Sunday, November 28, 2010

மாவீரர் தினம் தோல்வியடையவேண்டும் என்பதில் குறியாக இருந்தது சிறீலங்கா அரசு

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் நேற்று (27) மிகவும் உணர்வுபூர்மாக கொண்டாடப்பட்ட மாவீரர் தினம் மிகுந்த வெற்றியடைந்துள்ளது. பிரித்தானியாவில் 50,000 தமிழ் மக்கள் எக்சல் மண்டபத்தில் திரண்டதுடன், உலகின் எல்லா பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களால் தமது இனத்தின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர்.

இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான திரு சீமான் அவர்கள் சிறையில் இருந்து கூட மாவீரர்களுக்கு தனது அஞ்சலிகளை தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த மாவீரர் தினத்தை குழப்பும் நோக்கத்துடன் பல நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டிருந்தது. தாயகத்தில் இராணுவத்தினரை குவித்து, தமிழ் மக்களை அச்சுறுத்தியதுடன், இந்து ஆலயங்களை கூட அது தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தது.

ஊடகங்களும் அச்சுறுத்தப்பட்டன. நவம்பர் மாதம் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத் திருநாளில் வீட்டில் விளக்கு ஏற்றியவர்கள் கூட சிறீலங்கா காவல்துறையினரால் தாக்கப்பட்டனர்.

புலம்பெயர் தமிழ் சமூகத்தை பொறுத்தவரையில் அங்கு சிறீலங்கா அரசின் வன்முறைகளை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்ற நிலையில், தமிழ் மக்களையும், சிறீலங்கா அரசிடம் விலைபோன முன்னாள் போராளிகள் சிலரின் துணையுடனும் பல பொய்யான பிரச்சாரங்களை சிறீலங்கா அரசு முனைப்பாக்கியிருந்தது.

தாகயத்தில் தமிழ் மக்கள் துன்பப்படும்போது வெளிநாடுகளில் மாவீரர் தினம் கொண்டாடுவது தேவையற்றது என்ற மின்னஞ்சல்களும், ஒலிப்பதிவுகளும் சிறீலங்கா அரசிற்கு துணைபோன சிலரால் அனுப்பப்பட்டன.

ஆனால் அவை எல்லாவற்றையும் புறம் தள்ளி புலம்பெயர் நாடுகளில் மாவீரர் தினம் வெற்றிபெற்றுள்ளது. மாவீரர் தினம் என்பது வெறுமனவே போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கான நிகழ்வு அல்ல. அந்த நிகழ்வில் தான் எமது அரசியல் விவகாரங்களும் ஆராயப்படுவதுண்டு. அதன் வெற்றி – தோல்வியை கொண்டுதான் எமது அரசியல் பலத்தை எதிரி கணிப்பிடுவதும் உண்டு.

இன்று (28) வெளியாகிய த நேசன் எனப்படும் சிறீலங்கா அரசின் வாரஏடு, மாவீரர் தினம் தோல்வியடைந்துள்ளதாகவும், பத்திற்கு மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் அது அதிகம் களைகட்டவில்லை எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களின் கருத்தின் பிரகாரம் மாவீரர் தினத்தின் தோல்வி என்பது தமிழ் மக்களின் அரசியல் தோல்வியாகும்.

பட்டினி, பசி, அவலங்கள், இழப்புக்கள், வசதியின்மை என்பவற்றை முன்நிறுத்தி நாம் எமது அரசியல் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. தனது உரிமைக்காக போராடும் இனம் என்பது இந்த சவால்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புக்களை கணித்த பின்னர் தான் போராட்டத்தில் குதித்திருக்கும்.

விடுதலைக்கான ஆயுதப்போர் என்பது குருதியும், சதைகளும், பிணங்களும் நிறைந்ததாகவே இருப்பதுண்டு. அதனை கண்டு நாம் அஞ்சி நடுங்கியிருந்தால் ஆயுதப்போரை ஆரம்பித்திருக்கமாட்டோம்.

இந்திய இராணுவத்தினருடான போர் நடைபெற்ற காலத்தில், எமது தேசியத் தலைவர் தனது போராளிகளிடம் ஒன்றை கூறியிருந்தார். அதாவது “போராடுவது கடினமாக இருந்தால் நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம், நான் அதற்கான வசதிகளை செய்து தருகிறேன். ஆனால் நான் காட்டு விலங்குகளையாவது சுட்டு சாப்பிட்டு எனது விடுதலைப்போரை தொடருவேன் என்று”.

அங்கு அவர் பட்டினி, கடினமான வாழ்க்கை, குடிப்பதற்கு நீரில்லை என்பதற்காக தனது அரசியல் – விடுதலைப் போரை சிறிதுகாலம் தள்ளிவைத்து உணவைத் தேட முற்படவில்லை. எனவே மனிதாபிமான பிரச்சனைகளை முன்னிறுத்தி விடுதலைப்போரின் அரசியல் மூச்சை அடக்க நினைத்த சிறீலங்கா அரசுக்கும், அதற்கு துணை நின்ற துரோகிகளுக்கும் கிடைத்த தோல்வியாகவே மாவீரர் தினத்தின் வெற்றி அமைந்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.