சிறிலங்கா அரசிடம் இருந்து உத்தியோகபூர்வமாக எழுத்துமூல அழைப்பு கிடைக்குமானால் தாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக உள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ன் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்ட நாட்டுக்குள் தீர்வு காண்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற முதல் அமர்வின் போது தெரிவித்திருந்த கருத்திற்கு சிறிலங்கா அரசு வரவேற்புத் தெரிவித்திருந்தது.
கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும இதனைத் தெரியப்படுத்தி இருந்தார்.
தமிழ் தரப்பிலிருந்து கடந்த 30, 40 வருடங்களில் கிடைக்கப் பெற்ற சிறந்த சமிக்ஞை இதுவெனத் தெரிவித்திருந்த டலஸ் அழகப்பெரும, தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
சார்க் மாநாடு முடிவடைந்த பின்னர் இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படும் எனவும், யுத்தம் கொழுந்துவிட்டு எரிந்த நாட்டில் மீண்டும் யுத்தம் நடைபெறாத பின்னணியை ஏற்படுத்த வேண்டியது அனைவரினதும் கடமை எனவும் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ‘இது ஏற்கனவே பேசப்பட்ட விடயம். எனினும் இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எமக்கு அழைப்புக் கிடைக்கவில்லை. அவ்வாறு எழுத்து மூலமான அழைப்புக் கிடைக்குமாயின் மஅதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் விவகாரக் குழு ஆராய்ந்து பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்யும்’ என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.