தகவல்கள் அறியமுடியாது மக்களை இரகசிய இடங்களில் தடுத்து வைத்து துன்புறுத்தும் நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் அடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த விசாரணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நான்கு அங்கத்தவர்களை கொண்ட ஐ.நாவின் மனித உரிமைகள் விசாரணைக்குழு தனது 221 பக்க அறிக்கையில் சிறீலங்கா, சீனா, பாகிஸ்த்தான், ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் மக்களை இரகசிய இடங்களில் தடுத்து வைத்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தகவல்களை அறியமுடியாது மக்களை இரகசிய இடங்களில் தடுத்து வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் உள்ளது. விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற போரை தொடர்ந்து சிறீலங்கா இராணுவம் இரகசிய தடுப்பு முகாம்களை நடத்தி வருகின்றது.
இராணுவ உடையில் அல்லது பொதுமக்களின் உடையில் வரும் சிறீலங்கா படையினர் தமிழ் மக்களை எழுந்தமானமாக கைது செய்து வாரக்கணக்கில் இரகசிய இடங்களில் தடுத்து வைத்து வருகின்றனர்.
இவ்வாறான ஒரு இடம் கொழும்பின் கொல்பிட்டியில் காலி வீதிக்கு அண்மையாக உள்ளதாக துன்புறுத்தல்களுக்கு எதிரான சிறப்பு பிரதிநிதி தெரிவித்துள்ளார். அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்ச்சியா துன்புறுத்தப்பட்டே விசாரணை செய்யப்படுகின்றனர்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் என அவர்களை பலவந்தமாக ஒத்துக்கொள்ள செய்யும் நடவடிக்கை இது. 1992 ஆம் ஆண்டில் இருந்து இரகசிய முகாம்களில் மக்களை தடுத்து வைக்கும் அதிக அதிகாரங்களை சிறீலங்கா அரசு படையினருக்கு வழங்கியுள்ளது.
அவசரகாலச்சட்ட விதிகளில் 1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களில் மக்களை இரகசிய இடங்களில் தடுத்து வைத்திருக்க முடியாது. ஆனால் சிறீலங்காவில் அது தொடர்கின்றது. அங்கு துன்புறுத்தல்களும் நிகழ்கின்றன. குற்றவாளிக்குக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இராணுவத்தினராலும், காவல்துறையினராலும் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போகும் சம்பவங்கள், இரகசிய இடங்களில் தடுத்துவைக்கப்படுதல் போன்றவை தொடர்பாக குரல் கொடுத்து வருகின்றன.
சிறீலங்காவில் பலவந்தமாக மக்கள் காணாமல்போவது தொடர்பில் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பலவந்தமாக காணாமல் போவோர் தொடர்பான செயற்குழு அறிக்கை ஒன்றை 2008 ஆம் ஆண்டு அனுப்பியிருந்தது.
அதனை தொடர்ந்து சிறீலங்காவில் மக்கள் கடத்தப்படுவது, இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்படுவது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டிருந்ததும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.