Sunday, December 06, 2009

ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை - ம.ம.முன்னணி


ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதாக கடந்த வாரம் கருத்து வெளியிட்டிருந்த அக்கட்சி தற்போது இரு பிரதான வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதென்பது அடிமை சாசனம் எழுதுவதற்கு சமனாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக முன்னணியின் உயர்மட்ட அரசியல் குழுக்குழுக்கூட்டத்தில் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் அவர் உரையாற்றியபோது,

"ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய தரப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தி எமது சமூகம் சார்ந்த நலனுக்கான உரிமைகள் பற்றிய நிபந்தனைகளை முன்வைக்கவேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தனிப்பட்ட நலன் சார்ந்த முடிவுகளை எடுக்காமல் மலையகத்தமிழ் சமூகம் நலன்சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஆகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற இரண்டு முக்கிய தரப்புக்களுடன் எமது சமூக நலனை முன்னிலைப்படுத்தி நிபந்தனைகளை முன்வைத்துப்பேசுவதோடு அதன் முடிவுகள் மக்களால் அங்கீகரிக்கப்படும் பட்சத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்" என்றார்.

இதேவேளை, மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பெ.இராதாகிருஸ்ணன், தமது கட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குவதாக கடந்த வாரம் ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.