Wednesday, March 03, 2010

தூய்மையான அரசியலுக்கு வித்திடுங்கள்...!

மலையகத்தில் தேர்தல் என்றால் சொல்லத் தேவையில்லை. அது அரசியல் அரங்கில் கட்சிகள் நடத்தும் தேர்த்திருவிழா போல பரபரப்பும் வேகமும் காணப்படும். அரசியல்வாதிகள் ஒவ்வொரு தேர்தலிலும் அள்ளி வழங்கும் வாக்குறுதிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலவற்றை செய்து முடிப்பதும் அதற்கு மேலதிகமாக வார்த்தைகோர்த்து அறிக்கை விடுவதும் நாமறிந்த சமாச்சாரம்.

தொழிலாளர்கள் என்றால் எதிர்க்கேள்வி கேட்காத கூட்டம் என்றுதான் இதுவரை மலையக சமுதாயத்தினர் தமது தலைமைகளால் நோக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி யதார்த்த அரசியலை விளங்கிக் கொண்டு சிந்தித்து செயற்படும் தூர நோக்குள்ளவர்களாக அந்த மக்கள் மாறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்கப் போகும் மிகத் தீர்க்கமான வரலாற்றின் மிகத் தேவையான தேர்தலுக்கு மக்கள் முகங்கொடுக்கப் போகின்றனர். தேர்தல் காலங்களில் பொய்முகங்களோடு நடமாடிய அரசியல்வாதிகளுக்கும் உண்மையான, நேர்மையான சேவை உள்ளம்கொண்ட அரசியல்வாதிகளுக்கும் தாம் யார் என்பதை சொல்லப்போகும் தேர்தல் அண்மித்திருக்கிறது.

பெரும்பாலான மலையகத் தலைவர்களைப் பொருத்தவரையில் தேர்தல் என்றவுடன் இந்தமுறை மக்களுக்கு என்ன சொல்லலாம்? என்ன வாக்குறுதியளிக்கலாம் என பல மாதங்களுக்கு முன்பிருந்தே சிந்திக்கத் தொடங்கியிருப்பார்கள்.

மக்களின் பலவீனத்தைப் பலமாகப் பயன்படுத்தும் தலைமை

எது எவ்வாறாயினும் மக்களின் பலவீனத்தை தலைவர்கள் தமது பலமாக பயன்படுத்துவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

எந்தப் பிழைக்கும் துணைபோகாமல் எந்தப் பிணியையும் தாங்கிக்கொள்ளும் தொழிலாளர் சமுதாயத்தை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதை தலைவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக தேர்தல் காலத்தில் மதுவுக்கு குறைவிருக்காது. எந்தத் தலைவர், "மதுவை முற்றாக ஒழிப்போம். எமது மதுவே எமது முதல் எதிரி" எனக் கோஷமிட்டாரோ அதே தலைவர் மதுவைக் காட்டி மக்களை ஏமாற்ற முனைவது போன்ற செயற்பாடுகளை இங்கு கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.

வீதிகளைச் செப்பனிடுவதும், கோயிலுக்கு ஒலிபெருக்கி வழங்குவதும், இளைஞர் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்குவதுமே அதிகமான மலையக அரசில்வாதிகளின் 'அரும்பணி' களில் முதலிடம் பெற்றவையாக இருக்கும். மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் எந்தவொரு காத்திரமான சேவையையும் இதுவரை அவர்கள் வழங்கியிருக்க மாட்டார்கள். ஏன், அதைப் பற்றி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

* தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக் கோரிக்கைக்கு யார் செவிசாய்த்து நியாயமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தார்கள்?

* மலையகத்தில் அதிகரித்துவரும் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க யார் முழுமையான செயற்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்?

* மலையகத்தில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அதற்கான ஏற்பாடுகளை யார் செய்தார்கள்?

* சுகவீனமுற்றவர்களை அவசரமாக நகர வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்ல எத்தனை தோட்ட வைத்தியசாலைகளில் நோயாளர்காவு வண்டிகள்(அம்புலன்ஸ்) உண்டு?

* மலையகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை உண்டு என்பதை யார் உறுதிப்படுத்திச் சொல்வார்கள்?

* தமது சொந்த இடங்களில் தொழில்புரிய முடியாமல் தலைநகரத்தில் கூலித்தொழிலில் ஈடுபட்டிருக்கும் படித்த இளைஞர்களுக்குத் தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதா?

* பயங்கரவாதிகள் என்ற பெயரில் பூசா சிறைச்சாலை உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலைகளில் வாடும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இதுவரை விசாரிக்கப்படாமைக்கு - விடுவிக்கப்படாமைக்கு யார் பதில் சொல்லப்போகிறார்கள்?

* அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து தமிழர்கள் துன்பப்படுவதை எப்படி நியாயப்படுத்தப் போகிறார்கள்? -

இவை போன்ற சில பிரதானமான கேள்விகளுக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களும் அவர்களுக்குத் தலைமை வகிப்பவர்களும் நிச்சயமாக பதில் சொல்லித்தானாக வேண்டும்.

வேஷமிட்டு மக்களை ஏமாற்றும் ஜாலம்

தோட்டமொன்றுக்குச் சென்று மக்களுடன் சிரித்துப்பேசி, சின்னக்குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சி, முத்தமிட்டு வேஷமிடும் தலைவர்கள், மக்களுடைய கோரிக்கைகளை எழுத்துவடிவில் வாங்கி, இதைச் செய்வோம் அதைச் செய்வோம் எனப் போலி வாக்குறுதிகள் வழங்கி மக்கள் அபிலாஷைகளை அடக்கி ஒடுக்கும் வழமையை இந்த முறையாவது தவிர்த்துக் கொள்வார்களா?

சமுதாயத்தின் மீது தார்மீகப் பொறுப்புடன் செயற்பட்டு நியாயமான அரசியலில் ஈடுபட்டிருந்தால், உண்மையில் மலையக சமுதாயம் என்றோ அத்தனை துறைகளிலும் முன்னேறி மிளிர்ந்திருக்கும்; சுபிட்சமடைந்திருக்கும்.

மக்களின் தேவை அறிந்து, மக்கள் சேவையுடன் அரசியலில் ஈடுபடும் நல்ல தலைமையை மட்டுமே இன்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்தத் தலைமைத்துவத்தை வழங்கி வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மலையக சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் தலைவர்களை மலையகம் இருகரம் குவித்து வரவேற்கத் தயாராகவே இருக்கிறது.

அவர்கள் பின்னால் அணிதிரள மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அவ்வாறான தலைமைகளை இந்தப் பொதுத் தேர்தல் காலத்தில் எதிர்பார்க்க முடியுமா? இது கேள்விக்குறிதான்.

மக்களின் இயலாமையைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முனையும் எந்தத் தலைமையும் மலையக வரலாற்றுக்குப் பதில்சொல்லத் தானே வேண்டும்?

- என்.அஞ்சனா

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.