அரசியல் பிரவேசம் குறித்து கடிதத்தில் எதுவுமில்லை
முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய முப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தமது இராணுவப் பதவிகள் அனைத்தையும் இராஜினாமா செய்திருக்கின்றார். அடுத்த மாதம் முதலாம் திகதியுடன் தாம் பதவி விலகுகிறார் என அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவரது அரசு மீதும் தாம் நம்பிக்கை இழந்துவிட்டார் எனத் தெரிவித்திருக்கும் ஜெனரல் பொன்சேகா, அமைச்சர்கள் பலர் தம்மை அவமரியாதை செய்துவிட்டனர் என்றும் குறைப்பட்டிருக்கிறார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவாலாக எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவார் என்று மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில் பொன்சேகா தமது இராணுவப் பதவியை இராஜினாமா செய்திருப்பது, அவரது அரசியல் பிரவேசத்தை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்தியிருக்கிறது என்று நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவி விலகல் கடிதத்தைப் பாதுகாப்புச் செயலாளர் ஊடாக நேற்று வியாழக்கிழமை அனுப்பிவைத்துள்ளார். ஜனாதிபதி மீதும், அரசின் மீதும் தனது நம்பிக்கை குறைவடைந்துள்ளது எனவும் அதனால் முப்படைகளின் பிரதான அதிகாரியாகத் தன்னால் தொடர்ந்தும் பணியாற்ற முடியாதுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தின் பிரதியை அவர் ஜனாதிபதி செயலகத்திற்கும் அனுப்பியுள்ளார். தமது மூன்று பக்கக் கடிதத்தில், இராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான அனுமதியைக் கோரியுள்ளதுடன் தாம் இராஜிநாமா செய்வதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார். எனினும் பதவியை இராஜிநாமா செய்தபின்னர் அரசியலில் பிரவேசிக்கும் நோக்கம் குறித்து சரத் பொன்சேகா எதனையும் தெரிவிக்கவில்லை.
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் தமக்குத் தொடர்ந்து பாதுகாப்புத் தேவை என்கிறார்.
பாதுகாப்புப் படைப்பிரிவின் உத்வேகத்தைத் தொடர்ந்து பேணுவதற்கு அரசுக்கும் முப்படைகளின் தலைமையதிகாரிகளுக்கும் வலுவான நம்பிக்கை அவசியம் என்பதையும் ஜெனரல் பொன்சேகா தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அரசுக்கும், தமக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் உள்ள மோதல்கள், மனக்கசப்புகள் காரணமாக இராணுவத்தில் காணப்படும் ஒழுக்கத்தின் உயர்வு குறைந்துவிடும் என்றும் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
அமைச்சர்களால் தமக்கு நேர்ந்த அவமரியாதைகள், அநீதிகள் குறித்தும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றின் காரணமாக டிசெம்பர் முதலாம் திகதி முதல் தான் தமது பதவியை இராஜிநாமாச் செய்கிறார் எனவும் தமது இராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்கவேண்டும் என்றும் பொன்சேகா குறிப்பிட்டிருக்கிறார்.
ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியை இராஜிநாமாச் செய்த பின்னரும் தமக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருக்கும் என்பதால் தனக்குரிய பாதுகாப்பை தொடர்ந்து வழங்குமாறும் கேட்டுள்ளார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சரத் பொன்சேகா 1970ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டவர். 2005ஆம் ஆண்டு டிசெம்பர் 6ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 18 ஆவது தளபதியாக இவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.