ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களை வெளியேற்றுவதற்கான முடிவு பிஜியின் இராணுவத் தலைவரான ஃபிராங்க் பைனிமராமா அவர்களால் அறிவிக்கப்பட்டது.
பசுபிக் தீவான பிஜியின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக அந்த இரண்டு நாடுகளையும் குற்றஞ்சாட்டிய அவர், அந்த நாடுகளின் இராஜதந்திரிகள் 24 மணிநேரத்தில் வெளியேற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையைச் சேர்ந்த நீதிபதிகள் குழு ஒன்றை பிஜியின் நீதித்துறை வெற்றிடங்களை நிரப்ப அந்த நாடு ஆட்சேர்ப்புச் செய்தது தொடர்பில் இந்த இரு நாடுகளுக்கும் பிஜிக்கும் இடையில் பிணக்கு உருவானது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது அரசியலமைப்புச் சட்டத்தை ரத்து செய்ததை அடுத்து, நீதித்துறையின் அனைத்து உறுப்பினர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இலங்கை நீதிபதிகள் பிஜிக்கு செல்வதற்கான தமது நகர்வுகள் குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாகவும், அவர்கள் சூவாவுக்கு செல்வதற்கான இடைத்தரிப்பு விசாக்கள் வழங்கப்பட மாட்டா என்று மறுத்ததாகவும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் மீது பிஜி குற்றஞ்சாட்டுகிறது.
இதனை மறுத்துள்ள ஆஸ்திரேலியா, இந்த நீதிபதிகள் பிஜியில் பணியாற்ற முற்பட்டால், பிஜியின் ஏனைய இராணுவ அரசாங்க அதிகாரிகளைப் போன்று இவர்களுக்கும் பயணத்தடை விதிக்கப்படும் என்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அது கூறியுள்ளது.
பிஜி தான் தற்போது செல்கின்ற பாதையில் இருந்து விலகாது என்று கொமடோர் பைனிமராமா அவர்கள் கூறியுள்ளார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.