Thursday, November 26, 2009

எனக்கு எதிராக மக்களைத் திருப்ப மஹிந்தவும் கோத்தபாயவும் முயற்சி: சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளரும் மற்றும் சிலரும் பாதுகாப்பு அமைச்சினரும் தனக்கு எதிராக செயற்படுகின்றனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பகிரங்கமாகக் குற்றஞ் சாட்டியுள்ளார். அத்துடன் மக்களைத் தனக்கு எதிராகத் தூண்டி விடும் முயற்சி இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்திச் சேவைக்கு செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பேட்டியில் முதற்தடவையாகப் பகிரங்கமாகக் கருத்துகளை வெளியிட்டுள்ள ஜெனரல் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

எனது வாழ்வின் முக்கிய தருணங்களாக அடுத்த 48 மணித்தியாலங்கள் அமையப் போகின்றன. இன்று எனது எதிர்காலத் திட்டத்தினை அறிவிப்பேன். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா, பாதுகாப்பு அமைச்சுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதா என்பது உட்பட அனைத்து விடயங்கள் குறித்தும் வியாழக்கிழமை அறிவிப்பேன்.

கடந்த வாரம் பதவியை இராஜிநாமாச் செய்தபின்னர் உடனடியாக என்னை எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுமாறு கேட்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்பு அமைச்சினரும், அதன் செயலாளர் ஆகியோரும் எனக்கு எதிராகச் செயற்படுகின்றனர். மக்களை எதிராகத் தூண்டி விடுகின்றனர்

அவர்கள் எனக்கு எதிராக அரசியல் ரீதியாக மாத்திரம் செயற்படவில்லை. நான் ஊடகங்களைச் சந்திப்பதையும் அவர்கள் விரும்பவில்லை. விடுதலைப் புலிகளை அழித்ததற்கான பெருமையை தாங்கள் எடுத்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். அவர்கள் மக்களை எனக்கு எதிராகத் தூண்டிவிட முயல்கின்றனர். ஓரளவிற்கு இதில் வெற்றி பெற்றுள்ளனர்.

நவம்பர் 22 ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து என்னை வெளியேறுமாறு கேட்டனர். இதுவரை வீடொன்றை என்னால் பெற முடியவில்லை. இதன் காரணமாகவே எனக்கு விருப்பமில்லாத போதிலும் இந்த வீட்டில் தங்கியிருக்கிறேன். என்னை வெளியார் போன்று நடத்துகிறார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனது பாதுகாப்பைக் குறைத்த பின்னர் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் எனக்கு 600 பேர் பாதுகாப்பு அளித்தனர். பின்னர் அதனை 25 ஆகக் குறைத்தனர். நான் எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் 70 ஆக அதிகரித்துள்ளனர்.
எனது வீட்டைப் பாதுகாப்பதற்கு 70 பேர் போதாது. எனது அலுவலகத்திற்கும் ஆட்கள் தேவை. பொது நிகழ்வுகளுக்குச் செல்லும் போது எனக்கு மேலதிக பாதுகாப்பு அவசியம்.

இராணுவத் தளபதி என்ற வகையில் இந்திய உயர் அதிகாரிகளுடன் நான் பல தடவைகள் தொடர்பு கொண்டிருக்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல உறவுகள் உள்ளன. இந்தியாவை நான் அதிகளவு மதிக்கின்றேன்.

நான் எப்போதும் ஊடக சுநத்திரத்தை மதிக்கிறேன். ஊடகங்கள் மக்களைப் பிழையாக வழி நடத்திய தருணங்களில் நான் அவர்களுடன் பேசி அதனைத் திருத்தினேன். நான் ஊடகங்களுக்கு எதிரானவன் எனச் சொல்வது வெறும் பிரசாரமாகும்.

இலங்கையர்கள் அனைவருக்கும் ஜனநாயக சுதந்திரத்தை வழங்குவதே எனது முதல் விடயமாக அமையும். இலங்கை ஊழலற்ற நாடாக மாறவேண்டும். நீதியான சமூகம், ஊடக சுதந்திரம், மத ஜனநாயகம், அயல் நாடுகளுடன் நல்லுறவு என்பவையும் முக்கியம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.