Monday, November 30, 2009

இளங்கோவனுக்கு நெடுமாறன் கடும் எச்சரிக்கை

இலங்கையில் நடைபெற்ற போரில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் சுவரொட்டிகளையும் கிழித்தெறிந்து ஈரோட்டில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பகிரங்கமாக நடத்திய காலித்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்ட இளங்கோவனைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட வேண்டிய முதலமைச்சர் கருணாநிதி அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்திருப்பது காலித்தனத்தை ஊக்குவிப்பதாகும்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவது சட்டப்படிக் குற்றமல்ல என மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை பல தீர்ப்புகள் வழங்கிய பிறகும் அவற்றைச் சிறிதும் மதிக்காமல் நடந்து கொண்ட இளங்கோவன் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தைச் செய்தவர் ஆவார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவன் உட்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட்டதற்கு ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் தலைமை செய்த தவறும் அதன் விளைவாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட கோபமுமே காரணமாகும். இதைக் கொஞ்சமும் உணராது இளங்கோவன் போன்றவர்களின் காலித்தனமான செயற்பாடு தமிழகத்தில் காங்கிரசை ஆழக் குழி தோண்டிப் புதைத்துவிடும் என எச்சரிக்கிறேன்.

பெருமைமிக்க பெரியாரின் பாரம்பரியத்திற்கும் தமிழ்நாட்டில் அரசியல் பண்பாட்டின் இலக்கணமாகத் திகழ்ந்த ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் நற்பெயருக்கும் இளங்கோவனின் செயல் பெரும் இழுக்கைத் தேடித் தந்துவிட்டது.

இத்தகைய செயல்களை அடக்காமல் கருணாநிதி வேடிக்கைப் பார்ப்பாரானால் மக்கள் முன் வந்து காலித்தனங்களை அடக்கும் நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.