Saturday, December 12, 2009

தலைவர் வே.பிரபாகரன் மற்றும் பொட்டம்மானின் மரணத்தை இலங்கை, இந்தியாவிடம் உறுதி செய்துள்ளது

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மானும் மரணமடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த உறுதிப்படுத்தல் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்று திரும்பிய ஜனாதிபதியின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரை உள்ளடக்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு முடிவுறுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கையின் ஆங்கில இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பிரபாகரனினதும் பொட்டு அம்மானினதும் மரணங்களை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை இலங்கையிடம் இந்தியா கோரியிருந்தது. இந்த கோரிக்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் மற்றும் அப்போதைய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கடந்த மே மாதத்தில் இலங்கை வந்திருந்த போது கோரியிருந்தனர்.

இதேவேளை குறித்த இருவரினதும் மரணங்களை உறுதிப்படுத்திய சான்றிதழ்கள் தமிழக பூந்தமல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணையை முடிவுறுத்தமுடியும் என இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான் உட்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் 26 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதில் நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரரிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.