ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியா விலும் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற "பொங்கு தமிழ்" நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுஇலங்கை அரசுக்கும் இராணுவத் தினருக்கும் அவதூறை ஏற்படுத்தும் விதத்திலும், நாட்டுப் பிரிவினையைத் தூண்டும் வகையிலும் உரையாற்றினார்கள் எனத் தெரிவித்துத் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட வழக்கு விசாரணைகளில் இருந்து அந்த நான்கு எம்.பிக்களும் விடுவிக்கப்பட்டனர்.
யாழ். மாவட்ட எம்.பிக்களான செல்வராஜா கஜேந்திரன், கே.சிவாஜிலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, பி.அரியநேத்திரன் ஆகியோருக்கு எதிரான வழக்கிலேயே அவர்களை விடுதலை செய்யும் உத்தரவைக் கொழும்பு பிரதம நீதிவான் நிஸாந்த ஹப்பு ஆராய்ச்சி நேற்று விடுத்தார்.
பொலிஸ் மா அதிபர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அரசமைப்பின் 157 (அ) பிரிவு மற்றும் பயங்கரவாதச் சட்டத்தின் 2"பி" பிரிவு ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு நடவடிக்கையை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் ஆரம்பித்திருந்தனர். இவ்விடயம் தொடர்பில், இந்த எம்.பிக்களில் வெளிநாட்டில் இருந்த சிவாஜிலிங்கம் எம்.பியைத் தவிர ஏனையோரின் வாக்குமூலங்களைக் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் பதிவு செய்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட "பொங்கு தமிழ்" நிகழ்வு உரைகளைத் தாங்களே நிகழ்த்தியிருந்தனர் என்றும், பதிவில் உள்ளது தங்களது உரைகளே என்றும் ஓடியோ "கசெட்" மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த உரைகள் தொடர்பில் இந்த மூன்று எம்.பிக்களும் பொலிஸாருக்குத் தாங்கள் அளித்த வாக்குமூலங்களில் தெரிவித்திருந்தனர்.
எனினும், இந்த வழக்கு முன்னைய தவணையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தபோது, எம்.பிக்கள் நால்வர் சார்பிலும் ஆஜராகியிருந்த சிரேஷ்ட் சட்டத்தரணி கே.வி.தவராஜா பின்வரும் வாதங்களை முன்வைத்து வாதாடியிருந்தார்:
அரசமைப்பின் 157 ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கை இங்கு (நீதிவான் நீதிமன்றில்) நடத்த முடியாது. அப்பிரிவின் கீழான வழக்கு தனி நபருக்கு எதிரானதாயின் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும், குழுக்கள், கட்சிகள் போன்றவற்றுக்கு எதிரானதாயின் உயர்நீதிமன்றத்திலும் மட்டும்தான் நடத்த முடியும்.
வெளிநாட்டில் ஆற்றப்பட்ட உரைக்கு தண்டனை வழங்க முடியாது
அதேசமயம், தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் வழக்கை நடத்துவதாயின் அக்குற்றம் நாட்டுக்குள் புரியப்பட்டிருக்க வேண்டும். வெளிநாட்டில் இடம்பெற்ற உரை தொடர்பில் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் இந்த நீதிமன்றம் தண்டனை வழங்க முடியாது.சமாதான காலத்தில் இந்த எம்.பிக்கள் ஆற்றிய உரைக்காக இரண்டரை ஆண்டு காலம் கழித்து பொலிஸ் மா அதிபர் முறைப்பாடு செய்தமை வியப்பானது. அச்சமயம் நாட்டுக்குள்ளேயே பல இடங்களிலும் "பொங்கு தமிழ்" நிகழ்வுகள் இடம்பெற்றன. அவற்றில் உரைநிகழ்த்திய பலர் இன்று அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருக்க இந்த நான்கு எம்பிக்களுக்கு எதிராக மட்டும் வழக்கு விசாரணையை ஆரம்பித்திருப்பது பெரும் பாகுபாடாகும்.
மேலும், எமது கட்சிக்காரர்களான எம்.பிக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு வலிதான நேரடிச் சான்றுகளோ, சூழ்நிலைச் சான்றுகளோ, சாட்சியங்களோ இல்லை. தனியான முறையில் பதிவு செய்யப்பட்டவை என்று கூறப்படும் ஒலிப்பதிவு நாடாவில் மாத்திரம் தங்கி நின்று இக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமையால் அவற்றைத் தள்ளுபடி செய்யக் கோருகிறோம். இப்படி அவர் கோரியிருந்தார். இதனையடுத்து நேற்று குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தரப்பில் நீதிமன்றில் ஆஜரான அதிகாரி பின்வரும் விடயங்களைத் தெரிவித்தார்:
இந்த விடயம் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றோம். சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதிய நேரடியான வலிதான ஆதாரங்களோ, சந்தர்ப்ப சூழ்நிலைச் சாட்சியங்களோ இல்லை என சட்டமா அதிபர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் வாக்குமூலங்களை மட்டும் வைத்து அவர்களுக்கு எதிராகக் குற்றங்களை நிரூபிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. என்றார். இதனையடுத்து வழக்கைத் தள்ளுபடி செய்து நான்கு எம்.பிக்களையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிவான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.