"நாட்டின் சகல பாகங்களிலும் மாணவர்கள் சென்று சுதந்திரமாகக் கல்வி கற்கக் கூடிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளதை மாணவர் சமூகம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என கிழக்கு மாகாண முதலமைச்சர்ச சிவனேசதுரை சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாழைச்சேனை இந்துக் கல்லூரி வெளியீடான 'செவ்வாழை' சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சஞ்சிகையை வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே இந்த வேண்டுகோளை மாணவர்களிடம் அவர் முன் வைத்தார்.
பாடசாலை அதிபர் கே.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,
"பாடசாலையில் கல்வி பயில்கின்றபோது பரீட்சையில் சித்தியடைவதை மட்டும் மாணவர்கள் இலக்காக கொள்ளாமல் இணைப் பாடவிதானங்களான விளையாட்டு, கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, தலைமைத்துவப்பயிற்சி விவாதங்கள் போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும்,
ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரையும் பரீட்சைக்குத் தயார்படுத்துவதோடு அவர்கள் தமது சொந்த வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களையும் கற்பிக்க வேண்டும்.
மாணவர்களைச் சமூகத்தில் மதிக்கப்படுபவர்களாக மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதற்கு ஆசிரியர்களே வழிகாட்டியாக இருக்கவேண்டும்" என்றார்.
இவ்விழாவில் மாணவர்களின் வரவேற்பு நடனம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், எனப்பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதோடு 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
முதலமைச்சரைக் கெளரவிக்கும் வகையில் பாடசாலை அபிவிருத்தி சங்கம் வாழ்த்து மடல் ஒன்றை வழங்கியது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்குடா வலையக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தியும் விசேட அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். தங்கராஜா, உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.ஞானராஜா, கோரளைப்பற்று கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சின்னத்தம்பி ஆகியோர் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.