Wednesday, November 04, 2009

சரத் பொன்சேகா மீதான விசாரணைகள் அமெரிக்காவில் இன்று நடைபெற ஏற்பாடு: முறியடிக்கும் முழு முயற்சியில் இலங்கை அரசு


இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, தற்போது வாசிங்டனில் தங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிடம், இன்று அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இந்த விசாரணைகளை நிறுத்துவதற்கு அல்லது அதனை முறியடிப்பதற்கு இலங்கை அரசு இராஜதந்திர ரீதியில் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.

ஆனால், அமெரிக்க அரசின் முக்கியஸ்தர்களோ இந்த விடயத்தில் எதையும் தெளிவாகக் கூறாமல் மௌனம் காத்து வருகின்றனர்.

சரத் பொன்சேகாவை விசாரிப்பது தொடர்பான தகவல்களை நாங்கள் உறுதி செய்யவுமில்லை. நிராகரிக்கவுமில்லை என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் மட் சன்ட்லெர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இயன் கெலி கருத்து தெரிவிக்கையில்,

இது குறித்த செய்திகள் எதனையும் நான் அறியவில்லை. இதனால் இது பற்றி கருத்து கூறமுடியாது. இது பற்றி உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களத்திடமே கேட்கவேண்டும் என்று செய்தியாளர் மாநாட்டில் இயன் கெலி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியை விசாரணை செய்வது குறித்து அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் கண்டனம் வெளியிட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அது குறித்தும் தான் அறிந்திருக்கவில்லை என இயன் கெலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுத்தக் குற்ற விசாரணைகள் இடம்பெற்றால் இது பற்றி எதனையும் தெரிவிக்க முடியாது. இது குறித்த நபரோ அல்லது குழுவோ முழுமையாக விசாரிக்கட்டும். அதுவரை கருத்து வெளியிட முடியாது என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சரத் பொன்சேகா மீதான அமெரிக்காவின் விசாரணையை இலங்கை அரசு உயர்மட்டம் உட்பட சர்வதேசமே பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

கிறீன் கார்ட்டை புதுப்பிப்பதற்கான விசாரணையாம்

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் சரத் பொன்சேகாவின் வதிவிட அனுமதியை (கிறீன் கார்ட்டை) புதுப்பிப்பது சம்பந்தமாக விசாரிப்பதற்காகவே இன்று சமுகமளிக்குமாறு கேட்டிருப்பதாக இலங்கை "புதிய கதை" ஒன்றை அவிழ்த்து விட்டிருப்பதாக வொய்ஸ் ஒவ் அமெரிக்காவின் புதுடில்லிச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள், சரத்தின் "கிறீன் கார்ட்" சம்பந்தமான விவரங்களைக் கேட்டறியும் விசாரணை ஒன்றை நடத்துவதற்காகவே இன்று பொன்சேகாவை திணைக்களத்துக்கு அழைத்திருப்பதாக இலங்கைத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா பிரஸ்தாபித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.