Monday, May 03, 2010

மும்பை தாக்குதல் வழக்கு: கஸாப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை தாக்குதல் வழக்கில் அஜ்மல் கஸாப் மீதான அனைத்து வழக்குகளிலும் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள மும்பை விரைவு நீதிமன்றம், இவ்வழக்கின் இதர குற்றவாளிகளான இரண்டு இந்தியர்களையும் விடுவித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின்போது, உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கஸாப் மீதான அனைத்து வழக்குகளிலும் அவர் குற்றவாளி என இவ்வழக்கை விசாரித்து வந்த மும்பை விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பை அளித்தது.

அதே சமயம் இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய குற்றச்சாற்றின் பேரில் கைது செய்யப்பட்ட இந்தியர்களான பக்கீம் அன்சாரி மற்றும் ஷகாபுதீன் அன்சாரி ஆகியோர் மீதான குற்றச்சாற்றுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி நீதிபதி அவர்களை விடுவித்தார்.

கஸாப்புக்கான தண்டனை தீர்ப்பு நாளை அறிவிக்கப்பட உள்ளது. முன்னதாக தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி வழக்கு விசாரணை நடைபெற்ற ஆர்தர் ரோடு சிறையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிறைக்கு அருகே உள்ள சாலையில் ஆங்காங்கே  சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியன்று பாகிஸ்தானிலிருந்து 10 தீவிரவாதிகள் கடல்மார்க்கமாக படகில் வந்து விக்டோரியா ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் 25 அய‌ல்நாட்டவர் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். 304 க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தூண்டுதலின்பேரில் நடந்துள்ளதாக தெரியவந்தது.

இந்த சம்பவத்தின்போது 9 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தினர். அஜ்மல் கஸாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் பரித்கோட் பகுதியைச் சேர்ந்தவர் இவர். 166 பேரை கொன்றதாக கசாப் மற்றும் கொலையுண்ட 9 தீவிரவாதிகள் மீது குற்றம் சா‌ற்றப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு உதவியாக, லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்திடம் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டிய இடங்கள், மற்றும் வரைபடங்களை கொடுத்து உதவியதாக இந்தியாவைச் சேர்ந்த பாகிம் அன்சாரி, சபாவுதீன் அகமது ஆகியோர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.