவ வீரர்கள் தவிடுபொடியாக்கினர்.
தற்போது ஐ.நா.குழு 1100 போர்க்குற்ற சாட்சியங்களை சேகரித்து வைத்துள்ளது.இந்த நிலையில் அரசாங்கம் ஐ.நா. நிபுணர் குழுவை இலங்கைக்கு அழைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான அறிக்கையினை பான் கீ மூன் சமர்ப்பிக்கும். இதனால் இலங்கை தப்பிக்க முடியாத நிலையில் போர்க்குற்றச்சாட்டிற்குள் சிக்கிவிடும். இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டால் தற்போது எமக்கு உதவி செய்யும் நாடுகளால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
எனவே அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவினருடனான ஐ.நா.வின் நிபுணர் குழு சந்திப்பை உடனடியாக தடுத்து நிறுத்தி அவர்கள் இலங்கைக்கு வர தடைவிதிக்கவேண்டும்.
பல தேவைகளுக்காக சர்வதேசம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் சிக்க வைக்க எமது இராணுவத்தை காட்டிக்கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கக்கூடாது என்றார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.