Tuesday, February 09, 2010

2 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலை இடம்பெயர்ந்து சாதாரண மக்கள் போல் வாழமுடியவில்லை

யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த முதலாமாண்டு மாணவர்கள் இருவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழ் பல்கலைக்கழகத்தையும் கல்வி சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் விக்டர் அருள்தாஸ் மற்றும் திருவிழி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இருவரும் இருபாலையில் உள்ள தமது உறவினர் வீடு ஒன்றுக்கு இன்று காலை சென்ற பின்னர் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றினுள் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளனர்.

இவ் முடிவுக்கு முன்னர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் தாம் போர்க் காலத்தில் பலதை இழந்துள்ளோம் தற்போது சாதாரண மக்கள் போல் எங்களால் வாழ முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்கிளில் ஒருவர் போர்க் காலத்தில் சிறீலங்கா படையினர் வீசிய எறிகணையில் தனது அவயவம் ஒன்றை இழந்திருந்தவர் எனத் தெரிவித்துள்ள அவரது பிற சில நண்பர்கள், வருவாய் அற்று அகதி முகாமில் முடங்கியுள்ள தமது பெற்றோரை எண்ணி இவர்கள் என்றும் கவலைப்பட்ட வண்ணம் இருந்ததாகவும், தாம் எவ்வளவு காலத்துக்கு நிவாரணங்களையும் கொடுப்பனவுகளையும் நம்பி கல்வி கற்க முடியும் என தம்மிடம் ஏக்கம் கலந்த நிலையில் உரையாடியதாகவும் தெரிவித்துள்ளனர்.

விக்டர் அருள்தாஸ் வன்னி இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் இயங்காத நிலையில் வவுனியா தடுப்பு முகாமில் இருந்து கல்வியைத் தொடர்வதற்காக யாழ் பல்கலைக்கழகம் சென்றவர். ஆரம்பத்தில் உதவிகள் குவிந்தபோதும் தற்போது அவை சிறிது சிறிதாக குறைந்து வருவதால் தமது கல்வி வெகுவிரைவில் இடைநிறுத்த வேண்டி வரும் என அவர்கள் கவலை வெளியிட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மிகப் பெரும் மனித அவலத்தின் பின்னர் கல்வியை தொடரும் மாணவர்கள் பலர் இவ்வாறான மனநிலையில் இருப்பதை இச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளதுடன் இன்னும் பல மாணவர்கள் பண ரீதியான இக்கட்டில் இருப்பது பெரும் ஆபத்துக்குரிய விடயமாகியுள்ளதும் இதன் மூலம் வெளிப்படையாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள பல்கலை மாணவர்கள், யாழ் கல்விச் சமூகத்தை காப்பாற்றி அவர்களின் தலையாய சொத்தை காப்பாற்ற இடம் பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு உதவ அனைவரும் முன்வந்து இவ்வாறான அநியாய இழப்புக்களை நிறுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.